August 19, 2007

மாலனின் அரசியல்!

கடந்த வாரம் சிறீலங்கா பாஸ்போர்ட் பற்றி தமிழ் வலைப்பதிவுலகம் பற்றி எரிந்தது. இது பற்றி தமிழ் சசி அவர்கள் விரிவான பதிவு ஒன்று இட்டுள்ளார் மாலனின் அரசியல். அவர் இந்த பிரச்சினை பற்றி வாழ்வியல் மற்றும் அரசியல் கோணத்தில் மிக விரிவாக அலசி இருந்தார். எனக்கு தெரிந்த ஒன்றையும் இதன் மூலம் சொல்ல விரும்புகிறேன். சிறீலங்கா பாஸ்போர்ட்டில் ஒரு சிறப்பு இருக்கிறது. அது நம் யாருடைய பாஸ்போர்ட்டிலும் இல்லாதது. சிறீலங்கா பாஸ்போர்ட்டில் முகப்பு பக்கத்தில் தமிழ் இடம் பெற்று இருப்பது தான் அந்த சிறப்பு. உங்கள் பார்வைக்காக இதோ............................................

சென்னை பதிவர் பட்டறையில் மாலன் அவர்கள் வலைப்பதிவுகளில் நன்னடத்தை என்பது குறித்தும், ஈழத்தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்துக் கொள்வது பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.

மாலன் சிறந்த பத்திரிக்கையாளர், எந்தவித பந்தாவும் இல்லாதவர் என்ற காரணத்தால் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் சிறந்த, நன்கு அறிந்த பத்திரிக்கையாளர் என்பதால் அவர் முன்வைக்கும் "அரசியலை" எதிர்க்காமல் இருக்க முடியாது.

  • புதியதாக வலைப்பதிய வருபவர்களுக்கு மத்தியில் அவர் விதைக்க விரும்புவதை "அதிகபட்ச ஜனநாயகம்" இருக்கும் வலைப்பதிவுகளில் எதிர்க்காமல் எங்கு சென்று எதிர்ப்பது?
  • இந்தப் பத்திரிக்கையாளர்கள் பணியாற்றும் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியா எதிர்க்க முடியும்?
  • அப்படி வாசகர் கடிதம் எழுதினாலும் அதனை இந்தப் பத்திரிக்கையாளர்கள் வெளியிடுவார்களா?
  • அல்லது இது வரை தீவிரமான மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்களா?

நான் பள்ளியில் படிக்கும் பொழுது பொங்கல் சிறப்பு இதழாக ஒரு முறை புலம் பெயர்ந்த தமிழர் சிறப்பிதழ் என்ற ஒரு இதழ் வெளிவரும் என்று தினமணிக்கதிரில் அறிவித்திருந்தார்கள். அப்பொழுது தினமணிக்கதிரின் ஆசிரியராக இருந்தவர் மாலன் என்பதாக ஞாபகம். நானும் அந்த சிறப்பிதழுக்காக ஆவலுடன் இருந்தேன். வந்த பொழுது புலம் பெயர்ந்த சிறப்பிதழ் என்பது முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிரான இதழாக இருந்தது. அதைக் கண்டித்து நான் எழுதிய வாசகர் கடிதம் வெளிவரவேயில்லை.

ஆனால் இன்றைக்கு என் வலைப்பதிவு மூலமாக என் கருத்துக்களை கூற முடிகிறது. யாரையும் கேள்வி கேட்க முடிகிறது. ஒரு சாமானியனுக்கு இணையம் கொடுத்த இந்த ஜனநாயக உரிமை பலரின் கண்களை உறுத்துகிறது. இந்த ஜனநாயக உரிமையை முறிக்க அவர்கள் இணையத்தில் நன்னடத்தை என்பதை முன் வைக்கிறார்கள்.

இணையத்தில் பிரச்சனை இல்லை என்று நான் சொல்ல வில்லை. ஆனால் தமிழ் இலக்கிய சூழலிலும், தமிழக மற்றும் இந்திய வெகுஜன ஊடகங்களிலும் இருக்கும் பிரச்சனைகளை நோக்கினால் வலைப்பதிவுகளில் நடப்பது ஒன்றுமேயில்லை. ஆனால் அங்கெல்லாம் நன்னடத்தை வேண்டும் என யாரும் போதிப்பதில்லை.

எனக்கு முதன் முதலில் அறிமுகமான இலக்கிய சண்டை என்று சொன்னால் நான் பள்ளியில் படிக்கும் பொழுது சமுத்திரத்திற்கும், திலகவதிக்கும் இடையே நடந்த சண்டையை குறிப்பிடலாம். சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சமுத்திரம் பெண் எழுத்தாளர்கள் குறித்து உளறி வைக்க, திலகவதி நாங்கள் இப்படி பட்டவர்களை அடிக்க செருப்புகளை தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார். பதிலுக்கு திலகவதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமுத்திரம் தாக்க திலகவதி நீதிமன்றம் சென்று சமுத்திரம் என்னைப் பற்றி எழுதக்கூடாது என தடை உத்திரவு வாங்கியதாக ஞாபகம் இருக்கிறது.

அன்று தொடங்கி இன்று வரை தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் நன்னடத்தைப் பற்றி பேசுகிறவர்கள் இந்த இலக்கியவாதிகள் எப்படி "உதாரண புருஷர்களாக" இருக்கலாம் என்பது குறித்து இலக்கிய மேடைகளில் பேசலாம்.

இந்திய வெகுஜன ஊடகங்களின் நன்னடத்தைப் பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை. தயாநிதி மாறனை மைய அமைச்சர் பதவியில் இருந்து திமுக விடுவித்துக் கொண்ட பொழுது தினமலர் "கொசு தொல்லை ஒழிந்தது" என்பதாக தலைப்பு செய்தி வெளியிட்டது. தினகரன் அலுவலகம் மதுரையில் தாக்கப்பட்ட பொழுது "தஞ்சையில் எலிகளின் தொல்லை" என தலைப்பு செய்தி வெளியிட்டது. இதுவெல்லாம் ஒரு சில உதாரணங்களே. தனிமனித தாக்குதல் வெகுஜன ஊடகங்கள் முழுக்க நிறைந்து காணப்படுகிறது. அது மட்டுமா அப்பாவிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போக்கும் அதன் மூலம் அவர்கள் வாழ்வியலை சிதைக்கும் போக்கும் ஊடகங்களில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஹனீப் இவ்வாறே ஊடகங்களால் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டார். பின்னர் அவர் நிரபராதி எனக்கூறிய பொழுது அந்த ஊடகங்கள் சிறு மன்னிப்பு கூட கோரவில்லை. அடுத்த பரபரப்பு செய்திக்கு மாறி விட்டன.

இன்றைய வணிக மயமான ஊடகங்களுக்கு மத்தியிலே வலைப்பதிவுகளிலும், சிற்றிதழ்களிலும் தான் காத்திரமான பல நல்ல படைப்புகள் வெளிவருகின்றன. வெகுஜன ஊடகங்களில் நல்ல படைப்புகள் வெளிவருவது எப்பொழுதோ நின்று போய் விட்டது. வலைப்பதிவுகளில் சிரீயஸான விடயங்கள் மட்டும் தான் வர வேண்டும் என்ற கோட்பாடு தேவையில்லை. வலைப்பதிவுகள் அதன் இயல்பான பாதையில் பயணிப்பதே நல்லது. அந்த வகையில் மொக்கைகள்/கும்பிகள் தேவையற்றவை எனச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. வலைப்பதிவுகளில் அனைத்தும் கிடைக்கிறது. வருகின்ற வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறார்கள்.

வலைப்பதிவுகள் ஒரு மாற்று ஊடகம். ஒரு சிலர் வெகுஜன ஊடகங்களை ஆக்கிரமித்து கொண்டு தங்களை மட்டுமே எழுத்தாளர்கள் என்பதாக உருவாக்கி கொண்ட முறைக்கு எதிராக "எழுதுபவன் எல்லாம் எழுத்தாளனே" என்பதை உருவாக்கிய சமதர்மம் வலைப்பதிவு உலகம். இங்கு மொக்கைகளும் கிடைக்கும், நல்ல காத்திரமான படைப்புகளும் கிடைக்கும். இதற்கு இலக்கணங்களையும், கோட்பாடுகளையும், நியதிகளையும் யாரும் வடிவமைக்க தேவையில்லை.

அப்படி நியதிகளை வகுத்தாலும் அதை உடைப்பதில் வலைப்பதிவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஆனந்தம் உண்டு

No comments: