July 27, 2007

பதவியிலிருந்து ஓய்வு பெறும் அப்துல் கலாமின் பத்து கட்டளைகள்

வளரும் நாடாக இருக்கும் இந்தியா வல்லரசாக மாற,
10 கட்டளைகளைத் தெரிவித்தார் குடியரசுத் தலைவர்.


மக்களின் தேவைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வகையில் அரசு செயல்பட வேண்டும், அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையாக அமைய வேண்டும், லஞ்சம்-ஊழல் அறவே இல்லாத நிலைமை ஏற்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

5 ஆண்டு பதவிக்காலம் முடிவு பெறுவதை ஒட்டி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக உரை நிகழ்த்தினார்.

"நம் நாட்டின் நூறு கோடி இதயங்களையும் எண்ணங்களையும் இணைத்து, "நம்மால் முடியும்'' என்ற நம்பிக்கையை வளர்த்து, நாட்டை வல்லரசாக்குவதே என்னுடைய எஞ்சிய வாழ்நாளின் லட்சியம்.

குடியரசுத் தலைவராக நான் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளும் அழகானதாகவும், அடுக்கடுக்கான பல சம்பவங்கள் நிறைந்ததாயும் வேகமாகக் கழிந்தன. 2020-க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் நல்ல முயற்சியில் நாட்டு மக்களாகிய உங்களுடன் நானும் சேர்ந்துகொள்வேன்.

பதவி வகித்த ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் நன்கு ரசித்தேன். அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், சிறப்புக் குழந்தைகள் என்று பலதரப்பட்டவர்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் நான் கழித்த நாள்களை மறக்க முடியாது.

இந்தியாவை வல்லரசாக்க 10 அம்சங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

நகர்ப்புற மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் வாழ்க்கைத் தரத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது.

அத்தியாவசியமான பண்டங்களையும் சேவைகளையும் அனைவரும் பெறும் வகையில் சமத்துவம் நிலவ வேண்டும்.

மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள்களும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

அரசு நிர்வாகமானது மக்களின் தேவைகளை, விருப்பங்களைப் புரிந்து அவற்றை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

அரசின் நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். யாருக்கும், எதற்கும் சலுகை காட்டப்படுவதாக மக்கள் நினைக்கக் கூடாது.

அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவது போன்ற குறைகள் இருக்கக்கூடாது.

எல்லா வகையிலும் வாழ்வதற்குச் சிறந்த இடம் என்ற பெயரை நமது நாடு பெற வேண்டும்.

நம்நாட்டு அரசியல் தலைமையையும் மற்ற துறைகளில் உள்ள தலைமையையும் நினைத்து நாம் பெருமைப்படும் விதத்தில் அவை தங்களை மேலும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக, நமது தொன்மையான-பலதரப்பட்ட கலாசாரத்தையும் நாகரிகத்தையும் தொலைத்துவிடக்கூடாது. எதிர்கால சந்ததிக்காக அவற்றைப் பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

ஏழைகள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது தேசத்தின் செல்வச் செழிப்பை நாம் கணக்கிட வேண்டும்.

மொத்த பொருளாதார உற்பத்தி அளவு எப்படி உயர்ந்திருக்கிறது, மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி மேம்பட்டிருக்கிறது, பழைய மரபுகளை, பண்புகளை நாம் இன்னமும் எப்படி கட்டிக்காத்து வருகிறோம் என்பதையும் கணக்கிட வேண்டும்.

நம் நாட்டிலிருந்தே வறுமையை ஒழிக்க வேண்டும், படிக்காதவர்களே இல்லை என்ற வகையில் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், பெண்களுக்கும்-குழந்தைகளுக்கும் குற்றம் இழைக்கும் கொடுமைகள் மறைய வேண்டும்.

திறமைசாலிகளான அறிஞர்கள், அறிவியலாளர்கள், முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தேடிவரும் வகையில் நம் நாடு முன்னேற வேண்டும்.

அனைவருக்கும் கல்வி: சமூக, பொருளாதார வித்தியாசம் பாராமல் தகுதி வாய்ந்த எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் கல்வி பயில வாய்ப்பு தரப்பட வேண்டும்.

அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும்.

வேளாண்மை, தொழில், சேவைத்துறை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் 6 லட்சம் கிராமங்களுக்கும் அதிகாரம் அளிப்பதும், 7 ஆயிரம் மையங்களில் நகர்ப்புற வசதிகளை, கிராமங்களுக்கே கொண்டு செல்லும் மையங்களை (புரா) நிறுவதலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

முப்படையினர் தியாகம்: நமது ராணுவத்தின் முப்படையினரும் இரவிலும் கண்விழித்து நாட்டைப் பாதுகாப்பதால், நாமெல்லாம் கண்மூடி நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

சியாசின் பனி முகட்டில் குமார் முனை என்ற இடத்துக்குச் சென்றேன்; சிந்துதர்சக் நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் சாகசப் பயணம் மேற்கொண்டேன். ""சுகோய்-30'' ரக போர் விமானத்தில் படுவேகமாகப் பறந்து சென்றேன். இந்த 3 அனுபவங்கள் மூலம் நம்முடைய ராணுவ வீரர்களின் அறிவு, திறமை, உள்ள உறுதி, தியாகம், வீரம் ஆகியவற்றை நன்கு உணர்ந்துகொண்டேன்.

ஆப்பிரிக்க தொலைத்தகவல் தொடர்பு: ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதூரப் பகுதிக்கும் தகவல்-தொழில்நுட்பத்தின் நவீன பலன்கள் கிடைக்க, "அனைத்து ஆப்பிரிக்க ஈ நெட்வொர்க்'' என்ற இணையதள வசதியைச் செய்துதரும் இந்திய அரசின் திட்டம் மகோன்னதமானது.

இதன் மூலம் இந்தியாவின் 7 பல்கலைக்கழகங்களும் ஆப்பிரிக்காவின் 5 பல்கலைக்கழகங்களும், 17 சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், 53 தொலை-மருத்துவ மையங்களும், 53 தொலைக்கல்வி நிலையங்களும் இணைக்கப்படும்.

இந்தியாவின் பன்முகத்தன்மையும், கலாசார வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மக்களின் அருங்குணமும் எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

25 வயதுக்குக் குறைவான 54 கோடி இளைஞர்கள் வாழும் ஒரே நாடு இந்தியாதான்; இப்பூவுலகில் மிகப்பெரிய சொத்தாக இதையே கருதுகிறேன். இவர்களுக்கு நல்ல கல்வி, தலைமைப்பண்பு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து, நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும்' என்றார் கலாம்.

No comments: