August 22, 2007

"போங்கடா நீங்களும் உங்க தேசியமும்" பாமரனின் பகிரங்கக் கடிதம்!

‘Patriotism is the last resort for the Culprits.’ - மார்டின் லூதர் கிங்.
“என் தாய் நாடு இந்தியா…இந்தியர் அனைவரும் எனது உடன்பிறப்புகள்…” படித்துக் கொண்டே போனான் மகன். அவன் படிக்கப் படிக்க சிரிப்பு வந்தது.
இது கர்நாடக இந்தியர்களுக்குப் புரிபடவில்லையே என்று. காவிரி நீர் பங்கீடு குறித்த பிரச்சனை வந்தாலே போதும் நமது ‘தேசியக்’ கட்சிகளின் பாடு திண்டாட்டம்தான். கர்நாடகாவிலுள்ள காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக திரண்டு ‘சொட்டு நீர்கூட கொடுக்கக்கூடாது’ என்று போடுவார்கள் தீர்மானம். கர்நாடக காங்கிரஸ் சொல்வது சரியா…
தமிழக காங்கிரஸ் சொல்வது சரியா… இதில் எது சரி…? வாயே திறக்காது அவர்களது ‘தேசியத்’தலைமை.

ஜனதா தளம் மட்டும் சும்மாவா… ஐக்கியமோ… ஐக்கியமற்றதோ… யாருக்கும் குறைந்தவர்களா என்ன…? எடுத்துவிடு அங்கொரு அறிக்கை… இங்கொரு அறிக்கை… இது குறித்து இவர்களது தலைமையும் கப்சிப். இந்தத் ‘தேசியச்’ சிக்கலில் சிக்கிக் கொள்ள விரும்பாத மற்ற தலைமைகளோ… ‘நயாகரா நீர் வீழ்ச்சியைத் தமிழகத்திற்குத் திருப்பிவிட வேண்டும்…செவ்வாய் கிரத்தில் தண்ணீரைக் கண்டுபிடித்து தாமிரபரணியோடு இணைக்க வேண்டும்…’ என்றெல்லாம் அள்ளி வீசுவார்கள். காஷ்மீரிலுள்ள பண்டிட்டுகளுக்காக கண்ணீர் வடிப்பவர்கள் காவிரியையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்பது வேறு கதை. மொத்தத்தில் கேணையர்கள் நாம்தான். நமக்கு தேசபக்தியை டன் கணக்கில் ஊட்டோ ஊட்டென்று ஊட்டும் தேசிய ஒருமைப்பாட்டின் ஒட்டுமொத்த ஏஜண்டுகளோ இந்த விஷயத்தில் மட்டும் முக்காடு போட்டுக் கொண்டு ஓடி ஒளிந்து கொள்வார்கள்.ஆக இவர்களது தேசீயம்… ஒருமைப்பாடு… எல்லாம் தமிழகத்திற்கு மட்டும்தான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை வித்தியாசமானதொரு‘தேசிய ஒருமைப்பாட்டு’ பார்முலாவே வைத்திருக்கிறார்கள்.
பார்த்திபனாகட்டும்… அர்ஜுனாகட்டும்… விஜயகாந்த் ஆகட்டும்… முதலமைச்சர் என்றால் கடத்தப்பட வேண்டும். பிரதமர் என்றால் காப்பாற்றப்பட வேண்டும்… என்பதே அது. இந்திய விடுதலைக்காவே போராடிய வ.உ.சி.யை பற்றிப் படம் எடுக்கும்போதுகூட ‘கப்பலோட்டிய தமிழன்’ என்றே எடுத்தார்கள். ஆனால் டிராபிக் போலீசைத் தட்டிக் கேட்கிற கிழடுக்குப் பெயர் ‘இந்தியன்’.

போதாக்குறைக்கு ’40 லட்சம் தமிழர்கள் ‘பிணைக் கைதிகளாக’ கர்நாடகாவில் இருக்கிறார்கள்…பெருமூச்சையும் கொஞ்சம் மெதுவாக விடுங்கள்…’ என்கிற ரகத்தில் வேதம் ஓதுகிறார் படையப்பா. இது அரசு தூதரல்ல. தேவதூதரே போனாலும் தீர்க்கமுடியாத பிரச்சனை… ஆகவே 40 லட்சம் தமிழரின் பாதுகாப்புக்காக முறத்தால் புலி துரத்திய கூட்டம் வாயையும் மற்றதையும் மூடிக் கொண்டிருப்பது தான் தேசிய சேவை. அரசியலைப் பொறுத்தவரை… ‘தேசிய’ அரசியலில் குப்பை கொட்டி விட்டு மாநிலக் கட்சியானவைகளும் உண்டு… உள்ளூரிலேயே ஓணான் பிடிக்க முடியாத ‘ஜாம்பவான்கள்’ ‘தேசிய’ அரசியலை வெட்டி முறிக்கக் கிளம்பிய கதைகளும் உண்டு. ஆனால் அப்பாவித் தமிழர்களைப் பொறுத்தவரை… ‘தேசிய ஒருமைப்பாடு…’ ‘இறையாண்மை…’ என்பதற்கெல்லாம் அர்த்தமே வேறு. ஈழத்தைப் பொறுத்தவரை இலங்கையின் ‘இறையாண்மைக்குப்’ பங்கம் வராதவாறு உதை வாங்க வேண்டும்.

பம்பாயிலோ… கர்நாடகத்திலோ… என்றால் இந்தியாவின் இறையாண்மைக்கு எந்த பங்கமும் நேராமல் உதை வாங்க வேண்டும். எங்கு எவ்வளவு வாங்கினாலும் அங்கங்குள்ள அரசுகளின் இறையாண்மை பாதிக்கப்படாமல் வாங்கவேண்டும் என்பதே தேசபக்திக்கு அடையாளம்.

போங்கடா நீங்களும் உங்க தேசியமும்.
நன்றி: தீராநதி

1 comment:

தறுதலை said...

இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.

தனித்துவத்தை இழந்து, ஆங்கிலேயர்களிடம் இருந்து அடிமைப்படுத்தும் உரிமையை வாங்கிக்கொண்டவர்களின் ஆசைப்படி அடங்கி நடக்க வேண்டும். அதுதான் சட்டம். தேஸியம். லேகியம். போங்கடா போறம்போக்குகளா...

சட்டம், நீதி என்று வகுத்துக்கொண்டு அடிமைப்படுத்தும் உரிமையைப் பெற்றவர்கள் ஆட்டம் போடுவதை எதிர்த்து ஒரு பெரும் புரட்சியே வெடிக்க வேண்டும்.


-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது என் வாழ்க்கை.