December 04, 2007

இலங்கை கைதுகள் குறித்து அரசாங்கம் விளக்கம்

  • கொழும்பில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களில் பெரும்பாலானோரை விடுவித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழர்களை இலக்கு வைத்து இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவதையும் அரசு மறுத்திருக்கிறது. இலங்கையில் தலைநகர் கொழும்பிலும், புறநகர்ப் பகுதியிலும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து கொழும்பிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடுமையான சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினரும் பொலிஸாரும் பலநூற்றுக்கணக்கான தமிழர்களை கைது செய்திருந்தனர். இவர்களில் பலர் அந்தந்தப்பகுதி பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அதேவேளை, மேலும் பலர் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்புச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர். அமைச்சர் பெர்ணாண்டோ புள்ளேதமிழர்கள் வகை தொகையின்றி கைதுசெய்யப்பட்டு ஆங்காங்கே அடிப்படை உணவு, உடை மற்றும் மலசலகூட வசதிகளின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக கூறும் தமிழ்க் கட்சிகள் பலவும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அது குறித்து குரல் எழுப்பியிருந்தன. இதனைவிட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்ணணி எனப்படும் ஜே.வி.பியும் அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்திருந்தன. அத்துடன் அவர்களை விடுவிப்பதற்கு உதவக்கோரி ஜனாதிபதியிடமும், சர்வதேச சமூகத்திடமும் முறையீடு செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஊடகங்களிற்கு தெரியப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் பிரதான கொறடாவும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்றுமாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஊடக மத்திய நிலையத்தில் விசேட பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடாத்தினார். அங்கு எதிர்க்கட்சிகளும், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே நாட்டினதும், சகல சமூகங்களினதும் பாதுகாப்பினை உறுதிசெய்யும் ஒரே நோக்குடனேயே இந்த நடவடிக்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டது என்றும், பொலிஸாரினாலும் பாதுகாப்புப் படையினராலும் வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது சிங்கள இனத்தவர்கள் சிலரும், முஸ்லிம் இனத்தவர் ஒருசிலரும்கூட விசாரணைகளிற்காக கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 202 பேர் தவிர ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.
    தமிழர்கள் இலக்குவைத்து பாரியளவில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை மறுத்தலித்துப் பேசிய அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே தேவையேற்படும் போதெல்லாம் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்
  • வடபகுதிக்கான போக்குவரத்து நிலைமைகளில் முன்னேற்றம் இல்லை : இலங்கையின் தலைநகரப்பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, மட்டுப்படுத்தப்பட்ட வடபகுதிக்கான போக்குவரத்து நடைமுறைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்
  • அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கை ஏற்புடையதல்ல என்கிறது இஸ்ரேல் : இரான் தனது அணு ஆயுதத் திட்டங்களை 2003 ஆம் ஆண்டிலேயே நிறுத்தி விட்டது என்கிற அமெரிக்க புலனாய்வுத் துறையின் மதிப்பீட்டுடன் தாம் முரண்படுவதாக இஸ்ரேல் கூறியுள்ளது
  • இரான் மீது அழுத்தம் தொடரவேண்டும் எனக் கூறுகின்றன பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் : இரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை நிறுத்திவிட்டதாக அமெரிக்க உளவு மதிப்பீடு கூறுகின்ற போதிலும், இரான் மீதான இராஜதந்திர அழுத்தத்தை சர்வதேச சமூகம் தொடரவேண்டும் என்று பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் நாட்டு அரசுகள் கேட்டுள்ளன
  • வடகொரியாவுக்கு அமெரிக்காவின் சிறப்புத் தூதர் விஜயம் : வடகொரியாவுக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதர் கிறிஸ்டோபர் ஹில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சரான பாக் உய் சுன் அவர்களுடன் அபூர்வமான ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார்
  • தென் ஆப்பிரிக்காவில் சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் : தென் ஆப்பிரிக்காவின் சுரங்கங்களில் பணியாற்றும் பல ஆயிரக்கணக்கன தொழிலாளர்கள், பணியிடங்களில் தமது பாதுகாப்புகள் குறித்த கரிசனைகளை வெளிப்படுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்
  • காலநிலை மாற்றம் குறித்து பசிபிக் நாடுகள் பெருங்கவலை : கடல் மட்டம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாலியில், காலநிலை குறித்த சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதிநிதிகளுக்கு, பசிபிக் பெருங்கடலில் இருக்கும் தீவு நாடுகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்

No comments: