என்று மாறும் இந்த அவலம்??
ஒரு சினிமாவை எப்போது மனிதன் சினிமாவாகப் பார்க்கிறானோ அப்போதுதான் நமது தேசம் முன்னேறும். இன்றும் இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய பைத்தியக்காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இங்கு அமெரிக்காவில் 'சிவாஜி' பார்க்க வந்த அனைவருக்கும் ஒருவர் பொங்கல் வழங்கினார் என்றால் பாருங்கள்! திரைகடலோடியும் திரவியம் தேடச்சொன்னால், இவர்கள் தியேட்டர் வாசலில் பொங்கல் வழங்குகிறார்கள். படித்த மேதாவிகளே இப்படி என்றால், பாவம் பாமரன் என்ன செய்வான்?
காலையிலிருந்து இரவுவரைக் கணவனின் வரவை நோக்கி பற்றவைத்த அடுப்போடு காத்துக்கிடக்கும் மனைவி, தந்தையின் மடிபார்த்து தட்டோடு காத்துக்கிடக்கும் குழந்தைகளை விட்டு திரையரங்கு வாசலிலும், வானவேடிக்கையிலும் தன்னை மறந்து திரியும் தமிழா! உன்னுடைய வியர்வையை வெள்ளிப்பணமாக்கி உயர்ந்த சினிமா நட்சத்திரங்களையும், அரசியல்வாதிகளையும் என்று நீ புறக்கணிக்கிறாயோ! அன்றுதான் தரணிபோற்றும் தமிழ் மண்ணில் ஏழ்மை மறையும். ஃப்ளாட்பாரங்களில் வாழ்க்கை நடத்தும் எனதருமைத் தோழனே! அடை மழைவந்தால் குழந்தை குட்டிகளோடு, பெட்டி, படுக்கையோடு எங்கே ஒதுங்குவதென்று சிந்தித்தாயா? உயரத்தில் இருக்கும் கூட்டத்தை உயர உயர உயர்த்திவிட்டு என் தோழனே நீ பாதாளம் நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறாயே! என்று மாறும் இந்த அவலம்?
No comments:
Post a Comment