- வி.ஏ.எம். அழகுமுத்து
''இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வாழ்க) இந்துஸ்தான் ஆஸாத் (இந்தியா சுதந்திரம்) நேதாஜிக்கு ஜே!' என்று நாங்கள் யுத்த முழக்கமிடும் போது... நேதாஜி பின்புறம் இரு கைகளையும் கட்டிக் கொண்டு பார்வையிட்டவாறே வருவார். முதல் இரண்டு முழக்கத்திற்கும் கையை உயர்த்துவார். நேதாஜிக்கு ஜே எனும்போது கையை உயர்த்த மாட்டார். அவருடைய குறுகுறுப்பான பார்வை. அதிர்ந்து பேசத் தெரியாத குரல், சுவாமி விவேகாநந்தருக்குப் பிறகு யாரையும் எளிதில் கவரக்கூடிய முகக் கவர்ச்சி. உடலை அசைக்காமல் அப்படியே முகத்தை மட்டும் திருப்பிப் படையினரைப் பார்வையிடும் தன்மை...'' இப்படி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த காலம் நோக்கி தன் நினைவைச் செலுத்திய வி.ஏ.எம். அழகுமுத்து, நா தழுதழுத்து, மீறி வந்த அழுகையைக் கொஞ்ச நேரம் மெளனித்து அடக்கிக் கொண்டார். சிறிது நேரம் தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர் நிமிரும்போது ''எனக்கு நேதாஜிதான் தலைவர். இப்ப எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஆனால், யாரையும் என்னால் தலைவர் என்று ஒத்துக் கொள்ளவே முடியாது'' என்று திட்டவட்டமாகக் கூறியவரிடம் இடைமறித்து,
''நீங்கள் இந்திய தேசியப் படையில் சேர்வதற்கான காரணம் பற்றியும் அதில் உங்களுடைய பங்கு, நேதாஜியின் நடவடிக்கையில் மறக்க முடியாத நிகழ்வு இதைப் பற்றி சொல்லுங்கள்'' என்றதும் நிமிர்ந்து இருக்கையின் நுனியில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
வி.ஏ.எம். அழகுமுத்துவின் தந்தை தேசப் பற்று மிகுந்தவர். அவர், வி.ஏ.எம். மிடம் காந்தி, நேரு, விவேகாநந்தர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரைப் பற்றியெல்லாம் கூறியிருக்கிறார். வி.ஏ.எம். அழுகுமுத்துவுக்குப் பத்து வயது நிரம்பும்போது தந்தை இறந்துபோக, கூலி வேலைக்குச் சென்று தனது தாயையும், தமக்கையையும் காப்பாற்ற வேண்டிய குடும்பச்சூழல். இந்தக் காலகட்டத்தில் இவர்கள் வசித்தது பர்மாவின் தலைநகர் ரங்கூனிலிருந்து 83வது கிலோ மீட்டரில் உள்ள 'தன்னாமீன்' எனும் இடத்தில். ஜப்பானியர்களிடம் இவரைப் போலவே இன்னும் ஏராளமான தமிழர்கள் கூலி வேலை செய்தவர்கள். எந்தக் குற்றமும் செய்யாத ஒரு தமிழரை ஜப்பானியப் படை வீரன் ஒருவன் அடித்துவிட, இவர்களுக்கு மேஸ்திரியாக வேலை செய்த 'ஐயர் சாமி' என்பவரிடம் முறையிட்டிருக்கிறார்கள். இதற்கு அவர் ''பயப்படாதீர்கள். அடுத்த வருடம் இதே நேரம் எந்த ஜப்பானியனும் உங்களை அடிக்க மாட்டான். அடிக்கவும் அவர்களால் முடியாது'' என்று கூறியிருக்கிறார். இதற்கு விளக்கம் கேட்டபோது, ''சுபாஷ் சுந்திரபோஸ் என்னும் மாபெரும் தலைவர் இந்தியாவில் பிரிட்டிஷாரின் கட்டுக் காவலில் இருந்து தப்பி ஜெர்மனை அடைந்து, அந்நாட்டின் சர்வாதிகாரியான ஹிட்லரோடு தோழமை கொண்டு, அங்கிருக்கும் இந்தியர்களைத் திரட்டி ஒரு படையை அமைத்து இந்திய சுதந்திரத்தை மீட்க இருக்கிறார். எனவே அவரை அங்கிருந்து ஆசியாவுக்கு அழைத்து வரும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது'' என்று பதில் வந்தது ஐயர்சாமியிடமிருந்து.
மேலும் ஐரோப்பா முழுவதும் ஜெர்மனியின் (ஹிட்லரின்) ஆதிக்கத்தில் இருந்தாலும் அங்குக் குடியேறி வாழும் இந்தியர்கள் மிகக் குறைவு. ஆனால் கிழக்காசியாவில் முப்பது லட்சம் இந்தியர்களுக்கு மேல் வாழ்கிறார்கள். ஜப்பானியர்களிடம் ஐம்பதாயிரம் பிரிட்டிஷ் இந்தியப் படைகள் கைதாகியிருப்பதால், அவர்களையும் இணைத்துக் கொண்டு இங்கு ஒரு பெரும் படையைத் திரட்டி, பிரிட்டிஷார் மேல் படையெடுக்கும் திட்டம் உருவாகி வருகிறது. அதைத் தலைமையேற்று நடத்த சுபாஷ் சந்திரபோஸ்தான் தகுதியானவர் என்பதால் அவர் விரைவில் இங்கு வர இருப்பதாகவும் மேஸ்திரியான ஐயர் சாமி என்பவர் கூறியிருக்கிறார். இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஆசியாவில் ஜப்பான் சீனாவின் ஒரு பகுதியைத் தனதாக்கிக் கொண்டதுடன், இந்தோ சீன நாடுகளையும், கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பர்மா போன்ற நாடுகளும், அந்தமான் நிக்கோபார் தீவுகளும் ஜப்பானியர் ஆதிக்கத்திற்குள் வந்திருந்தன. சீனாவின் பெரும் பகுதியையும், இந்தியாவையும், இலங்கையையும் தவிர, பிற ஆசிய நாடுகள் எல்லாம் ஜப்பானியர்களின் ஆளுகைக்குள் வந்திருந்தன. அடுத்த இலக்கு இந்தியா. இந்தியாவைத் தாக்குவது உறுதி என்று எல்லோரும் அறிந்திருந்தாலும், ஜப்பான் உடனடியாக அந்த வேலையைச் செய்யவில்லை. ஏனென்றால் சுபாஷ் சந்திரபோஸின் வருகைக்காகவே ஜப்பான் இந்தியாவின் மேல் தாக்குதல் நடத்தக் காலம் தாழ்த்துகிறது. அவர் இங்கு வந்தவுடன் ஜப்பானியரிடம் கைதாகியுள்ள ஐம்பதாயிரம் இந்தியப் படை வீரர்களையும், ஆயுதங்களுடன் ஒப்படைத்து எல்லாவித உதவிகளையும் செய்ய ஜப்பான் தயாராக இருப்பதாகவும், அப்போது எல்லோரும் சுபாஷ் சந்திரபோசின் சுதந்திரப் படையில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்று ஆயுதம் ஏந்த இருப்பதால் எந்த ஜப்பானியன் உங்களைத் தொட்டு அடிக்க முடியும்? என்றும் அவர் விளக்கியிருக்கிறார்.
வி.ஏ.எம். அழகுமுத்து போன்றவர்களுக்கு மேஸ்திரியான ஐயர் சாமி கூறிய இந்தச் செய்தி மகிழ்ச்சியை அளித்தது என்றாலும், ''எப்படி எதிரிகளை ஏமாற்றிவிட்டு ஜெர்மனியிலிருந்து ஜப்பானுக்கு வர முடியும்?'' என்ற சந்தேகக் கேள்விகளுக்கெல்லாம் அவர் பதில் கூறியிருக்கிறார். வி.ஏ.எம். இதற்கு முன்பு 'சுபாஷ் சந்திரபோஸ்' என்ற பெயரையே கேள்விப்படாதவராக இருந்திருக்கிறார். மேஸ்திரி சொல்லச் சொல்ல 'சுபாஷ் சந்திரபோஸ்' என்ற மாமனிதரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவல். இந்நிலையில் தண்டோரா போட்டு எல்லோரையும் பர்மியப் பள்ளிக் கூடத்தில் மாலையில் கூடி விட வேண்டும் என்று அறிவித்திருந்தனர். 150 பேர் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் டாக்டர் பரூவா, படாமியா ஆகியோர் ரங்கூன் சென்று திரும்பியதையும் ராஷ்பிகாரிபோஸ் தலைமையிலான 'இந்திய சுதந்திர லீக்கின்' கிளை ரங்கூன் தலைநகரான 'தன்னாபீனில்' நிறுப்பட்ட விஷயத்தையும் அதன் நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். அப்போது, 'சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனியிலிருந்து புறப்பட்டு ஏழு எட்டு மாதங்களாக நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து ஜப்பானை அடைந்து மன்னர் ஹிரா ஹிட்டோவையும், பிரதமர் டோஜோவையும் கண்டு பேசியிருக்கிறார். அங்கிருந்து சிங்கப்பூர் வந்து ராஷ்பிகாரி போஸ் தலைமையிலான 'இந்திய சுதந்திர லீக்கின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். கிழக்காசியாவில் உள்ள இந்திய மக்களை ஒன்று திரட்டி, ஒரு சுதந்திரப் படையை ஏற்படுத்தி இந்தியாவில் இருந்து ஆங்கிலேயரை விரட்ட இந்தியாவின் மேல் படையெடுக்கும் பணியைச் சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கி கிழக்காசியாவில் படை திரட்டிக் கொண்டிருந்தார். அவரது பணி தடங்கலின்றி நிறைவேற தன்னாபீன் தமிழர்களும் தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ''1943ம் ஆண்டு ஜூலை மாதம் சுபாஷ் சந்திரபோஸ் வந்து சேர்ந்தார். நான் மறுமாதமே அவரது இந்திய தேசியப் படையில் சேர்ந்தேன். அங்கு எனக்களிக்கப்பட்ட வேலை என்பது ஒற்றுவேலை. வேவு பார்ப்பதும், காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதும் தான் பிரதானமாகயிருந்தது. என்னுடைய ஆசை ஒருவாறு நிறைவேறி சுபாஷ் சந்திரபோஸைச் சந்தித்துவிட்டேன். அவருடைய அதிகாரம் இப்போதுள்ள முதலமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர் இந்த மூன்று பேருடைய அதிகாரத்தையெல்லாம் மிஞ்சியது. ஆனால் பார்வைக்கு மிகவும் எளிமையானவர். அதே நேரத்தில் கம்பீரமானவர். அவர் மேடையேறினால் கீழே ஜப்பானியப் படையினர் உட்கார்ந்திருப்பார்கள்.
சுபாஷ் சந்திரபோஸ் பதவியேற்கும்போது கண்ணீர் வடித்ததை நான் பார்த்தேன். ''இத்தனையாயிரம் வீரர்கள் நம்மை நம்பி வந்திருக்கிறார்களே. இவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்'' என்பதை நினைத்து அழுதார். அதே நேரத்தில் தமது சொந்த நாட்டில் அரசாங்கம் நடத்துவதைப் போல் துணிச்சலாக அரசு நடத்தினார். சுபாஷ் சந்திரபோஸ் முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது. நான் இரண்டே இரண்டு முறை மட்டுமே அவர் சிரித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு முறை நாங்கள் இருந்த முகாமுக்கு ஒரு சர்க்கஸ் கோமாளி வந்தான். அவனைக் கர்னலிலிருந்து அனைவருக்குமே நன்றாகத் தெரியும். தொழில் இல்லாததனால் அவன் அங்கு வந்தான். அவனுடைய ஆசை நேதாஜியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்பது. உள்ளே வந்தவன் 'என்னை யாராவது தூக்க முடியுமா?'' என்றான். ' அப்படி என்னைத் தூக்க முடியாவிட்டால் எனக்கு இரண்டு ரூபாய் தர வேண்டும். தூக்கிவிட்டாலோ நான் நான்கு ரூபாய் அவர்களுக்குத் தருவேன்'' என்றான். முதல் தடவை தூக்கிவிடலாம். இரண்டாவது முறை மூச்சைப் பிடித்து நின்று கொள்வான். இதை சுபாஷ் சந்திரபோஸ் தூரத்தில் நின்று பார்த்துவிட்டு மெளனமாகச் சிரித்தார். அந்தக் கோமாளி ஒரு கர்னலிடம் சுபாஷைப் பார்க்க விருப்பம் தெரிவித்தான். கர்னல் இதைப்போய் அவரிடம் சொன்னவுடன் அவனைக் கூப்பிட்டனுப்பினார். போனவன் ''என்னைத் தூக்குங்கள் பார்ப்போம்'' என்றான். மெளனமாகச் சிரித்த நேதாஜி அலக்காகப் பிடித்துத் தூக்கிவிட்டார். ''மற்றொரு முறை தூக்குங்கள் பார்ப்போம்'' என்றவனை தூக்கிப் பார்த்தார். இரண்டாவது முறை அவனைத் தூக்கவே முடியவில்லை. அப்போது அவர் பலமாகவே சிரித்ததைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். மற்றொரு முறை, பயங்கரமாகப் போர் நடந்து கொண்டிருக்கிறது. நமது ராணுவத்தினர் அணிவகுத்து நின்று போர் முழக்கம் செய்துவிட்டுத் தாக்குதலுக்குத் தயாரானோம். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் எங்களை நோக்கி வரும்போது, கர்னல் நேதாஜியைப் பார்த்து, பதுங்கு குழிக்குள் போய் விடும்படி கூறினார். அப்போது நேதாஜி ஒரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு, ''வெள்ளைக்காரர்கள் இன்னும் என் மேல் போடுகிற குண்டைத் தயாரிக்கவில்லை'' என்று சொன்னார். பெரும்பாலும் அமைதியாகவேதான் பேசுவார். எந்த நேரமும் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பார். பயிற்சிக்களத்திற்கு வந்தால், நேராக சமையல் அறைக்குச் செல்வார். தயாரித்து வைத்திருக்கும் உணவு வகைகளைச் சாப்பிட்டுப் பார்ப்பார். தண்ணீரைக் குடித்துப் பார்ப்பார். கடைசியாக ''தண்ணீரைக் கொதிக்க வைத்தீர்களா?'' என்று கேட்பார். ஒரு முறை பத்திரிகையாளர்கள் நேதாஜியிடம், ''ஜப்பான் படையினரைச் சேர்த்துக் கொண்டு இந்திய விடுதலைக்குப் போராடுகிறீர்கள். அதே ஜப்பானியர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்த நினைத்தால் என்ன செய்வீர்கள்?'' என்றார்கள். அதற்கு அவர் சொன்னார், ''வெள்ளைக்காரர்களைச் சுட்ட துப்பாக்கியை கையில்தானே வைத்திருக்கிறோம்'' என்றார். நேதாஜிக்கு ஜே! நேதாஜிக்கு ஜே! நேதாஜிக்கு ஜேதான். அடடா! அந்தக் காலம் மீண்டும் வராதா? அந்தக் கொந்தளிப்பிலும், பேரலையிலும் நீந்திக் குளிக்க மாட்டோமா? அந்தப் பெருமழையிலும், பெரும் புயலிலும் பூகம்பத்திலும் மகிழ்ச்சி பொங்க ஓடியாடி வினையாற்றும் பேறு கிட்டாதா? உருகியோடும் எரிமலை என்னும் தியாகக் குழம்பில் உருகி ஓட மாட்டோமா? மீண்டும் அந்தக் காலம் வராதா? அந்தத் தலைவன் போல் மற்றொரு தலைவன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கி தவிக்கிறேன்'' என்று முடித்தார் கண்களைத் துடைத்துக் கொண்டே.
சந்திப்பு - பி. நந்தகுமார்.
No comments:
Post a Comment