பேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார். இவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார். ஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.
நாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.
தனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது. அவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.
No comments:
Post a Comment