October 10, 2008

பட்டன் குடை

சில காட்சிகள், சில நிகழ்வுகள் சிலவற்றை நினைவுபடுத்தும். அவை மனதுக்குள் குதூகலத்தையும் வர வைக்கலாம் அல்லது மனதின் எங்கோ ஓர் மூலையில் வலியையும் ஏற்படுத்தலாம் அல்லது அதுவே நெருடலாகவும் இருக்கலாம். இப்படி எல்லோருக்கும்போல் எனக்குள்ளும் ஏற்பட்டவைகளைத்தான் இனி நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

நல்ல மழை! ஆம்! மழை என்றால் பேய் மழை. நான் பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கிறேன். காரணம், என்னோடு பள்ளிக்கு வருபவர்கள் அனைவருமே கையில் குடை வைத்திருக்கிறார்கள். ஆம், அந்த வயதில் பள்ளிக்கு குடை கொண்டுவந்தால் ஏதோ ஒரு பெரிய சாதனையாளன் போன்ற ஒரு தொணியில் நடைகூட மாறிப்போய்விடும். சிலர் மட்டும் கலர் கலராய் விற்கும் பாலித்தீன் கவர்களை, (எங்கள் கிராமங்களில் கொங்கானி என்று சொல்லப்படும்) மடித்து, புத்தகப்பையோடு கொண்டுவருவர். எங்கள் வீட்டிலிருந்த ஒரு குடையையும் என் அப்பா வெளியில் எடுத்துச்சென்றுவிட்டார். இன்னொரு குடையோ, கம்பி நீட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்துச்சென்றால் அனைவரும் சிரிப்பார்கள் என்று அடம் பிடித்து அழுதுகொண்டிருந்தேன். வெளியில் பார்த்தால் மழை விட்டிருந்தது. ஓ.... இதுதான் சமயம் என்று நினைத்து, அடுத்த மழை வருவதற்குள் பள்ளி சென்றுவிடலாம் என்று எண்ணி, கிளம்புகிறேன்.

திடீரெனச் சந்தேகம், போகும் வழியில் மழை வந்துவிட்டால்! சரி, அதற்கு அம்மாவிடம் "அம்மா நல்ல ஒரச்சாக்கு இருந்தா, மடிச்சுக் குடும்மா" என்கிறேன். "எப்படியும் இந்த வாரச் சந்தையில ஒரு கொடை வாங்கியாந்துருவம்யா" என அம்மாவும் ஒரு வழியாக என்னைச் சமாதானப்படுத்தி, வயல்களில் உரம் போட்டு, சுத்தமாகக் கழுவிக் காயவைத்து, மடித்து வைக்கப்பட்டு, இருப்பதிலேயே கொஞ்சம் 'பளிச்' என இருக்கும் ஒரு சாக்கை எடுத்து, கொங்கானி-யாக மடித்து,
"என் ராசா, என் தங்கம்.... எம்புட்டு சமத்துப் புள்ளயில… இந்தாடி, ராசா! தலையில போட்டுக்கய்யா, தூத்த விழுகுது" என அம்மா அந்தச் சாக்கை என் தலையில் போட்டு, புத்தகப்பையை நனையாமல் உள்பக்கமாக வைக்கச் சொல்லி வழியனுப்பினாள்.

பள்ளிக்கூடம் கிட்டத்தட்ட 2-3 கி.மீ இருக்கும். போகும் வழியில் சாக்கை மடித்துத் தலையில் போட்டுக்கொண்டால் யார் பார்க்கப்போகிறார்கள்? பள்ளிக்கு அருகில் சென்றதும் ஆவரைத்துறில் மடித்து வைத்துவிட்டு மாலை வரும்போது எடுத்து வந்து விடலாம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு புறப்படுகிறேன். காரணம் ‘படிப்பில் அவ்வளவு அக்கறை’ எனத் தவறாக நினைக்கவேண்டாம். பள்ளிக்குப் போகாவிட்டால் "முதுகுப்பட்டைத்தோலு பிஞ்சுரும்" என் அப்பாவின் இந்த ஸ்லோகம் என் காதுகளுக்குள் அவ்வப்போது ஒலிக்கத் தவறியதில்லை.

ஒரு வழியாக, நான் புறப்பட்டு எங்கள் ஊர் கண்மாய்க் கரை வழியாகச் சென்று கொண்டிருக்கையில், வயல் பக்கம் எங்கள் ஊர் "நொண்டி சுப்ரமணி" எருமை மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அந்தக் காட்சி என் கண்களை வெகுவாக உறுத்தியது. ஒரு பக்கம் வயிற்றெரிச்சல் வேறு. நான் அவரைப் பார்த்துக்கொண்டே செல்கிறேன். அவரும் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார். "தம்பி! நில்லுய்யா" என்று என் அருகே வருகிறார். நான் நிற்கிறேன். "இந்தா வச்சுக்க, எடுத்துகிட்டுப் போய்ட்டு, சாயந்தரம் கொண்டாந்து குடு" என்று தன் கையில் இருந்த பட்டன் குடையை நீட்டுகிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்து நிற்கிறேன். "அட! என்ன அப்படி முழிக்கிற, இங்கெ பாரு...இந்தா இருக்குல பட்டன், அத அமுக்குனா அதுவா விரிஞ்சுக்குரும், சுருக்கும்போது மாத்தரம் கொஞ்சம் சூதானமா சுருக்கோணும், இல்லாட்டி கண்ணு-காத கெடுத்துப்புரும் சரியா" என்றதும்,
"அப்ப ஒனக்கு" என்கிறேன்.

"எரவா மாடு மேய்க்கிறவனுக்கு எதுக்குய்யா பட்டன் கொடை? நீ படிக்கிற புள்ள....சரி சரி..அந்தக் கொங்கானிய எங்கிட்ட குடு, நீ கௌம்பு, பள்ளிக்கொடத்துக்கு நேரமாச்சு"
என் தலையில் இருந்த கொங்கானி அவர் தலையில் இருந்ததைப் பார்த்துக்கொண்டே நின்றேன்.

"தம்பி! கொடைய தூக்கிப்புடி, தூத்த தலையில் விழுகுது" என்றதும் சுதாரித்தவனாக, குதூகலத்தில் பள்ளிக்கூடத்தை அடைந்தேன். அந்தக் குடையை நான் வழி நெடுக சுழற்றிக்கொண்டே சென்றதில் என் கைகள் கொப்பளித்துப்போனதும், அன்று முழுவதும் ஒருவரைக்கூட என் குடையை தொடாமல் காவல் காத்ததும், வழக்கத்திற்கு மாறாக அன்று எனக்கு அடிக்கடி "நம்பர் ஒன்" வந்ததும், யாருக்கு 'நம்பர் ஒன்' வந்தாலும் என் குடையோடு அவர்களை அழைத்துச்சென்று, ஒரு "கொடைவள்ளல்" ஆனதும் இன்றும் என் மனதில் நிழலாடுகிறது.

ஒரு சில மாணவிகளுக்கு என் குடையைக் கொடுக்கும்போது மட்டும் எனக்குள் "சிலு சிலுவென குளிரடித்ததும்" எனக்குள் இன்றளவும் சிலிர்க்க வைக்கிறது. அப்போது எனக்கு பத்து அல்லது பதினோறு வயதிருக்கும்.

வீடு திரும்பிய நான் அன்று நடந்த அனைத்தையும் கதை கதையாய் என் அம்மாவிடம் சொல்லிச் சொல்லி அம்மாவை உறங்கவே வைத்துவிட்டேன். அன்று இரவு முழுவதும் எனக்கு பட்டன் குடை கனவுதான். வழக்கத்திற்கு மாறாக அதிகாலையில் எனக்கு முழிப்பு வந்து, "அம்மா! ஏம்மா நொண்டிச் சுப்ரமணிக்கி, நொண்டிச்சுப்ரமணி-னு பேரு?" அம்மாவுக்கும் பதில் தெரியாதவளாய், அது நொண்டி நொண்டி நடக்குதுல, அதான் அதுக்கு அப்படிப் பேரு" என்று சமாளித்தாள். ஆனால் அது நொண்டி நடப்பதில்லை, எல்லோரைப் போலவும் நன்றாகத்தான் நடக்கும். அந்த வயதில் அதுவரை எழாத சந்தேகம் எனக்குக் குடை கொடுத்தபிறகு எனக்கு எழுந்தது ஏன்? என இன்றுவரை தெரியவில்லை. ஆனால் இந்த சந்தேகத்தை யாரிடம் கேட்பது? எனது எந்தச் சந்தேகத்தையும் தீர்த்துவைக்கும் என் அப்பா இதையும் தீர்த்துவைத்தார். அவர் சொன்ன விசயங்கள் நூறு சதவிகிதம் அன்று புரிந்ததோ இல்லையோ, இன்றும் வலிக்கிறது. "தம்பி! அவன் நொண்டியெல்லாம் கெடையாது, நம்ம ஊருல மேலவீட்ல இன்னொரு சுப்ரமணி இருக்காருல, இவரு பேரும் சுப்ரமணிங்கறதால, கொழப்பமாகும்ல. அதுனால இவன நொண்டி சுப்ரமணி-ன்னு கூப்புடுறோம்.
"ஏம்ப்பா! அப்ப அந்த மேலவீட்டு சுப்ரமணிய நொண்டி சுப்ரமணி-ன்னு கூப்புடவேண்டியதுதானே?" என்றதும், "நீ கேக்கறது சரிதான், அவனுக்கு நான் பேரு வைக்கலடா, யாரோ வச்சுருக்காங்க, வச்சவங்க செத்துப்போய்ட்டாங்க! நம்ம அவன சுப்ரமணின்னே கூப்புடுவோம், மத்தவங்க மாதிரி நொண்டி சுப்ரமணி-ன்னு கூப்புடவேண்டாம், சரியா?" என்றார்.

என் கதாநாயகனை நொண்டி சுப்ரமணி என யார் அழைத்தாலும் எனக்கு நெடுநாள் கோபம் வரும். பிறகு நான் கல்லூரிக்குச் செல்லும் காலத்தில் "தம்பி! என என்னைப் பாசமாக அழைத்த சுப்ரமணி, அய்யா! என என்னை அழைத்தபோதுதான் எனக்குள் வலிக்க ஆரம்பித்தது. தாழ்ந்த சாதியினர் எனத் தள்ளி வைத்தது மட்டுமின்றி, அவர்களை ஊனமுற்றவர்களாக்கி வேறு இந்தச் சமூகம் ஒடுக்கி வைத்தததை எண்ணி வேதனைப்பட்டதுண்டு. ஆனால் நானே சுப்ரமணியிடம் "இனிமே என்னை அய்யா-ன்னு கூப்பிடக்கூடாது, தம்பி-ன்னே கூப்புடுங்க" எனச் சொன்னதை என் அப்பாவிடம் வந்து சொல்லி, என் அப்பா என்னை கட்டியணைத்துக் கொண்டது இன்னும் கண்களை ஈரமாக்குகிறது. பிறகு நான் எங்கள் ஊர் சுற்று வட்டாரத்தில், கீழ் சாதி என முத்திரை குத்தப்பட்ட அனைவரையும் என்னை "அய்யா-வுக்குப் பதிலாக, அண்ணன் என" அழைக்க வைத்ததால் நான் சந்தித்த பிரச்சினைகள், அடிதடிகள் ஏராளம். அதற்கு ஒரே உதாரணம் இன்றும் என் கிராமத்தில், சுற்றுவட்டாரத்தில் என்னை மட்டுமில்லை, இந்தத் தலைமுறையினரையும் "அண்ணன்" என்றுதான் அழைக்கிறார்கள் என்பது கண்கூடாகப் பார்க்க முடிந்த உண்மை. இப்படி ஒரு மாற்றம் வரவேண்டும் என்று எண்ணியெல்லாம் நான் அன்று செய்யவில்லை. அன்று எனக்குள் அப்படித் தோன்றுவதற்குக் காரணம், என் தந்தையின் வாழ்வில் அன்று நடந்த சில சம்பவங்கள், பிரச்சினைகள், நிகழ்வுகள்தான். இவையனைத்திற்கும் ஒரு சராசரித் தந்தையாக என் தந்தை இல்லாமல், எனக்கு முழு சுதந்திரம் தந்து என்னை ஆளாக்கிய என் அப்பாவும் இன்று இல்லை, என் குடை கொடுத்த அந்தக் "கொடைக் கதாநாயகன்" சுப்ரமணியும் இன்று இல்லை.
- நவநீ

No comments: