December 08, 2007

தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை

தமிழ்நாட்டில் சமீப காலமாக மின்சாரப் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வீடுகள், தொழிற்சாலைகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தொழில்துறையினரும் பொதுமக்களும் புகார் கூறி வருகிறார்கள்.
இதுதொடர்பாக தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி சனிக்கிழமையன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் வரை, தமிழ்நாட்டில் மின்சாரம் உபரியாக இருந்தது. மராட்டியம், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அக்டோபர் மாதம் முதல் காற்றாலைகள் மூலம் கிடைக்க வேண்டிய மின்சாரம் 1500 மெகாவாட்டும், மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் 1000 மெகாவாட்டும் கிடைக்காத காரணத்தால், தற்போது தமிழகத்தில் தாற்காலிகமாக மின்தடை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே எண்பது லட்சம் நுகர்வோர், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 18 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவையெல்லாம்தான் தமிழகத்தில் மின்தடை ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் என்று, பிரச்சினைக்கான காரணத்தை விளக்கியுள்ளார் அமைச்சர். அதே நேரத்தில், கோடைக் காலத்தில் மின் தட்டுப்பாடு வராத அளவுக்கு, அஸ்ஸாம், ஹரியானா, கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்து தேவையான மின்சாரத்தை வாங்கி, தடையின்றி மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார். மின் தட்டுப்பாடு குறித்தும், அமைச்சர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாகவும், கோவையில் உள்ள தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் கே. செல்வராஜு அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: