December 20, 2007

கருணாநிதி சோனியா சந்திப்பு

நான்கு நாள் பயணமாக புதுடெல்லி வந்துள்ள தமிழக முதல்வர் மு. கருணாநிதி, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை வியாழக்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சோனியா காந்தியுடன் நடந்த சந்திப்புக் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கிய கருணாநிதி, தமிழ்நாட்டில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட பாதிப்புக் குறித்தும், மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சினை குறித்தும் பேசியதாகத் தெரிவித்தார். உள்நாட்டுப் பாதுகாப்புத் தொடர்பாக, இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். தனது சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டதாகவும் கருணாநிதி தெரிவித்தார். தீவிரவாதத்தை ஒடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துவருவது குறித்து அந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரள முதல்வருடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படாத போதிலும், அதை முன்னேற்றமாகவே தான் கருதுவதாக கருணாநிதி கருத்துத் தெரிவித்தார். இதனிடையே, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் ஆகியோர் தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேசினார்கள்

No comments: