August 10, 2007

உதவும் கைகளும் கால்களும்

பிறப்பதற்கும், செத்துப் போவதற்கும் இடையே மனிதனுக்கு எத்தனை போராட்டங்கள், இலக்குகள், தோல்விகள், தற்காலிகமானதும், நிரந்தரமனாதுமான சந்தோஷங்கள்? இவற்றுக்கு மத்தியில் மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதற்கும், நேரம் ஒதுக்குவதற்கும் நம்மைப் போன்ற சாதாரண நடுத்தர வர்க்கத்தினரால் முடிவதில்லை.


பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் போடுவது, கோவில் உண்டியலில் பணம் போடுவது, திருப்பதியில் கால் கடுக்க வரிசையில் நின்று மொட்டை போடுவது என எதையாவது செய்து பாவங்களைப் போக்கவும், நிம்மதியை நாடவும் முயற்சிக்கிறோம். ஆனாலும், உலகம் survival of the fittest என்ற டார்வின் நியதின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அவனவனுக்கு வேண்டியதை அவனவன்தான் செய்துகொள்ள வேண்டும்; யாரும் யாரையும் தூக்கிவிடுவது இயற்கைக்குப் புறம்பானது என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வந்திருக்கிறது.


உதவுவதற்கான மனம் இருந்தாலும் பல பேருக்கு சூழ்நிலை அனுமதிப்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால்.. "காசு பணம் வேண்டுமானால் தரலாம். ஆனால், நம்முடைய நேரத்தை ஒதுக்கி சமூக சேவையில் ஈடுபட முடியாது" என்ற நிலைமை. இருந்தாலும், காசு கொடுத்தால் சரியாக, நேர்மையாகக் கையாண்டு வேலை செய்வார்களா என்ற சந்தேகம்
தவிர்க்க இயலாதது. சேவையை மட்டுமே மனதில் கொண்டு தம்முடைய வாழ்க்கையையின் முன்னேற்றத்தைக் காட்டிலும் பிறருக்காக நேரம் செலவிடும் மனிதர்களால் நடத்தப்படும் அமைப்புகளைப் பற்றிய செய்தி நம்மை வந்தடையாமலே நின்றுவிடுகிறது. ஒரு வேளை அவை தெரிய வந்தால் நமது பணமும், அவர்களது நேரமும் ஒன்றாகச் சேர்ந்து
சமுதாயத்திற்கு உதவட்டும் என நினைப்போம்.

அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுள்ள இரண்டு மனிதர்களைப் பற்றிய அறிமுகமே இந்தப் பதிவு.

முதலாமவர் தமிழர்.
இவரது பெயர் சிதம்பரநாதன். இளம்பிள்ளை வாதத்தில் இரண்டு
கால்களும் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் சுழல்கிற மனிதர்.

இவர் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல. தமிழ்நாடு ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கான அமைப்பு ஒன்றை 'Tamil Nadu Handicapped Federation Charitable Trust' என்ற பெயரில் நிறுவி அதன் தலைவராக இருந்து வருகிறார். வறுமையில் வாடும் ஊனமுற்றோருக்கு வேண்டிய சக்கர நாற்காலி, தையல் இயந்திரம் முதலிய உதவிகளை இந்த அமைப்பு செய்துவருகிறது. மேலதிக விவரங்களுக்கு கீழுள்ள சுட்டியைக் காணுங்கள்.

http://www.tnhfctrust.in/home.htm
http://www.chennaionline.com/health/hopeislife/08life10.asp

மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கிறது இவரது கதை. ஊனம் என்பது தடையல்ல என்பதை உணர முடிவதோடு ஒரு தனி மனிதனால் இவ்வளவு செய்ய முடியுமா என்றும் மலைப்பு உண்டாகிறது.

இந்த அமைப்பு செய்து வரும் பணிகளை நேரில் பார்வையிடவோ அல்லது தொலைபேசி மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளவோ விரும்பினால் கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்.

TAMILNADU HANDICAPPED FEDERATION CHARITABLE TRUST
NO.21 AA,
Earikarai Salai,
Kottur,Chennai - 600 085.
Tamilnadu, India
Ph : + 91 44 - 32927664
Fax : + 91 44 – 24405584

உங்களுடை நேரத்தையோ அல்லது பணத்தையோ இவர்களுக்காக சற்று ஒதுக்க முடியுமென்றால் மகிழ்ச்சி.

இரண்டாமவர் பெங்காளி.
பெயர் பார்த்தா பாக்சி (Partha Bagchi) 24 வயது வரை திக்குவாய் பிரச்சினையால் பெருத்த அவமானத்திற்கு ஆளாகி, அதன் பிறகு தானாகவே
பயிற்சி எடுத்து அந்தச் சிக்கலில் இருந்து விடுபட்டவர். "Stammering is not a
disease, it is a habit, bad habit indeed" என்று தனது சொந்த அனுபவத்தில் கூறுகிற இந்த மனிதர் தனக்கு உதவிய டெக்னிக் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி பிற திக்குவாயர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். இது குறையே கிடையாது. சராசரி மனிதனின் மூளையை விட வேகமாகச் சிந்திக்கும் மூளை சிலருக்கு அமைந்து விடுவதுண்டு. காட்டாறு போன்ற அந்த எண்ணத்தை வேகமாகக் கொட்டி விரைவாகப் பேசி முடிக்க நினைக்கிறவர்களுக்கு சிந்தனை-பேச்சு இரண்டும் வெவ்வேறு வேகத்தில் அமைந்து பேச்சில் தடுமாற்றத்தைத் தருகிறது என்கிறார். இது மருந்து மாத்திரைகளால் குணப்படுத்துவதற்கு வியாதியல்ல. மாறாக, மனவியல் சார்ந்த பிரச்சினை என்கிறார். இரண்டு வாரம் பெங்களூரில் தங்கி இவரது வகுப்புகளில் பங்கெடுத்தால் நிச்சயமான முன்னேற்றம் ஏற்படும். அதற்கு மேலும் சுயமாக பயிற்சி தொடர வேண்டும். After all, old habits die hard.

மேலதிக விவரங்களுக்கு. http://www.stammeringcurecentre.com

இந்த இரண்டு மனிதர்களையும் காணும் போது ஒன்று நமக்குப் புரிகிறது. குறைபாடு என்ற ஒற்றைக் காரணத்தினால் துவண்டு போகாமல், தமது சொந்த வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொண்டதோடு நின்று விடாமல், மற்றவர்களுக்கும் வழி காட்டுகின்றனர். இரண்டு பேருக்குமே ஆதரவான வாழ்க்கைத் துணை கிடைத்ததுதான் அவர்களுக்கு பெரும்
ஊக்க சக்தியாக இருந்து இயக்குவிக்கிறது என நான் கருதுகிறேன். தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இல்லாமல் கிடைக்கக் கூடிய நிபந்தனையற்ற அன்புக்கும், ஆதரவுக்கும், காதலுக்கும் அத்தகைய மகத்தான சக்தி இருக்கிறது. அந்த வகையில், உடல் ரீதியாக குறைபாடு இல்லாத எத்தனையோ பேர் மனதளவில் ஊனப்பட்டுக் கிடக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

இந்தப் பதிவினைக் காண நேரிடுகிறவர்களுக்கு சில வேண்டுகோள்கள்.

1. உதவ மனமும், பணமும் உள்ளவர்கள் திரு. சிதம்பரநாதன் அவர்கள் நடத்தும் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும். அல்லது அது பற்றிய தகவலை பிறருக்குத் தெரியப்படுத்தவும்.

2. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது பதட்டமாக தடுமாறிப் பேசினால் அவர்களிடம் Stammering Cure center குறித்து பக்குவமாகத் தெரியப்படுத்துங்கள். இந்தியா முழுவதும் இரண்டு கோடி திக்குவாயர்கள் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3. இனிமேல் சினிமாவில் ஊனமுற்றவர்கள், அரவாணிகள், திக்குவாயர்கள், சொட்டைத் தலையர்கள் பற்றிய ஜோக் எதாவது வந்தால், குறைந்த பட்சம் ஒரு தடவையாவது சிரிக்காமல் இருக்க முயன்று பாருங்கள்.
திருடர்களும், பிச்சைக்காரர்களும், ஜோசியக்காரர்களும் இல்லாத சமுதாயத்தை அமைப்பது மட்டும் நமது கடமையல்ல. சுய பச்சாதாபம் என்பது வேதனை கலந்த போதை. அதிலிருந்து சில பேரையாவது மீட்டெடுப்பதும் நமது கடமைதான்.

No comments: