January 02, 2008

மகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்

நேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.
கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்
மகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார். அவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார். வசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

2 comments:

இரமணன் said...

வணக்கம்
உங்கள் கட்டுரைகளும் ஆக்கங்களும் என்னை உங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.
வாழ்த்துக்கள்

முதலில் என்னை பற்றிய ஒர் சிறிய அறிமுகம்.

எனது பெயர் இரமணன் நான் ஒரு இணைய தள வடிவமைப்பாளராக பணி புரிகிறேன். உயிர் வாழ்வதற்க்காக சொந்த மண்ணை விட்டு அந்நிய மண்ணிலே செத்துக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான கோழைகளில் நானும் ஒருவன்.

நான் தற்பொழுது ஓர் சிறிய முயற்ச்சியில் இறங்கியுள்ளேன். அதை உங்களிடம் பகிர்து கொள்ள விரும்ப்புகிறேன்.

இன்று இணையதில் நிறைய தமிழ் சார்ந்த விடயங்கள் இருக்கின்றன இது தமிழ் வளர்ச்சியில் மிகவும் வரவேற்க்க தக்கது ஆனால் இதில் வருந்த தக்க விடயம் என்ன வென்றால் இந்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் போய் சேராதது தான். இதற்க்காகவே நான் ஓர் இணைய தளத்தை ஆரம்பித்து உள்ளேன். இதில் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழ் சார்ந்த தகவல்களையும் திரட்டி ஓர் இடத்தில் பதித்து வருகிறேன். இதில் உங்கள் கட்டுரைகளையும் ஆக்கங்களையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அதற்க்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தகவல்கள் அனைதும் உங்கள் பெயரிலேயே பதியப்படும்.

தமிழ் அமுதினைத் திரட்டிவரும் இந்த தேனிக்கு தங்கள் உதவியை வழங்குங்கள். நாளைய எமது தமிழ் சமுதாயம் இணையத்தில் நடை போட இது வழி சமைக்கும் என்று நம்புகிறேன்

நன்றி
இரமணன்
www.thurikai.com

Manuneedhi - தமிழன் said...

அன்பிற்கினிய நண்பர் இரமணன் அவர்களுக்கு வணக்கம்! முதற்கண் எனது தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும. நான் தற்போது விடுமுறைக்காக அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருப்பதால் என்னால் தங்களின் விமர்சனத்திற்கும் வினாவிற்கும் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை. நண்பரே எனது மின்னஞ்சல் முகவரிக்கு navneethsmart@yahoo.com எழுதுங்கள்! எனது படைப்புகளைத் தங்களின் தளத்தில் பதிவு செய்துகொள்வதில் மகிழ்ச்சி. மேலும் எனது சில படைப்புகள் இணைய தளங்களில் ஏற்கனவே பிரசுரமானவை. எனவே அந்தத் தளத்திற்கு நன்றியையும் மறக்காமல் தெரிவித்து விடுங்கள். சமீபத்தில்தான் தங்களின் அற்புதமான வலைப்பூ மற்றும் இணையதளம் கண்டேன். சிறந்த தளமாக இருந்தது. தங்களின் தமிழ் சேவையில் அடியேனும் தோள்கொடுப்பதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன். நானும் தங்களைப்போன்ற அன்பு நண்பர்களுடன் இணைந்து புதியதாக ஒரு தமிழ் இணையதளம் ஆரம்பித்தோம். பெயர் “அதிகாலை.காம்” www.adhikaalai.com பிரயாணித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களைச் சொல்லவும். நீங்கள் விரும்பினால் எங்களோடு சேர்ந்தும் தோள்கொடுக்கலாம். இணைந்தே சாதிப்போம்! ஜெயிப்போம்!! மேலும் தங்களைப்பற்றி எனக்கு எழுதுங்கள். அவசியம் நானும் தொடர்புகொள்கிறேன். நல்ல நட்பு கிடைத்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

- தமிழன்
http://manuneedhi.blogspot.com
www.adhikaalai.com