August 28, 2007

லட்சுமண ஐயர்

இடுங்கிய கண்களில் எப்போதும் வழியும் கருணை... வார்த்தைகளில் அன்பின் கதகதப்பு... தொண்ணூறு வயதிலும் துவளாத கம்பீரம், வாழ்க்கை முழுதும் தீராத தியாகம்... இதுதான் லட்சுமண ஐயர்! கோபிச்செட்டிப்பாளயத்தில் இறங்கி, ‘‘ஐயர் வீடு எங்கே இருக்கு?’’ என்று யாரைக்கேட்டாலும், அந்தப் பழைய பிரமாண்டமான வீட்டின் முன் அழைத்துப் போய் நிறுத்கிறார்கள். பழைமையின் அழகில் மிளிரும் அந்த விசாலமான இல்லத்தில், தன் கடைசி மகனுடன் வசித்து வருகிறார் லட்சுமண ஐயர். ‘‘நம்மகிட்டே எதுக்குங்க பேட்டியெல்லாம்... காந்தியடிகளின் எளிமைக்கும் தியாகத்துக்கும் முன்னால நான் செய்கிற காரியங்களெல்லாம் ஒண்ணுமேயில்ல தம்பி..!’’ அடக்கமாக அவர் சிரிப்பதைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது. ‘‘எங்க அப்பா காங்கிரஸ்காரரு. ‘சுதந்திரப் போராட்டத்துக்கு நிறைய இளஞர்கள் தேவப்படுது. நாட்டுக்காகப் பாடுபடுடா’ன்னு பத்து வயசிலேயே என்னை விடுதலைப் போர்ல கலந்துக்க அனுப்பினார். 1933-ம் வருஷம் நடந்த முதல் சட்டசபைத் தேர்தல்ல, ராஜாஜி கட்சியில நின்னு ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆனாக அப்பா! அப்ப, இந்தப் பகுதிகள்ல கூட்டங்களுக்கு வரும் தலவர்கள் நம்ம வீட்டுக்கும் வருவாக. நேரு, நேதாஜி, வினோபாஜி, ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர், பெரியார், பக்தவசலம்னு எல்லா அரசியல் தலைவர்களும் இந்த வீட்டுக்கு வந்திருக்காக. அவங்ககூட அரசியல் கூட்டங்களுக்கு நானும் போவேன். ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துக்கிட்டதுக்காக என்னைக் கைது செய்து, வேலூர் சிறையில அடச்சாக. என் மனவி, மாமனார், மாமியார் எல்லாரும் ஜெயிலுக்குப் போயிட்டாக. வெளியில் வந்ததும், வார்தா போய்க் காந்தியடிகளைப் பார்த்தேன். ‘சுதந்திரத்துக்காகப் போராட நிறையப் ஆட்கள் இருக்காங்க. ஹரிஜனங்களுக்காக வேல செய்யத்தான் ஆள் இல்ல. நீங்க அவங்களுக்காகப் பாடுபடுங்க’ன்னு காந்திசொன்னார். அதன்படியே கோபிச்செட்டிப்பாளையம் திரும்பினதும், ஹரிஜன மக்களை அழைச்சுட்டுப் போய்ப் பொதுக்கிணற்றுல தண்ணீர் எடுத்தோம். மேல்சாதியச் சேர்ந்தவக எங்களத் தடுத்தாக. நான் நீதிமன்றம் போனேன். ரொம்ப நாள் வழக்கு நடந்தது.
கடைசியில் நான்தான் ஜெயித்தேன்’’ என்று கூறும் லட்சுமண ஐயர், இந்தியாவிலேயே முதன்முதலாககோபிச் செட்டிப்பாளயம் நகராட்சியில் மனிதர் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு எதிராகப் போராடி, அதை நீக்கியதற்காக தேசிய விருது பெற்றிருக்கிறார். தலித் மாணவர்களுக்காக இலவச ஐ.டி.ஐ. அநாதை இல்லம், மாணவர்கள் விடுதி ஆகியவற்றை இன்றக்கும் நடத்தி வருகிறார். வசதி இல்லாத, நல்லாப் படிக்கிற தலித் மாணவர்கள எங்க வீட்டு மாடியில் தங்கவெச்சுப் படிக்க வச்சேன். அந்த மூன்று பேரும் ஆசிரியர்களா ஆனாக. அப்புறம் ஹரிஜன மாணவர்களுக்குன்னு ஒரு ஹாஸ்டல் தொடங்கினேன். என் ஹாஸ்டல்ல படிச்ச பல பேர், பல்வேறு இடங்கள்ல இப்ப நல்ல பதவிகள்ல இருக்காக. தோட்டிகள எல்லாம் கூட்டிட்டு வந்து, ஊருக்குள்ள தனியா வீடுகள் கட்டிக்கொடுத்தேன். எங்களுக்கு, கோபியைச் சுற்றி மொத்தம் 650-ஏக்கர் நிலம் இருந்து. இந்தப் பக்கம் வைரவிழா மேல்நிலைப் பள்ளி, வேளாளர் ஹாஸ்டல், பழனியம்மாள் பள்ளி, டி.எஸ்.சாரதா வித்யாலயா, ஸ்ரீராமபுரம் ஹரிஜனக்காலனி, தோட்டிகள் ஹரிஜனக் காலனி, விவேகானந்தர் ஐ.டி.ஐ. எல்லாத்துக்கும் நான்தான் நிலம் கொடுத்தேன். கோபி டவுனில் மட்டுமே 40 ஏக்கர் நிலம் தர்மமாகக் கொடுத்திருக்கேன்’’ என்று சொல்லும் லட்சுமண ஐயருக்கு, இப்போ ஒரு சென்ட் நிலம் கூட சொந்தம் இல்லை. ‘‘பாதி தர்மமா கொடுத்தது. பாதி வியாபார நஷ்டத்துல போயிடுச்சு. இந்த வீடும் வங்கிக் கடன் பாக்கிக்காக ஏலத்தில் போயிடுச்சு. ஏலம் எடுத்தவுக என்னப் பத்திக் கேள்விப்பட்டு வீட்ட எனக்கே திருப்பிகொடுத்துட்டாக’’ என்று சிரிக்கும் லட்சுமண ஐயருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள். ‘‘பிள்ளைகளுக்குன்னு எதுவும் சேர்த்து வைக்காம, எல்லாத்தையும் காலி பண்ணிட்டோமேனு வருத்தமா இல்லையா?’’ என்றால், ‘‘அவுகளுக்கு வேணும்னா, தானே முயற்சி பண்ணிசம்பாரிச்சிக்க வேண்டியதுதான்’’ என்று சிரிக்கிறார். ‘‘என்னைப் பொறுத்த வரைக்கும் காந்தி கொடுத்த கடமைய நல்ல படியா செஞ்சுட்டோம்கிற திருப்தியும் சந்தோஷமும் இருக்கு’’ என்றவர், கம்பீரமான குரலில் உணர்ச்சிகரமாகப் பாடத்தொடங்கினார்...

‘‘தண்ணீர் விட்டோ
வளர்த்தோம்? சர்வேசா!
இப்பயிரைக்இ கண்ணீராற் காத்தோம்;
கருகத் திருவுளமோ!’’

No comments: