October 08, 2007

ஈழப் பிரச்சினையை மையப்படுத்தி பா.ஜ.க. வகுக்கும் புதிய வியூகம்

இராமரை வைத்து தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசை கலக்கிவரும் பாரதீய ஜனதாக் கட்சி தற்போது ஈழத் தமிழர்களுக்கான நிவாரண பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையில் குதித்துள்ளதால் மீண்டும் தமிழக அரசியலில் ஈழத் தமிழர் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பக்கோரி தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம், பாரதீய ஜனதாக் கட்சியின் ஈழத் தமிழருக்காக தமிழகத்தில் வீடு வீடாக நிவாரணப் பொருள் சேகரிக்கும் நடவடிக்கை, ஈழத் தமிழருக்கு உடனடியாக உணவுப் பொருட்களை அனுப்புமாறு கோரி புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் பேரணியென தமிழகமே சூடாகியுள்ளது.

அன்புக்குரிய பேரன்களான மாறன் சகோதரர்களின் பிரிவு, தனது தலைக்கே விலை வைத்துவிட்ட இராமர் பிரச்சினையென தள்ளாத வயதில் அல்லாடிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ஈழத் தமிழர் பிரச்சினையும் தீராத தலைவலியாக இம்சை கொடுக்கும் நிலையில் தற்போது அதனையே அவரின் எதிர்க் கட்சிகள் கையிலெடுத்துள்ளதால் பெரும் நெருக்கடி நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

இராமரை கற்பனையென கூறிய தனது நாத்திகத்தை காட்டமுயன்ற கருணாநிதி அதற்கு விலையாக தலையையும் தனது அரசையும் இழக்க வேண்டிய சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொண்ட போதிலும் அவரின் அரசுக்கெதிரான நெருக்கடிகள், சவால்கள், சதிகள், அனுமான் வாலாக நீண்டுகொண்டே செல்கின்றன.

இதில் தற்போது பா.ஜ.க.வின் ஈழத்தமிழருக்கான உணவு சேகரிப்பும் சேர்ந்துள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் பழ.நெடுமாறன் தலைமையில் ஈழத் தமிழருக்காக தமிழகத்தில் பெருமளவு நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை ஈழத் தமிழர்களிடம் கையளிக்குமாறு செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டபோதும் அதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. பல தலைவர்கள், கட்சிகள் வேண்டுகோள்களை விடுத்தபோதும் தமிழக அரசோ, மத்திய அரசோ அதனை கவனத்தில் எடுக்கவில்லை.

இந்நிலையில் அவற்றை உடனடியாக ஈழத்தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தி கடந்த மாதம் யாழ்.குடாநாட்டுக்கான படகுப்பயண போராட்டத்தை பழ.நெடுமாறன் ஆரம்பித்தபோது அவர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் மேற்கொண்ட சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், வைகோ போன்றோரின் வாக்குறுதிகளினால் கைவிடப்பட்டது.

ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பும் விடயம் தொடர்பாக இரு நாட்களுக்குள் பழ.நெடுமாறனுடன் நேரில் பேசுவதாக உறுதிகூறிய கருணாநிதி ஒரு மாதமாகின்ற போதும் இன்னும் பழ.நெடுமாறனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. பழ.நெடுமாறனுக்கு உறுதிகூறிய டாக்டர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன் போன்றோரும் இது விடயத்தில் மௌனம் சாதித்து வருகின்றனர்.

5 நாட்களாக தமிழகத்தை மட்டுமன்றி சர்வதேசத்தையும் தன் பக்கம் திருப்பிய பழ.நெடுமாறனின் போராட்டத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்த தமிழகத்தின் எதிர்க் கட்சியும் முன்னாள் இந்திய அரசுமான பாரதீய ஜனதாக் கட்சி தற்போது திடீரென ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்களாக நிவாரணப் பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பாரதீய ஜனதாக் கட்சியின் ஈழத் தமிழருக்கான நிவாரண பொருள் சேகரிப்பின் பின்னணி சகலருக்கும் தெரிந்தவிடயமாக இருக்கின்றபோதும் அதனால் கருணாநிதியின் அரசுக்கு நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதனாலேயே கருணாநிதியை எதிர்க்க இராமரை ஒருகையிலெடுத்த, பாரதீய ஜனதாக் கட்சி தற்போது ஈழத் தமிழரையும் மறுகையில் எடுத்துள்ளது.

இராமர் பிரச்சினையை பூதாகரமாக்கிய பா.ஜ.க. அதன் மூலம் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்குமிடையே முரண்பாடுகளை தோற்றுவித்தது. இதனை ஒரு கட்டத்தில் தனது வாயாலே ஒப்புக்கொண்ட கருணாநிதி, மத்திய அரசின் நடவடிக்கைகள் தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்திருந்தார். இராமர் பிரச்சினையால் கருணாநிதியின் அரசுக்கு எதிரான சில நிலைப்பாடுகளை காங்கிரஸ் எடுத்ததாலேயே கருணாநிதி இவ்வாறு கூறியிருந்தார்.

தற்போது பா.ஜ.க. ஈழத் தமிழர் பிரச்சினையை கையிலெடுப்பதற்கும் இதுதான் காரணம். ஈழத்தமிழருக்கு உதவும் விடயத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் இணங்காது என்பது பா.ஜ.க.வுக்குமட்டுமல்ல கருணாநிதிக்கும் நன்கு தெரிந்தவிடயம். பழ.நெடுமாறனின் உண்ணாவிரத போராட்டத்தைகூட மத்திய அரசு கணக்கிலெடுக்கவில்லை.

ஆனால், கருணாநிதியால் அவ்வாறிருக்க முடியவில்லை. பழ.நெடுமாறனின் போராட்டத்துக்கு பதிலளிக்காது விட்டால் தான் தமிழின விரோதியாகி விடுவேன் என்பது கருணாநிதிக்குத் தெரியும். அதேவேளை, இருதய நோயாளியான பழ.நெடுமாறனின் உயிருக்கு ஏதாவது நடந்துவிட்டால் அதன் பிரதிபலிப்புகள் தனது ஆட்சிக்கே வேட்டுவைத்துவிடுமென்பதும் கருணாநிதிக்குத் தெரியும்.

அதனாலேயே பழ.நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதில் முனைப்பாகவிருந்த கருணாநிதி இரு நாட்களில் பழ.நெடுமாறனுடன் பேச்சுகளை நடத்துவதாக பகிரங்கமாக அறிவித்ததுடன் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி மன்றாடினார். தனது விசுவாசிகள் மூலம் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடவும் செய்தார்.

இந்நிலையிலேயே பழ.நெடுமாறனின் உண்ணாவிரத போராட்டத்தின் பலாபலன்களை கூட்டிக்கழித்துப் பார்த்த பாரதீய ஜனதாக் கட்சி ஈழத் தமிழர் பிரச்சினையை கையிலெடுத்தால் கருணாநிதிக்கு சிக்கலை ஏற்படுத்தலாமென்பதை உணர்ந்துகொண்டதாலேயே தற்போது ஈழத் தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்களை எதிர்வரும் 11 ஆம் திகதி ஈழத் தமிழர்களிடம் கையளிக்குமாறு கூறி செஞ்சிலுவைச் சங்கத்திடம் பா.ஜ.க. ஒப்படைக்கவுள்ளது. ஆனால், ஈழத் தமிழர்களிடம் ஒப்படைப்பதற்கு செஞ்சிலுவைச் சங்கத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்காது. இது தொடர்பில் தமிழக அரசும் எதுவித அழுத்தமும் கொடுக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இதனை வைத்துத்தான் பா.ஜ.க. தனது அடுத்த அடியை தி.மு.க. அரசுக்கு கொடுக்கப்போகின்றது. அதாவது, இராமர் பிரச்சினைமூலம் தி.மு.க. அரசு இந்துக்களுக்கு விரோதமான அரசு என்பதை பிரசாரப்படுத்திய பா.ஜ.க. ஈழத் தமிழர் விவகாரத்தை கையிலெடுத்ததன் மூலம் தி.மு.க. அரசு இந்துக்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே விரோதமான அரசு என்னும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தப்போகின்றது.

ஆனால், இன்னொரு வகையில் ஈழத் தமிழர் சார்புக்கொள்கையை பாரதீய ஜனதாக் கட்சி எடுத்தமையை சாதாரண விடயமாகக் கருத முடியாது. ஏனெனில், பா.ஜ.க. முன்னாள் இந்திய அரசு, தற்போதைய பலமான எதிர்க்கட்சி. இதில் முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என பலமான அணியே உள்ளது.

இவ்வாறானதொரு கட்சி ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கினால் அதன் பிரதிபலிப்பு மிகவும் பெறுமதியானதாகவேயிருக்கும். ஆகையால்தான் பா.ஜ.க.வின் ஈழத் தமிழருக்கான நிவாரணப் பொருட் சேகரிப்பு அறிவிப்பினால் தமிழக அரசு மட்டுமன்றி மத்திய அரசும் கலக்கமடைந்துள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் இல.கணேசன், பட்டினியால் வாடும் ஈழத் தமிழருக்கு நாம் நிவாரணப் பொருட்களை தமிழகத்தில் வீடு வீடாக சேகரிக்கவுள்ளோம். இதில் முழு மூச்சாக எமது தொண்டர்கள் ஈடுபடுவார்கள்.

7 நாட்கள் சேகரிக்கப்படும் இந்த நிவாரணப் பொருட்களை ஈழத் தமிழர்களிடம் கையளிக்குமாறு கோரி எதிர்வரும் 11 ஆம் திகதி செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்படும். அவர்களின் சம்மதம் பெற்றே நாம் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளோம். நாம் கொடுக்கும் நிவாரணப் பொருட்கள் ஈழத் தமிழர்களிடம் கையளிக்க மறுக்கப்படுமானால் அதன் பின்னர் நாம் பல நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று கூறியுள்ளார்.

நிவாரணப் பொருட்கள் ஈழத் தமிழர்களுக்கு கிடைக்கின்றதோ இல்லையோ, தமது பிணங்களின் மீதும் தாம் சிந்தும் குருதிகள் மீதும் இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் அரசியல் நடத்துகிறார்கள் என்பதை ஈழத் தமிழர்கள் நன்றாகவே புரிந்துவைத்துள்ளனர்.

No comments: