November 12, 2007

உயிர்காக்க உதவும் பத்து வழிமுறைகள்

நமது வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்படும் போது பதட்டத்துடன் மருத்துவமனைக்கு ஓடுகிறோம். அங்கே மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் அளிப்பதன் மூலம் மருத்துவ உதவிகள் தாமதமின்றி நோயாளிக்குக் கிடைக்க வழி பிறக்கிறது. பல வேளைகளில் மருத்துவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் நோயாளியோடு பல காலம் இருக்கும் உறவினர்களே தடுமாறும் நிலை ஏற்பட்டு விடுகிறது. நோயாளிகள் குறித்த சில அடிப்படைத் தகவல்களை எழுதி வைத்திருப்பது சிக்கலான நேரங்களில் பயனளிக்கும் என்கிறார் மருத்துவர் பால் தக்காஷி.
உயிர்காக்க உதவும் பத்து வழிமுறைகள் :

1. நோயாளிகள் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனை குறித்தும், மருத்துவர் குறித்தும் தெரிந்து வைத்திருங்கள். சிலருக்கு சில மருத்துவர்கள் மீது அதீத நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை நோய் தீர்க்கும் முதல் நிவாரணி. எனவே அப்படிப்பட்ட தகவல்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமன்றி பழக்கமான மருத்துவரெனின் நோயாளியைக் குறித்த பல விஷயங்கள் தெரிந்திருப்பதனால் மருத்துவ உதவிகள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களையும் தவிர்க்க முடியும்.

2. நோயாளியின் பிறந்த நாள் அல்லது வயது தெரிந்திருப்பது நல்லது. மருத்துவ படிவங்களை நிரப்பவும், மருத்துவருக்கு நோயாளியின் உடல் நிலை குறித்த அனுமானங்களுக்கும் அது மிகவும் பயன்படும்.

3. நோயாளிக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதுகுறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

4. நோயாளிக்கு தனக்குத் தரப்பட வேண்டிய மருத்துவம் குறித்து ஏதேனும் கருத்து இருந்தாலோ, மத ரீதியான ஏதேனும் கொள்கைகள் இருந்தாலோ அதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

5. மிகவும் முக்கியமாக நோயாளியின் பழைய ஆரோக்கிய நிலை குறித்த அறிவு இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக சர்க்கரை நோய், வலிப்பு, இதயம் தொடர்பான நோய் போன்றவை நோயாளிக்கு இருந்திருக்கின்றனவா என்பதைக் குறித்த அறிவு இருப்பது மிகவும் பயனளிக்கும்.

6. நோயாளி என்னென்ன மருந்துகள் உட்கொண்டிருந்தார் என்பது குறித்த தகவல்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உட்கொள்ளும் மருந்துகளுக்கான சீட்டுகளை ஒரு கோப்பில் போட்டு வைத்திருப்பது இத்தகைய சூழலுக்கு பெருமளவில் கை கொடுக்கும்.

7. நோயாளிக்கு மிகவும் நெருக்கமானவர்களின் தொடர்பு எண்கள் கைவசம் இருப்பதும், பல தகவல்களைப் பெற உதவும்.

8 நோயாளிக்கு மருத்துவக் காப்பீடு இருக்கிறதா என்பதைக் குறித்த தகவல்களை தெரிந்து வைத்திருப்பது நலம் பயக்கும்.

9. இதற்கு முன் நோயாளி ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறாரா என்பது குறித்த தகவல்கள் அறிந்திருப்பது நல்லது. குறிப்பாக தங்கள் இளம் வயதில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தால் அது பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டு. அதை அறிந்து வைத்திருப்பது நல்லது.

10. நோயாளியின் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக அவருடைய உணவுப் பழக்கம், மது, புகை போன்ற பழக்கங்கள் போன்ற தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பத்து விஷயங்களும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவசர தேவை ஏற்படும் போது தடுமாறாமல் சரியான இடத்தில் சரியான சிகிச்சையை வழங்க உதவும். இந்தத் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு மெத்தப் படித்திருக்க வேண்டியதில்லை, குடும்ப உறவுகளுடன் அன்போடும் உறவோடும் உரையாடி வாழ்ந்தாலே போதுமானது.

No comments: