July 31, 2008

"என்னை மன்னித்து விடுங்கள்"- பணத்துக்காக பல்டி அடித்த ரஜினி

குசேலன் படத்தை நாளை பெங்களூரில் வெளியிட வேண்டும் என்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட வேண்டுமென்றால் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்று கர்நாடக ரக்க்ஷன வேதிகே எனும் அமைப்பு எச்சரித்திருந்தது. இதனை அடுத்து பணத்தை முக்கியமாக கருதும் ரஜினி குசேலனில் லாபம் சம்பாதிப்பதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஒக்கனேக்கல் குடிநீர் விவகாரம் தொடர்பாக சென்னையில் தமிழ் திரைப்பட சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது கன்னடர்களை தரக்குறைவாக ரஜினி பேசியதாக கூறி கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பு உண்டானது. இந்நிலையில் குசேலன் படத்தை கர்நாடாகவில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று கன்னட திரைப்பட சங்கத்தினருக்கு ரஜினி கடிதம் எழுதி இருந்தார். ஆனால் படத்தை வெளியிடுவதை, தடை செய்வதை நிறுத்துவதற்கு தங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று நடிகை ஜெயமாலா அதற்கு பதில் அளித்திருந்தார்.

இது தொடர்பாக கர்நாடக ரக்க்ஷன வேதிகே அமைப்பினர் பெங்களூரில் இன்று கூடி விவாதித்தனர். அப்பொழுது கன்னடர்களை தரக்குறைவாக பேசிய ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் இல்லை என்றால் எந்தச் சூழ்நிலையிலும் குசேலன் படத்தை பெங்களூரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இதனையும் மீறி குசேலன் படம் பெங்களூரில் திரையிடப்பட்டால் மிகப் பெரிய வன்முறை வெடிக்கும் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர். கூட்டம் நடந்த பெங்களூர் திரைப்பட சம்மேளன அரங்கத்திற்கு வெளியே கூடியிருந்தவர்கள் ரஜினிகாந்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு ரஜினி இன்று மாலை திடீர் பேட்டி அளித்தார். அதில், தான் தவறு செய்து விட்டதாகவும், எங்கே எப்படி பேசவேண்டும் என்பதை தெரியாமல் பேசிவிட்டதாகவும், இது சம்மந்தமாக கன்னட மக்களிடம் தகுந்த பாடம் கற்றுக் கொண்டதாகவும், எனவே கன்னட மக்கள் தன்னை மன்னித்து குசேலன் படத்தை பார்த்து, ரசித்து ஆதரவு தருமாறும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை பெங்களூரில் குசேலன் படம் திரையிடப்பட உள்ளது. சென்னை உண்ணாவிரத்த்தில் நரம்பு புடைக்க பேசிய ரஜினி இப்பொழுது வருமானத்துக்காக திடீர் பல்டி அடித்திருப்பது அவர் ஒரு கைதேர்ந்த நடிகர் என்பது நிரூபணம் ஆகி இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை உண்ணாவிரதத்தில் சத்யராஜ் பேசி உசுப்பேற்றியதால் தன்னை தமிழின பாதுகாவலனாக காட்டிக் கொள்வதற்காக ரஜினி பேசிய ஆவேசப் பேச்சை தமிழ் சமூகம் மறந்திருக்காது.
அந்தச் சம்பவம் நடந்தேறி சில மாதங்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில் தன்னுடைய கல்லாப் பெட்டியை நிரப்புவதற்காக கன்னடர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கும் ரஜினிகாந்தின் நடவடிக்கை அரசியல்வாதிகளை விட கேவலமானது என்று பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இந்த தமிழகமே புனிதமடைந்து விடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் செய்திருக்கும் இந்த ஒரு சின்ன விஷயமே அவர் எப்படிப்பட்ட கை தேர்ந்த அரசியல்வாதி என்பதை தெளிவாக்கி இருப்பதாக தமிழ் அமைப்புக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

2 comments:

kavi said...

5 கோடி ரூபாய் பணத்துக்காக 5 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை கீழே தள்ளி விட்டார் ரஜினி. தமிழ் மக்களின் பிரச்சனை பெரிதல்ல, தன்னுடைய பணம்தான் பெரிது என்பதை நிரூபித்து தான் எப்படிப்பட்டவர் என்பதை தமிழ் மக்களுக்கு புரிய வைத்து விட்டார். இனியாவது தமிழ் மக்கள் நடிகர்களை தூக்கி வைத்து கொண்டாடுவதை நிறுத்துவார்களா...

கவி

Manuneedhi - தமிழன் said...

சரியாகச் சொன்னீர் நண்பரே! எங்க நம்ம ஆளுங்க திருந்தப் போறாங்க! இந்த ரஜினி இல்லாட்டி என்ன? இன்னொரு இளையதளபதி-ங்கற போக்குத்தான் அதிகம் இருக்கு. நம்ம சந்ததிகள் காலத்துலயாவது மாற்றம் வருமான்னு பாப்போம் நண்பரே!