November 20, 2007

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்

  • தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது : மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள். இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.
    இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார். இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • உலக எயிட்ஸ் நோயாளர்களின் மதிப்பீட்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது : உலகில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மதிப்பீட்டு எண்ணிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை பெரும் குறைப்பைச் செய்துள்ளது. எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 4 கோடி என்று கடந்த வருடத்தில் கூறியதற்குப் பதிலாக, உலகெங்கிலும் 3.3 கோடிப் பேரே எயிட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக யு என் எயிட்ஸ் நிறுவனம் தற்போது கூறியுள்ளது
  • பாகிஸ்தானில் மூவாயிரம் பேர் விடுதலை : பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்பினால் கொண்டுவரப்பட்ட அவசர நிலையின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் அதிகமானோரை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. மேலும் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் கூறியுள்ளார். ஆனால், தென்பகுதி நகரான கராச்சியில், நெருக்கடி நிலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற சுமார் 150 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
    இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் பலவந்தத்தைப் பிரயோகித்தனர். முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் உறுதி செய்தார். இந்த தேர்தலை புறக்கணிப்பதா, இல்லையா என்பது குறித்து பேனசீர் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கராச்சியில், கூடி கலந்தாலோசித்தனர்
  • ஆப்கானின் செப்புச் சுரங்க ஏலத்தை சீன பெற்றது : ஆப்கானிஸ்தானில் உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஏலத்தை சீன சுரங்க நிறுவனம் ஒன்று வென்றுள்ளது. காபூலுக்கு தெற்கே அய்நக் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த சுரங்கத்தில், சுமார் 300 கோடி டொலர்கள் முதலீடு செய்யப்போவதாக சீன அரசுக்கு சொந்தமான சீனா மெட்டலர்ஜிக்கல் குழுமம் கூறுகிறது
  • பிரான்ஸில் பெரும் வேலை நிறுத்தம் : பிரான்ஸில் ஆயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்கள், வேதனம் தொடர்பாக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது ஓய்வூதிய நலன்களின் வெட்டுச் செய்யும் அரசாங்கத் திட்டத்தை எதிர்த்து ஏழு நாட்களாக போக்குவரத்துத் துறையினர் நடத்தும் போராட்டமும், இந்த வேலை நிறுத்துடன் இணைந்துள்ளது
  • இலங்கையின் வடக்கே மோதல்கள் தொடருகின்றன 25 பேர் பலி : இலங்கையின் வடக்கே நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சண்டைகளில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது
  • இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு : மனித உரிமை மீறல் சம்வங்கள் குறித்து பல்வேறுபட்ட சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் மிகமோசமான 15 மனித உரிமை சம்பவங்களை விசாரித்தறியும் பொருட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடித்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மார்வன் அத்தப்பத்து இளைப்பாறினார் : ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மிகவும் சிறப்பான, நேர்த்தியான துடுப்பாட்ட வீரராகக் கருதப்படும் முன்னாள் அணித்தலைவர் மார்வன் அத்தப்பத்து இன்று தான் இலங்கை சார்பில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து இளைப்பாறுவதாக அறிவித்திருக்கிறார்

No comments: