January 16, 2017

என் அம்மா !

இந்தச் சூழலில் இப்படியொரு தலைப்பில் எது வந்தாலும் சற்று குழப்பமாகத்தான் இருக்கும். ஆனால், இங்கே நான் பதிவு செய்ய இருப்பது "என் அம்மா'வைப் பற்றி. இதுவரையில் நான் சந்தித்த, அனுபவித்த, நெகிழ்ந்த, மகிழ்ந்த, அழுத, பிரமித்த.... இப்படி பல்வேறு விசயங்களை பதிவு செய்துள்ளேன். ஆனால், அதிகமாக என் அம்மாவைப்பற்றி நான் பதிவு செய்ததில்லை. அல்லது பதிவு செய்ய நினைத்ததும் இல்லை... காரணம் தெரியவில்லை. நேற்றிரவு அமெரிக்காவிலிருந்து என் அம்மாவை அலைபேசியில் அழைத்துப்பேசினேன். காரணம், சமீபத்தில் வெளியான "கத்திச் சண்டை" திரைப்படத்தை தமிழகத்தில் இருக்கும் என் அம்மா, தம்பிகள், தங்கைகள், குழந்தைகள் இப்படி குடும்பத்தோடு பார்க்கச் சென்றிருந்தனர். காரணம் நான் அதில் நடித்திருந்தேன். அனைவருடைய அலைபேசியையும் அழைத்து, வழக்கம்போல் (!) யாரும் எடுக்காததால், வழக்கம்போல் எப்போதும் எடுத்துப் பேசும் என் அம்மாவின் அலைபேசிக்கு அழைத்தேன்.

"அம்மா.... எப்படியிருக்கம்மா ?" (ஒருமை என நினைக்க வேண்டாம்... அதுதான் அழகு)

"அய்யா.... படம் பாத்தையா... சூப்பரா இருந்துச்சுய்யா... ஆனா! கடைசிவரைக்கும் ஒனக்கு பிரியாணி கெடைக்கவே இல்லையேய்யா.... அழுதுட்டேன்யா....

இதுதான் என் அம்மா.... (படத்தில் எனக்கு கடைசி வரை பிரியாணி கிடைக்காததுபோல் ஒரு நகைச்சுவைக் காட்சி)
 
நான் மட்டும் பிரமித்ததில்லை, என்னோடு எப்போதும் அல்லது எப்பொழுதாவது என் கிராமத்துக்கு வரும் என் அனைத்து திரையுலக, பள்ளி, கல்லூரி நண்பர்களனைவரும் பிரமித்து என்னிடம் 'என் அம்மா' பற்றி அடிக்கடி பகிர்ந்து கொள்ளும்போதுதான் என்னால் 'என் அம்மா' பற்றி உணர முடிந்தது.

என் அம்மாவை சிலர் வெகுளி என்பார்கள். சிலர் சிறந்த நகைச்சுவையுணர்வுள்ள, சுவாரசியமானவர் என்பார்கள். சிலர் மிகுந்த இரக்க குணம் உடையவர் என்பார்கள். இன்னும் சிலர் 'கோபமா? அப்படின்னா?' என கேட்கும் அளவுக்கு அதீத பொறுமை குணம் கொண்டவர் என்றெல்லாம் சொல்வார்கள்.

என்னை, 'அய்யா, தம்பி, அய்யாவு, பெரிய தம்பி, மூத்தவன், குட்டி, தக்காளி என.... இப்படித்தான் என் அம்மா, என் கிராமத்து உறவுகள், தோழமைகள்... ஏன்! என் தங்கைகளின் குழந்தைகள் உட்பட என்னை... அப்படித்தான் அழைப்பார்கள்.

"ஏம்மா ! எம்பேர சொல்லி கூப்பிட மாட்டேங்கிற"

பேரு சொன்னா பெலன் (பலம்) கொறஞ்சிரும்தான்ய்யா...

இதுதான் எனக்கு கிடைத்த பதில்.

நான் எங்கிருந்தாலும்... இரண்டு நாட்களுக்கும் மேல் அழைக்காவிடில்... என்னை தவறாமல் அழைத்துப்பேசும் என் அம்மா. என்னை மட்டுமில்லை என் குடும்பத்தில் அனைவரையுமேதான். என் அம்மாவின் ஒவ்வொரு அசைவிலும் ஒர் இராணுவ ஒழுங்கிருக்கும். என்னிடம் இருப்பதாய் என் தோழன் ஆம்பல் கென்னடி (இயக்குநர்) சொல்வார். ஒருவேளை என் அம்மாவிடம் இருந்து எனக்கு வந்திருக்கலாம்.

ஒருமுறை என் இளைய தங்கை கல்பனா "அண்ணே! அம்மா ஏதோ பேசணும்னு சொன்னிச்சு. கூப்பிடு" என்றாள். அழைத்தேன்.

"அம்மா ! சொல்லும்மா...."

"தம்பி! எனக்கு மொழங்கைய்க்கி மேல, தோள்பட்டைக்கி கீழ... கடுக்குதுய்யா !

நான் கொஞ்சம் படபடப்புடன்...

"அனுசுயாவுக்கு கால் பண்ணி, (என் மூத்த தங்கை - மருத்துவக்கல்லூரி பேராசிரியை) டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகச் சொல்லு, இல்லாட்டி நானே பேசுறேன்."

"சொல்றத கேளுய்யோவ்.... அதெல்லாம் எனக்கு ஒன்னுமில்ல... நீ பயப்படாத. எனக்கு... ம்ம்.. இந்த காதுல வச்சு, போனை எடுக்காமலே பேசுவாங்கள்'ல....."

சற்று குழுப்பத்துடன்... "என்னம்மா! சொல்ற.... புரியல"

"அதான்ய்யா... நீ, தம்பியெல்லாம் கார் ஓட்டும்போது போனை எடுக்காமலே, காதுல எதையோ தண்டட்டி மாதிரி வச்சுகிட்டு பேசிகிட்டே போவியளே அது என்ன....?"

"ஓ....ப்ளூ டூத்தா ?"

"ம்ம்... ஆமா! அது ஒன்னு வாங்கிக்குடுய்யா"

"சரிம்மா.. நான் வரும்போது வாங்கிட்டு வர்றேன், சரி.... யாருக்குமா அது?"

எனக்குதான்யோவ்....

கொஞ்சம் சிரிப்பை அடக்க முடியாதவனாய்... "ம்ம்.... சரிம்மா, வாங்கிட்டு வர்றேன். நீ டாக்டர போயி பாரு, நான் அனு'வுக்கு போன் பண்றேன்."

"நீ ஏண்டா தம்பி.... இன்னும் இப்படி வெகுளியாவே இருக்கே !

"என்னம்மா"

கை வலி'க்கி காரணம் புரியலயா ஒனக்கு?

"ம்ம்.... சொல்லு"

"ஓந்தங்கச்சிங்க ரெண்டு பேரும் போன எடுத்து எங்கிட்ட பேச ஆரம்பிச்சாளுகன்னா.... அய்யா ! மூணு மணி நேரம் பேசுவா மூத்தவ. நானும் இந்தக்கைய்ய மாத்தி, அந்தக்கைய்ய மாத்தி... வலி தாங்க முடியாம ஒரு வழியா பேசி முடிச்சு போனை அங்குட்டு அக்கடா'ன்ன வைப்பேன். எப்படித்தான் தெரியுமோ... கழுகுக்கு மூக்கு வேர்த்தமாதிரி ஓந்தங்கச்சி எளயவ ஆரம்பிப்பாய்யா... அடுத்து அவ போனை வைக்க அங்குட்டு ஒரு மூணு மணிநேரம். முடியலய்யா.... நானும் திட்டிக்கூட பாத்துட்டேன், வெக்கத்தெ விட்டு... பல தடவை சொல்லியும் பாத்துட்டேன். ம்ஹீம்... நடக்கலயே!"

ம்ம்..... ஒரு வழியாய் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, "அவங்க போன் பண்ணா நீ இனிமே எடுக்காத, அப்படியே எடுத்தா கொஞ்ச நேரம் பேசிட்டு வச்சுரு"

"எப்படிய்யா அப்படி இருக்க முடியும்? இங்கென ஒண்டிக்கட்டையா இருக்கேன். நான் போனை எடுக்காட்டி புள்ளைய பயந்துராதுகளா ?"

இதுதான் என் அம்மா.

நான் எப்போது அலைபேசியில் அழைத்தாலும் என் அம்மா என்னிடம் பேசுவதற்குள் எனக்கு முதலில் கேட்கும் குரல் என் அம்மாவின் செல்லப்பிள்ளைகளான வான்கோழிகள், கோழி-சேவல்கள், கிண்ணிக்கோழிகள், வாத்துகள் அல்லது ஏதாவது புதியதாய் அடைக்கலம் புகுந்துள்ள ஒரு ஜீவராசியாகத்தான் இருக்கும்.

ஒருமுறை அமெரிக்காவிலிருந்து அழைக்கிறேன். இந்தியாவில் அந்தி சாயும் நேரம்.

"தம்பி... நல்லாருக்கியாய்யா, விவேகா, புள்ளைங்கள்லாம் சும்மாருக்குகளா?"

"ம்ம்... எல்லாம் நல்லாருக்கோம்மா, நீ எப்படியிருக்கே, மருந்து மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்புடுறியா, டெய்லி காலைல நடக்குறியா?"

இப்படி சில மணித்தியாலங்கள் பேசிக்கொண்டிருக்கையில்.....

"ஏய்யா... அங்கென போறது யாரு? வெளிச்சம் தெரியல...." அங்கு யாரிடமோ என் அம்மா.

"தம்பி செத்த இருய்யோவ்... வெளி லைட்ட போட்டுட்டு வாரேன். உள்ள போன டவர் எடுக்காது" இது என்னிடம்.

நான் காத்திருக்கிறேன். என் அம்மா அங்கே யாருடனோ பேசிக்கொண்டிருப்பதை நன்றாக கேட்க முடிகிறது.

"ஏய்யா... யாரு... தம்பி நீங்களா? எங்கேப்பா இந்த மசண்டை நேரத்துல, இருட்டுல.. கால்'ள மிதியடிகூட இல்லாம எங்கே போறே?"

"இல்லம்மா... ஆடு கெடைல கெடக்கு... இன்னும் வீட்லருந்து சோறு குடுத்து விடல. அதான் சாப்புட போறேன்"

"அட... ஒனக்கென்ன புத்தியா மலுங்கிப்போச்சு ? புள்ளகுட்டிக்காரன்..... பூச்சி பொட்ட கெடந்து கடிச்சா ஓம்பொண்டாட்டி புள்ளயல யாரு பாப்பா? அட! இங்குட்டு வா.... இந்தா இப்படி திண்ணைல ஒக்காரு... சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்" அங்கு அவரிடம்.

என்னிடம்....

"தம்பி ! போனை வய்யிய்யா... இந்த கீதாரி தம்பிக்கி சாப்பாடு போடறேன். இந்த இருட்டுல சோத்துக்காக எம்புட்டுத் தூரம் போகும்... இங்கன சாப்புடட்டும். பொண்டாட்டி சாப்பாடு கொண்டு வந்தா தண்ணிய ஊத்தி வச்சா காலைல பழைய கஞ்சிக்கி ஆயிட்டுப்போகுது. நான் போனை வச்சிறன்யா... நீ ஒடம்ப பாத்துக்க. புள்ளையகிட்ட சனி, ஞாயிறுல பேசுறேன்."

இதுவும் என் அம்மா!
 
பொதுவாக நான், என் தம்பிகள் மற்றும் குடும்பத்துடன் சென்னையிலிருந்து எங்கள் கிராமத்துக்கு செல்கிறோம் என்றால், தென் மாவட்டங்களில் வசிக்கும் என் தங்கைகள் குடும்பத்துடன் கிராமத்தில் சங்கமித்து விடுவது வழக்கம். நாங்கள் கிளம்பியது முதல் வீடு சென்றடையும்வரை சுமார் 50 கி.மீட்டருக்கு ஒருமுறை அலைபேசியில் அப்டேட் செய்துகொண்டே இருக்கவேண்டும்.

"தம்பி ! மத்தியான சாப்பாட்டுக்கு வந்துருவியளாய்யா?"

"அம்மா ! நீ பேசாம ரெஸ்ட் எடும்மா, நைட் சாப்பாடு செஞ்சா போதும். நாங்க வந்து பாத்துக்குறோம்"

"ஆடும் கதவும் நிகராம்" பள்ளிப் பிராயத்தில் வாசித்திருக்கிறேன்.

எப்படித்தான் தெரியுமோ? என் கிராமம் செல்லுமுன், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள காளையார்கோவிலில் மகிழ்வுந்துகளை நிறுத்தம் செய்வது வழக்கம்.

"காளையார்கோயில் வந்துட்டீங்களாய்யா?"

"இப்பத்தான் காரை நிறுத்துனோம்மா. எதுவும் வாங்கணுமா?"

"எல்லாமே இருக்கு. வேனும்னா... பால் மட்டும் வாங்கிக்கிட்டு வாங்க. அய்யா... கருப்பன் பேரம்பேத்திய, பள்ளிக்கொடம் போற புள்ளகுட்டிய இங்குட்டு வருங்க... அதுகளுக்கு எதாச்சும் திம்பண்டங்க கொஞ்சம் வாங்கிட்டு வாங்க. கையப்பாக்குங்க.

"பாபு இருக்கானா?" (என் கடைசித்தம்பி).

"ஏம்மா ? அவன் கடைக்கி போய்ட்டான்....சொல்லு"

"இல்லய்யா... ஒங்கிட்ட காசு இருக்காதுய்யா..." (நான் சினிமா வாய்ப்பு தேடி அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து சிரமப்படுகிறேன் என்பதில் என் அம்மாவுக்கு மிகுந்த வலி)

"நீ சொல்லும்மா.... நான் வாங்கிட்டு வாரேன்"

"நீ... வாங்க வேணாம். பாபுகிட்ட சொல்லி.... மறக்காம முருகனுக்கும், சுந்தரம் மாமாவுக்கும் முடிஞ்சா தண்ணிகிண்ணி (சரக்கு) வாங்கிட்டு வாங்க"


பால், தயிர், மாலைகள் (என் தந்தையின் கல்லறைக்கும்..... கூடவே கோயில்களுக்கும்), அம்மா சொன்ன மேற்படி சோமபானங்கள் சகிதமாக, ஒருவழியாய் வீடு வந்து சேர்வோம்.

வந்ததும்.... காரை விட்டு இறங்கியதும் முதன் முதலில் என் (எனக்கு மட்டுமே) இரு கன்னத்திலும் என் அம்மா தரும் "இரு முத்தங்கள்"..... அவை போதும்....ஆயுள் கூடும்....

ஒரு வழியாய்... அனைவரும் அசெம்பிள். என் அம்மாவின் சமையல் கலை கட்டும். மேற்படி கருப்பன் பேரன் பேத்திகள், சுந்தரம் மாமா, முருகன், மாப்பிள்ளை, மச்சான், சித்தப்பா.... அனைவரும் என் வீட்டு வாசலில் சங்கமம்.....

தெரிந்தும் தெரியாததுபோல்... என் மருமகள்கள் மூலமாய்... எங்களுக்கு வரவேண்டிய என் அம்மாவின் அனைத்து நொறுக்குத்தீணிகளும், சோமபானத்திற்கு சொகுசு சேர்க்கும்.

எங்களனைவரையும் சாப்பிட வைத்து, நடுநிசியில் உறங்கச் செல்லும் என் அம்மா உறங்கப்போகும் நிசப்தத்தை நானறியேன். திடீரென வெண்கலப்பாத்திரங்களுக்கு ஈயம்பூசுவதுபோல் ஏதோ சத்தம் கேட்டு, புரண்டு படுக்கையில் என் அம்மா அடுப்பாங்கரையில் ஏதோ செய்து கொண்டிருப்பது மட்டும் எனக்கு கனவுபோல் வந்து செல்லும்.

ஸ்லோமோஷனில் வரும் ஒலியலையைப்போல்.... என் சகோதரச்சேவல்களின் 'வேக்-அப் அலாம்' என்னை உசுப்பி விடும். ஒரு வழியாய் டீ, காபி, குழந்தைகளனைவருக்கும் தேவையான பால், செர்லாக், ஹார்லிக்ஸ், பூஸ்ட்..... பிறகு, அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி பரிமாறப்படும். இட்லி, பொங்கல், தோசை, உப்புமா, குறைந்த பட்சம் ஒரு நான்கு வகை சட்னிகளோடு, சாம்பார் தயாராகி நடுவில் என் அம்மா பரிமாற அனைவரும் சாப்பிடும் அழகு அற்புதம்.

ஆனால்....

எனக்கு மட்டும் அவை எதுவுமே என் அம்மா தர மாட்டாள்.....

"தம்பி வாடா.... வந்து ஒக்காந்து... சேந்து சாப்புடு" இது என்னை அம்மா அழைக்கும் குரல்

வர்தா புயலாய் நான் வர..... வழி விட்டு அனைவரும் விலகி உட்கார.....

சுடு கஞ்சியும், பழைய சாதமும், சின்ன வெங்காயமும், பச்சை மிளகாயும், அளவோடு கலந்த உப்பும், கடைந்தெடுத்த மோரில் மூழ்கிக்கிடக்கும் ஒரு குண்டா எனக்காக காத்திருக்கும்.....

குண்டாவுக்குத் துணையாக.....

உறித்து கழுவிய சின்ன வெங்காயம், வத்தல், கூழ் வடகம், ஊறுகாய், புளி-மிளகாய் (கோஸ்-மல்லி), உப்புக்கண்டம், கருவாடு, மிதுக்க வத்தல், மோர் மிளகாய், கத்தரி வத்தல், பாவைக்காய் வத்தல், கொத்தரை வத்தல்..... இத்தனையும்......

கூடவே... நேற்று அல்லது முந்தாநாள் வைத்த பழைய (மீன் - புளிக்) குழம்பும் அதைச் சாப்பிட ஒரு சிறு டேபிள்ஸ்பூன்....

இதைவிட வேறு எனக்கு என்ன வேண்டும்..... எனக்குத் தெரிந்தவரை இதுதான் சொர்க்கம்.


இது என் அம்மா(வின் கைவண்ணம்) ஸ்பெஷல்....


இப்படி என் அம்மா பற்றி எழுத எவ்வளவோ இருக்கிறது.....

நான் ஏழு வயதில் முதல் ஏர் பூட்டி என் வயலில் உழுவதை ரசிக்க ஏழு மணிக்கே சாப்பாடு கொண்டு வரும் என் அழகு அம்மாவை...

நடவு நடும் தலித் மகளிரின் செல்லக்குழந்தைகளையெல்லாம் வயல் வெளியில் மதிய சாப்பாட்டிற்கு பேர் சொல்லியழைக்கும் பாசத்திற்குரிய சிக்கலம்மாவை... (என் அம்மா பிறந்த ஊர் சிக்கல்-நாகப்பட்டினம்)

மழையில் யார் நனைந்தாலும் தன் முந்தானையில் துவட்டும் என் அம்மாவை....

என் அம்மாவின் பீரோவில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகு கைத்தறி சேலைகளை....

எப்போது என் கிராமத்திற்கு சென்றாலும்... நான் விரித்துக்கொள்ள, போர்த்திக்கொள்ள தரும் என் 'அம்மாவின் மணம்' மாறாத புடவைகளை......

கோபமாய் கத்துவதாய் கத்தி.... பிறகு கூப்பிட்டு கோழியடித்து சாப்பாடு போடும் என் அம்மாவின் அதீத பாசத்தை....

யார் வந்தாலும்... காபி, டீ போட்டுக் கொடுக்கும் ஒரு தேநீ(னீ)ர் தாயை....

மறக்காமல் அனைவரையும் அலைபேசியில் அழைத்துப் பேசும் அன்புத்தாயை....

அமுதசுரபியாய் அனைவருக்கும் பரிமாறும் அமுதசுரபியை...

ஆடு, கோழி, மாடு, மரங்களின் பாசைகளைப் புரிந்த ஒரு தமிழச்சியை...

பழைய சோறை பக்குவமாய் பறிமாறும் 'பக்கா பெர்ஃபெக்ட் ஸ்பெஷலிஸ்ட்'டை.....

மது குடிப்பதை வன்மையாகக் கண்டித்தபோதும், மகன்(ள்)களுக்கும், மகன்(ள்)களின் நட்பு-மகன்(ள்)களுக்கு மகத்தான 'சைட்-டிஷ்'ஐ செய்து தரும் மகத்தான தாயை....

"நீ... வீட்டுக்கு மூத்தவன்டா...." என அவ்வப்போது அறிவுரை சொல்லும் என் மூத்த சகோதரியை....

நான் கல்லூரியில் படிக்கையில்.... "ஒனக்கு என்ன வேணும்'மா என்றதும் "எனக்கு எதுவும் வேணாய்யா... நான் சாகுறதுக்குள்ள எனக்கு ஒரு பத்து பவுன் ரெட்டை வடம் சங்கிலி மட்டும் பண்ணிப் போட்டுருய்யா" (அம்மா பாசையில் : ஒரு குண்டுமணிகூட நான் வாங்கிக் குடுக்கல)

நான் அமெரிக்கா அழைத்துச் செல்லும்போது.... என் தந்தை பற்றியே புலம்பிக்கொண்டிருந்த ஓர் அற்புதமான என் தந்தையின் காதலியை.....

அமெரிக்காவில் எங்களோடு இருக்கையில்.... நீ செய்த குறும்புத்தனங்கள், அமெரிக்க நெடுஞ்சாலையில் விரைந்து செல்லும் கார்களை பார்த்து நீ "பறக்குறாய்ங்களேய்யா.... அப்படி எங்கேதான்யா போவாய்ங்கெ" என்ற உன் வெள்ளை உள்ளத்தை....

விவேகா அலுவலகம் சென்றாலும்... எங்களுக்கு சுடச்சுட நீ செய்து கொடுத்த நம்ம ஊர் மீன் குழம்பை....

கிராமத்தில் இருக்கும் உன்னையும், அமெரிக்க அலுவலகத்தில் இருக்கும் விவேகாவையும், சினிமா வாய்ப்புத் தேடி வடபழனியில் இருக்கும் நான் "கான்ஃபரன்ஸ்" செய்து பேச நினைக்கையில், அலுவலகத்தில் இருக்கும் மனைவி விவேகா, மிகவும் தாழ்ந்த குரலில் பேசும்போது உன் குரலையும் தாழ்த்திக்கொள்ளும் உன் வெகுளித்தனத்தை.... நீங்கள் இருவரும் பேசுவது புரியாமல் கடுப்பாகும் என் துர்ப்பாக்கிய சூழுலை....

நம் சூரகுடியில்.... நான் கேட்டும், முருங்கைக்கீரை சமைத்துத் தர மறந்துபோனதால்..... புலம்பித்தள்ளிய என் அம்மாவை.....

திரையரங்கின் வாசலில் உள்ள பேனரில் "நம்ம அண்ணன் போட்டோ எப்ப வரும்" என தம்பியிடம் கேட்கும் என் வெகுளித்தாயை....

நான் பாடிய "காவேரி பாடல்" ஒலிப்பதிவுக்கு அழைத்துச் செல்லவில்லை என்று கோபித்துக்கொண்ட என் மூத்த மகளை.....

என் அப்பாவை சினேகித்த ஆழத்தை என்னிடம் மட்டுமே பகிர்ந்துகொண்ட என் சினேகிதியை....

"பாவாடை தாவணியில்.... பார்த்த உருவாமா" - என் அப்பா... அம்மாவை திருமணம் செய்ய இயலாத நிலையில் பாடியதாய்... பகிர்ந்து கொண்டவளை....

பிறகு ஒரு வழியாய்... திருமணமானபின்...

இடதுசாரி இயக்கத்தில் தீவிரமாய் இருந்த என் அப்பாவின் நிழலாய், நிஜமாய், வெற்றியாய்.... இருந்த மார்க்ஸ் - ஜென்னியை....

என் மூத்த தம்பியின் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன் இறந்து போன என் தந்தையைப் பற்றிய துக்கத்தை சுமந்தவளானாலும்..... "பரவால்லடா, என் தாலி இறங்கியது இருக்கட்டும். அவளை தாலி கட்டி கூட்டிட்டு வாடா" என்று நடத்திக் காட்டிய என் வீரத்தாயை...

இப்படி... என் அம்மாவைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.... எழுதுவேன் !
 
எப்போது என் கிராமத்துக்குச் சென்றாலும்.... திரும்ப சென்னைக்கு கிளம்பும்போது என்னை தனியாக அழைத்து என் சட்டைப் பைக்குள் வலுக்கட்டாயமாய்.... குறைந்த பட்சம் ஒரு 2000 ரூபாயை திணித்து.... "செலவுக்கு வச்சுக்கய்யா" என்று கூறி என் இரண்டு கன்னங்களிலும் அழுத்தமாய் தரும் முத்தங்களின் ஏக்கத்தை.....

பிறகு... எல்லோருக்கும் வழக்கம்போல் முத்தங்கள் தந்து... வழியனுப்பும்போது....

"இன்னும் ஓங்கஷ்டம் தீரலயேய்யா....." என்று எல்லோரின் முன்னிலையில் என்னிடம் கூறுகையில்....

என் தம்பிகள், அவர்தம் மனைவிகள், தங்கைகள், குழந்தைகள்..... நகைச்சுவையாய்....

"அவனுக்கென்ன ! அவன் ஜாலியா லைஃப்-ஐ எஞ்சாய் பண்றான்" என்று சொல்ல....

என் அம்மாவும்.... நானும் பார்த்துக்கொள்ளும் அந்த கண்களின் பாசைகளை, வலிகளை நானும், என் அம்மாவையும் தவிர வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்....

...ம்ம்.... இதுவும் கடந்து போகும் !

நான்... ஒரு பணக்கார ஏழை.....


அம்மா ! இன்று உன் பிறந்த நாள்.....

உன்னுடைய பாசையில் உன்னை வாழ்த்துகிறேன்...

"நீ... தீர்க்காயிசோட.... நல்லா ஏழு தலைவாசல் கட்டி, மக்களோடும், மகிமையோடும் நல்லா, சிறப்பா வாழணும்"

நான் உன் மூத்த மகன்.... செல்ல மகன்.... தம்பி, அய்யா.... பெரிய தம்பி... வாழ்த்துகிறேன்.

"நீ என் செல்லம்மா.... "


"பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா"

No comments: