September 29, 2007

கோவை குண்டு வெடிப்பு அப்துல் நாசர் மதானி விடுதலை

கோவை குண்டு வெடிப்பு வழக்குத் தீர்ப்பு : தமிழகத்தின் கோவை நகரில் 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில், குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முதல் தண்டனை வழங்கத் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, 41 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அல்-உம்மா இயக்கத்தின் பாஷா, முகமது அன்சாரி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது
திமுகவின் முழு அடைப்புக்குத் தடை இல்லை : இதனிடையே, சேதுசமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் அக்டோபர் முதலாம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரியும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். முழு அடைப்புப் போராட்டம் அமைதியாக நடைபெறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, முழு அடைப்புப் போராட்டத்தைத் தடை செய்ய முடியாது என நீதிபதிகள் அறிவித்தனர்.
எச்ஐவி தொற்றிய தாயின் குழந்தை பராமரிப்பு யார் வசம்? வட இந்திய மாநிலமான ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியிருப்பதால், அவரது 9 வயது பெண் குழந்தையை அவருடைய பராமரிப்பில் விட முடியாது என்று அந்த மாநிலத்தில் இருக்கும் கீழ் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள் மத்தியில், இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. எச்ஐவி தொற்றை காரணம் காட்டி தங்களுக்கான அடைப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக இவர்களுக்கான குழுக்கள் குரல் கொடுத்தன. இந்த பின்னணியில் சர்ச்சைக்குரிய இந்த தீர்ப்புக்கு மேல் நீதிமன்றம் இன்று தடை விதித்திருக்கிறது. சர்ச்சைக்குரிய கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, எச்ஐவி தொற்றுக்கு உள்ளான பெண்கள் கூட்டமைப்பின் தலைவி பி.கவுசல்யா அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்
திருகோணமலை கடற்பரப்பில் கடுமையான மோதல் : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டைக் கடற்பரப்பில், இலங்கைக் கடற்படையினருக்கும், விடுதலைப்புலிகளின் அமைப்பின், கடற்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பெரும் மோதல் ஒன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 18 பேர்வரை கொல்லப்பட்டதாகவும் கடற்புலிகளின் 3 படகுகளை கடற்படையினர் நிர்மூலம் செய்ததாகவும், இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்
வவுனியா மற்றும் மன்னாரில் வீடுகள் கையளிப்பு : இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதாபிமான உதவிச் செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என இப்பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கென அமைக்கப்பட்டுள்ள 230 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கையளிப்பதற்காக வருகை தந்த பன்னாட்டு தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்இன்றைய (செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: