December 03, 2007

"எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்" அண்ணா கண்ணன் - நேர்முகம்" - நவின்

மதிப்பிற்குரிய திரு.அண்ணா கண்ணன் அவர்களை "நிலாச்சாரலுக்காக" நான் எடுத்த செவ்வி - கவிஞர், இதழாளர், ஆய்வாளர், 18 நூல்களின் ஆசிரியர் அண்ணா கண்ணன். இவரின் இரு கவிதைகள் 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் ஆய்ந்து இளம் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குத் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பைப் பதிந்திருக்கிறார். அமுதசுரபியில் இரண்டரை ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றிவிட்டு, இப்போது இணைய இதழ் ஒன்றின் ஆசிரியராக இருக்கிறார். 'நான் பிறக்கும்போதே பேனாவோடுதான் பிறந்தேன், எனது லட்சியமே எழுத்து, எழுத்தே என் மூச்சு' என்றெல்லாம் பிதற்றும் பிசுபிசுப்பில் சிக்கிக்கொள்ளாத, ஒரு பாசாங்கில்லாத கவிஞனை, எழுத்தாளனை அண்ணா கண்ணன் மூலமாகப் பார்க்கிறேன்.
"கிழிந்த ஆடைகளை என் அம்மா தைத்துப் பயன்படுத்துவார், நான் அவர் வழியில் வருகிறேன். கிழிந்த ஆடைகளைக் கூடுமானவரை தைத்துப் பயன்படுத்துவது, பொருளை முழுமையாகப் பயன்படுத்தும், எதையும் வீணென்று தூக்கி எறியாத குணத்தினாலேயே. அந்த நேரங்களில் விரும்பி இருந்தால், இன்னும்கூட தாராளமாகச் செலவு செய்திருக்க முடியும். ஆயினும் ஒவ்வொன்றிலும் சிக்கனம் பேணும் விருப்பத்தினால் அவ்விதம் வாழ்ந்தோம், வாழ்கிறோம். கைக்குட்டை உருவானதும் ஜன்னல் விரிப்புகள், பழைய சேலையிலிருந்து உருவானதும் இந்தப் பின்னணியிலேயே" என்று அவர் கூறும்பொழுது, அவரின் எளிமை என்னை பிரமிப்புக்குள்ளாக்குகிறது. ஏழ்மையால் எளிமை என்பது வேறு, அது சாத்தியம். ஆனால் எல்லாம் இருந்தும் எளிமை என்பது வேறு, அது அசாத்தியம். அண்ணா கண்ணன் அசாத்தியமான எளிமை மிக்கவர். அவர் நிலாச்சாரலுக்காக என்னோடு சேர்ந்து நினைத்துப்பார்த்தவை...

தங்களின் நூல்கள், பரிசுகள், விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்...

'பூபாளம்' (1996), 'உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு' (1997) ஆகிய கவிதைத் தொகுப்புகளை என் சொந்தச் செலவில் வெளியிட்டேன். 'காந்தளகம் - 20 ஆண்டுகள்' (நிறுவன வரலாறு), 'தகத்தகாய தங்கம்மா' (வாழ்க்கை வரலாறு), 'கலாம் ஆகலாம்', 'டம்டம் டமடம்' (சிறுவர் பாடல்கள்), 'நூற்றுக்கு நூறு' (சிறுவர் சிறுகதைகள்), 'தமிழில் இணைய இதழ்கள்' (எம்.ஃபில். ஆய்வேடு) ஆகிய நூல்களையும் படைத்துள்ளேன். கோலாலம்பூரில் உள்ள உமா பதிப்பகம், பழந்தமிழ்க் காப்பிய நூல்களை எளிய தமிழில் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதற்கு இணங்க, இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, நள தமயந்தி, சூளாமணி, பாகவதம் உள்ளிட்ட 10 காப்பிய நூல்களை எழுதி வழங்கினேன்.

மாணவப் பருவத்தில் கவிதை, கட்டுரை, பேச்சு, விளையாட்டு போன்றவற்றுக்காகப் பள்ளியிலும் மாவட்ட, மாநில அளவிலும் பல பரிசுகள் பெற்றேன். நீடாமங்கலம் இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்திய போட்டிகளில் வென்றேன். கல்லூரிப் பருவத்தில் பாரதியார் சங்கம், பாரதி இளைஞர் சங்கம் எனச் சில அமைப்புகள் நடத்திய கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசுகள் பெற்றேன். என் இருபதுகளில் பல கவியரங்குகளில் கலந்து கொண்டேன். அவை பெரும்பாலும், சிறந்த கவிதைக்குப் பரிசு வழங்கும் வழக்கம் கொண்ட அமைப்புகள். அப்படி கவிதை உறவு, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் எனச் சில அமைப்புகளின் கவிதைப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளேன். சில போட்டிகளுக்கு என்னை நடுவராக இருக்குமாறு அழைத்தார்கள். அதன் பிறகு, போட்டிகளில் கலந்து கொள்வதிலிருந்து விலகிக் கொண்டேன்.

கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பு, 'இளந்தென்றல்' என்று அழைத்தது. பொன்னடியானின் தமிழ்க் கவிஞர் மன்றம், 'கடற்கரை கவிமுத்து' என்ற பட்டம் அளித்தது. வல்லிக்கண்ணன் முதலிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலரின் பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஒரு முறை ஒரு கவியரங்கில் நான் கவிதை வாசித்த உடன், அங்கு முன்னிலை வகித்திருந்த கவிஞர் சுரதா, ஒரு ரூபாயை எடுத்து எனக்குப் பரிசாக அளித்தார். வெறும் வாயால் பாராட்டக் கூடாது, ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்ட வேண்டும் என்று அப்போது அவர் கூறினார். ஆயினும் அறிமுகம் இல்லாத ஒருவர், திடீரென நேரிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ பாராட்டும்போது ஒரு புது உற்சாகம் ஏற்படுகிறது. என் சிறுவர் பாடல்கள் சிலவற்றைச் சில பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தும் விழாக்களில் பாடியும் வருகிறார்கள் என்று கேள்விப்படும்போது மகிழ்ச்சி உண்டாகிறது.

தங்களின் இரண்டு கவிதைகள் மட்டும் 32 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டதன் விசேஷ காரணம் என்ன?

தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க...http://www.nilacharal.com/ocms/log/12030709.asp

No comments: