November 25, 2007

கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழ்க் கவிதையுலகில் தனி முத்திரை பதித்தவர். புரட்சிக்கவிஞரைப் போல புதிய கவிஞர்களை வளர்த்தெடுப்பதில் ஆர்வமுடையவர். பல கவிதை நூல்களையும், கவிதை பற்றிய நூல்களையும் எழுதியவர்.
1. நீங்கள் எந்த இயக்கத்தையும் சாராமல் இருக்கக் காரணம் என்ன?
சுதந்திரமாகச் சிறகை விரிப்பவன் கவிஞன். அவனுக்கு இயக்கச் சார்பு என்பது கூண்டுதான்.
2. உங்கள் கவிதைகளின் உள்ளடக்கங்களில் சமுதாயக் கவிதைகளுக்கு அடுத்த நிலையில் தத்துவக் கவிதைகள் அதிகமாக உள்ளன. ஆயினும் உங்களைத் தத்துவ கவிஞராக யாரும் கூறவில்லையே?
விமர்சகர்களின் பக்குவமின்மை
3. நிறைவேறாத காதல் கவிதைகள் பலவற்றை நீங்கள் எழுதியமைக்கு காரணம்?
கவிஞர் காதல் கவிதைகளை பாடினால் தன் வாழ்க்கை அனுபவத்தை பாடுவதாக எடுத்துக் கொள்ளமுடியாது. நான் காதலின் பல விதமான மனோபாவங்களைப் பாடியுள்ளேன். குறிப்பாக நிறைவேறாத கவிதைகளின் பாதிப்பு எனலாம்.
4. நடிகர்கள் அரசியலுக்கு வருவதை உங்கள் கவிதைகள் எதிர்ப்பது ஏன்?
தமிழ்நாட்டின் அவலத்தைச் சுட்டிக்காட்டுவது ஒரு நோக்கம். அரசியல் தெரிந்த நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் தடையில்லை. திரைப்படங்களில் மக்களுக்கு நன்மை செய்வது போல் வருபவர்களைப் பிரவேசித்ததால் ஏற்பட்ட சீரழிவுகளை எல்லோரும் அறிவர்.
5. ஆயிரம் திருநாமம் பாடி உருவமற்ற ஒரே கடவுள் என்று குறிப்பதன் நோக்கம் என்ன?
இறைவனுக்கு உருவமில்லையே தவிர, பெயர்கள் எத்தனை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். மதங்களெல்லாம் இணையக்கூடிய ஒரு கொள்கையில் இணைப்பதுதான் என் நோக்கம்.
6. சமூகச் சீர்கேடுகள் குறித்து நீங்கள் கருதுவது என்ன?
பொருள் வேட்கையின் காரணமாக, நவ நாகரிக வாழ்க்கை முறை காரணமாக, நேர்மை, உண்மை, சுய மரியாதை போன்ற விழுமியங்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது. இதனால் உலகளவில் ஒரு பண்பாட்டுச் சீரழிவு காணப்படுகிறது. கவிஞன் ஒரு பரிபூரணமான அழகிய உலகத்தைக் காணவிரும்புகிறான். அவன் கண் முன்னால் அநீதிகளும் அக்கிரமங்களும் நடக்கிறபோது அவன் அவைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.
7. முரண் கவிதைகள் பெரிதும் எழுதிய கவிஞராகக் கருதப்பெறும் நீங்கள் அங்கதக் கவிதைகளே அதிக எண்ணிக்கையில் எழுதியுள்ளீர்களே? குறிப்பாக, நளினமாக அங்கதம் செய்கிறீர்களே?
இயல்பாகவே அங்கத உணர்வு எனக்கு பிடிக்கும். கவிதையின் இயல்புகளில் அங்கதமும் ஒன்று. நளினமாகத் தாக்குவதுதான் நாகராகம். தாக்கபடுபவனும் சிந்திக்க வேண்டும் என்பது கருத்து. அவனை எதிரியாக்கிக் கொள்ளக்கூடாது. சமூக குறைபாடுகளைக் சுட்டும்போது அங்கதத்தின் வழியாகச் சுட்டுவது ஒரு வழி.

No comments: