October 25, 2007

திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் சட்டம் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • இந்தியாவில் திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய சட்ட விதிகளை ஏற்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்துக்கு வந்த ஒரு விவாகரத்து வழக்கு, தற்போது தேசிய அளவில் இதுபோன்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பிப்பதற்கு வழி ஏற்படுத்தியிருக்கிறது. சீமா என்பவர், தனது கணவர் அஸ்வினிகுமாரிடமிருந்து விவாகரத்து கோரி கடந்த 2005 ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்தபோது, திருமணம் நடந்ததற்கான ஆதாரத்தை நீதிமன்றம் கேட்டது. அதை அவர்களால் தர முடியவில்லை. இதையடுத்து, திருமணங்கள் பதிவு செய்வதைக் கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் சீமா. இந்திய திருமணம் ஒன்றில் குதிரையில் வரும் மணப்பெண்அதே நேரத்தில், குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், இருதரப்பினரின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் திருமணங்களைத் தடுக்கவும், குறைந்தபட்ச திருமண வயதை உறுதி செய்யவும் திருமணப் பதிவுகள் உதவிகரமாக இருக்கும் என்று தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளும் கருத்துத் தெரிவித்திருந்தன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அனைத்து மதத்தினரும் திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், அது தொடர்பாக மாநிலங்கள் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. மூன்று மாதங்களுக்குள் அதைச் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், அந்த வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் நீதிமன்ற உத்தரவின்படி செயல்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அந்த உத்தரவைச் செயல்படுத்தவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், திருமணப் பதிவைக் கட்டாயமாக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தம் செய்து, அதற்குரிய விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்று நீதிபதி அரிஜித் பசாயத் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. பல மாநிலங்கள், திருமணப் பதிவை இந்துக்களுக்கு மட்டும் கட்டாயமாக்கியிருப்பது குறித்து சுட்டிக்காட்டிய நீதிமன்றம்,இந்த திருமணப் பதிவுகள் இந்துக்களுக்கு மட்டுமன்றி, அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
  • இராணுவ அரசின் பிரதிநிதியை சந்தித்துள்ளார் அங் சான் சூ சீ: பர்மாவின் ஜனநாயக ஆதரவு தலைவி அங் சான் சூ சீ கடந்த இருபது ஆண்டுகளில் பெரும்பான்மையான காலத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தன் வீட்டிலிருந்து இராணுவ அரசின் உறுப்பினர் ஒருவரை சந்திப்பதற்காக வெளியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்
  • பிபிசி செய்தியாளர் கடத்தப்பட்ட அனுபவம் குறித்த பெட்டகம் : மத்திய கிழக்கின் காசா பிராந்தியத்தில் செயற்படுகின்ற ஜிகாத் அமைப்பான இஸ்லாத்தின் இராணுவம் என்னும் அமைப்பால் கடத்தப்பட்ட பிபிசியின் முன்னாள் காசா நிருபர் அலன் ஜோண்ஸ்டன் அவர்கள், தான் கடத்தப்பட்டபோது தனக்கேற்பட்ட அனுபவங்களை முதல் தடவையாகப் பேசியுள்ளார்
  • இரான் மீது அமெரிக்கா புதிய தடைகள் : இரான் மீது அமெரிக்கா ஒருதலைபட்சமான மேலதிக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இரானிய இராணுவத்தின் சில பிரிவுகள் மீதும், மூன்று வங்கிகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள இத்தடைகள் அமெரிக்காவின் நலன்களை காப்பதாக இருக்கும் என்று அரசுத்துறைச் செயலர் கொண்டலீசா ரைஸ் தெரிவித்தார்
  • பிகேகேயின் நடவடிக்கைகளை சகிக்க முடியாது என்கிறார் துருக்கிய அதிபர் : வட இராக்கில் இருந்து செயல்படும் துருக்கிய குர்து இன இயக்கமான பிகேகே துருக்கி பிரதேசத்துக்கள் நடத்தும் எவ்வித தாக்குதலையும் தன்னால் சகித்துக்கொள்ளமுடியாது என்று துருக்கிய அதிபர் அப்துல்லா குல் கூறியுள்ளார்
  • பாகிஸ்தான் தாக்குதலில் 33 பேர் பலி : பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு வாகனம் ஒன்றை இலக்குவைத்து நடத்தப்பட்டுள்ள குண்டுத் தாக்குதலில் 29 படையினர் உட்பட குறைந்தபட்சம் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
  • இன்றைய (அக்டோபர் 25 வியாழக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: