November 11, 2007

தமிழகத்தில் தமிழ்ச்செல்வன் வீரவணக்கக் கூட்டங்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

  • இலங்கை வான்படை தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் சுப தமிழ்செல்வன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க கூட்டங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு காட்டத்துவங்கியுள்ளது. இத்தகைய கூட்டம் ஒன்று தமிழ்நாட்டின் வேலூரில் ஞாயிற்றுகிழமை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அந்த ஊரின் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட காவல்துறை அதிகாரியிடமும் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அந்த கூட்டம் நடைபெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து ஞானசேகர னின் கொடும்பாவி எரிப்பு சம்பவங்களும், அதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சியினரின் சாலை மறியல் போராட்டங்களும் நிகழ்ந்ததோடு, சம்பந்தப்பட்டவர்கள் பலர் கைதும் செய்யப் பட்டிருக்கின்றனர். இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என்பது குறித்தும், சுப தமிழ்செல்வன் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி அஞ்சலி கவிதை எழுதியது பற்றி காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்
  • இலங்கை இனப்பிரச்சனைக்கு பேச்சுக்கள் மூலம் தீர்வைக் காணவேண்டும் - இந்திய நிதியமைச்சர் : பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டுவரும் இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் அல்லாது சமாதானப் பேச்சுக்களினூடான அரசியல் தீர்வொன்றினைக் காணவெண்டுமென இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் தெரிவித்திருக்கிறார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் ஞாபகார்த்த உரையின் போது கருத்து வெளியிட்டுள்ள திரு. ப.சிதம்பரம் இந்தியா இலங்கை இனப்பிரச்சனைக்கு முன்னர் மத்தியஸ்தம் வகிக்கும்போது விடுதலைப்புலிகளை தனித் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு ஒருமித்த இலங்கைக்குள் தீர்வினைக்காண முன்வரவேண்டுமென்றும், இலங்கை அரசினை அர்த்தமுள்ள சகலாராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்றினை முன்வைக்கும்படி வேண்டியிருந்தது என்றும் இந்தியாவின் அந்த நிலைப்பாட்டில் தற்போதுகூட மாற்றமேதுமில்லை என்றும் தெரிவித்தார்
  • பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாதம் தேர்தல்-முஷாரஃப் அறிவிப்பு : பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதிக்கு முன்னர் பொதுத் தேர்தல்களை நடத்த தாம் விரும்புவதாக அந்நாட்டு அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார். இருந்த போதிலும் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்க ஏதுவாக அங்கு அமலில் இருக்கும் நெருக்கடி நிலையை தளர்த்த அவர் மறுத்து விட்டார்
  • ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான தூதர் பர்மா விஜயம் : ஐக்கிய நாடுகள் சபையின் பர்மாவுக்கான மனித உரிமைகள் குறித்த தூதர் பர்மா சென்றுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக அவர் அங்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளார்
  • இஸ்ரேலியப் பிரதமர் மீது ஊழல் தொடர்பான விசாரணைகள் : இஸ்ரேலியப் பிரதமர் எஹுத் ஓல்மர்ட் அவர்களுக்கு எதிராக கூறப்படும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் விசாரணைகள் தொடர்பாக, அந்நாட்டு காவல் துறையினர் இருபதுக்கும் அதிகமான அரச கட்டிடங்கள் மற்றும் தனியார் அலுவலங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர்
  • சூறாவளியால் ரஷ்யா கப்பல்கள் மூழ்கியுள்ளன : ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையிலான கெர்ச் வளைகுடாவில் ஏற்பட்ட சூறாவளியினால் நான்கு கப்பல்கள் நாசமடைந்திருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
  • இன்றைய (நவம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: