April 29, 2008

ரவுடிகளின் பிடியில் தமிழகம் : சென்னையில் மட்டும் 800 பேர்

என்கவுன்ட்டர்-துப்பாக்கிச் சூடு-கைது...என ரவுடிகளுக்கு எதிரான போலீசாரின் அதிரடி நடவடிக்கைகள் ஒருபுறம்; மறுபுறத்தில் அரசியல் பலத்துடன் வளர்ந்து கொண்டிருக்கிறது ரவுடிகள் ராஜ்ஜியம். சமீபத்திய புள்ளி விவரம் நம்மை அதிகமாகவே அதிர வைக்கிறது. தமிழகம் முழுக்க 5000 பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 800 பேர் கூடாரம் போட்டிருக்கிறார்கள்.

இந்த மாதத்தில் மட்டும் 4 என்கவுன்ட்டர்கள். கடைசியாக போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானவன் திருச்சி 'பாம்' பாலாஜி( 28.04.08) . சென்னையில் ஏப்ரல் 11-ல் தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பிரபல ரவுடிகளை சென்னை, அயனாவரத்தில் வைத்துச் சுட்டுத் தள்ளியது போலீஸ்.
மிகப்பெரிய தீவிரவாதியான நவீன் என்பவனை ஏப்ரல் 19-ல் கொடைக்கானலில் வைத்து போட்டுத் தள்ளினர். இப்படி இந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 என்கவுன்ட்டர்கள்.

சென்னையில் உள்ள 800 ரவுடிகளில் 'ஏ பிளஸ்' கிரேடு பட்டியலில் இடம் பெற்றுள்ள தாதாக்கள் 46 பேராம். 'ஏ பிளஸ்' என்றால் அவர்களின் நெட்வொர்க் தமிழகம் முழுவதும். சென்னையில் இருந்தபடியே மாநிலம் முழுக்க தங்கள் ஆட்களை வைத்து ‘தொழில்’ நடத்தி வருபவர்கள்.

சென்னைக்கு அடுத்தபடியாக ரவுடிகள் பதக்கம் பெறும் நகரமாக மதுரை திகழ்கிறது. அங்கு 500 பேர் ஆட்டம் போடுகிறார்களாம். அதற்கு அடுத்தபடியாக சேலம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி என ஒவ்வொரு நகரத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உலா வருகிறர்கள். இவர்களுக்கு பக்க பலமாய் இருப்பவர்கள் அரசியல் புள்ளிகள்.

‘ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் பல்வேறு அமைப்புக்கள் இருப்பது மாதிரி (மகளிர் அணி, விவாசாயிகள் அணி) ரவுடிகளுக்கு என்றும் பெயர் சூட்டப்படாத அணி செயல்படுகிறது. தாதாக்களின் துணை இல்லாமல் இன்று அரசியல் நடத்துவது ஒரு சிரமமான காரியமாகவே கருதுகின்றனர்’ என்று கூறுகிறார் ஒரு அரசியல் பிரபலம்.

ரவுடிகளின் ராஜ்ஜியத்தை அழிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளை இன்னும் இந்தப் பிரிவுக்கான போலீசாரின் எண்ணிக்கை போதவில்லை என்று தெரிவிக்கிறார் ஒரு பெரிய போலீஸ் அதிகாரி.

"சென்னையின் முக்கியமான ரவுடிகளின் பட்டியலை எல்லாம் தயார் செய்துவிட்டோம். அந்தப் பணியை நாங்கள் கச்சிதமாக முடித்துவிட்டோம். எனவே இனிமேல் எங்களுக்கு சிரமம் இருக்காது. 2007 ஜூலை 30-ல் வெள்ளை ரவியை சுட்டுக் கொன்ற பின் எல்ல ரவுடிகளுக்கும் உதறல் ஏற்பட்டது. உயிர் பயம் தலை தூக்க ஆரம்பித்தது. சென்னையை விட்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்" என்கிறார் அவர்.

2006-ல் 5 என்கவுன்ட்டர்கள், 2007-ல் 4 என்கவுன்ட்டர்கள் இப்படி ரவுடிகளுக்கு எதிராக போலீசாரின் வேட்டை தீவிரமாகியது. இதனால் சிறிது காலம் அடங்கி ஒடுங்கி இருந்தனர். இப்பொழுது மெதுவாக தலை தூக்க ஆரம்பித்து விட்டனர்.

"சென்னை நகரத்தில் எப்பொழுது ரியல் எஸ்டேட் தொழில் சூடு பிடிக்க ஆரம்பித்ததோ அப்பொழுதே ரவுடிகளின் தொழிலும் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது. நில மோசடி, கட்டப் பஞ்சாயத்து என கோடிக் கணக்கில் பணம் புரளும் தொழிலில் காலூன்ற ஆரம்பித்தனர். இதில் 'ஏ பிளஸ்' ரவுடிகளின் கைவரிசை அரசியல் புள்ளிகளின் துணையுடன் ஓங்க ஆரம்பித்தது. அதிகார வர்க்கமும், அடியாட்கள் பலமும் ஒன்றாக கை கோர்த்ததால் அப்பாவி மக்களின் வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளானது. பலரும் இதில் முதலீடு செய்யவும், விற்கவும், வாங்கவும் பயப்படத் தொடங்கினர்" என்கிறார் மற்றொரு காவல்துறை அதிகாரி.

திண்டுக்கல் பாண்டியன், மாலைக்கண் செல்வம், தட்சிணாமூர்த்தி, ராஜேந்திரன், காதுகுத்து ரவி, பங்க் ராஜு, கேட் ராஜேந்திரன், பினு, மார்க்கெட் சிவா, பன்னீர் செல்வம் மற்றும் சுகு என்ற சுகுமார் இவர்கள் எல்லாம் பலே ரவுடிகள். இவர்கள் அனைவரும் குறைந்தது 3 முதல் 4 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறுகிறார் அந்த அதிகாரி. இவர்களின் முக்கியத் தொழில் கட்டப்பஞ்சாயத்து. ஆள் கடத்தல், கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகியவை.

போலீசாரின் வேட்டைகளுக்கு இடையிலும், ரவுடிகளின் ஆட்டம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது எனபதுதான் பொதுமக்களின் புலம்பல். என்ன செய்யப போகிறது அரசும், காவல் துறையும்?

1 comment:

Saravana said...

என்ன செய்ய வர வர மாமூல் பயலுக சரியா தரதில்லை , கேட்ட புதிதா ஆரம்பித்திருக்கிற கட்சியின் செயளாலர், பொருளாலர், இத்தியாதி என மிரட்டுகிறான்.
இப்ப இருக்கிற காலச்சூழ்நிலையில் உண்மையிலேய பயலோட கட்சி கூட்டனி கட்சி கூட ஒட்டிகிட்டு ஆட்சிகட்டிலுக்கு காலாகி போனால் நமக்கு தானே ஆப்பு அதுதான் போலீஸ் உசாராகிடுச்சி

ஏன்னா முதலில் ஐயா, இல்லாட்டி,அம்மா இப்ப கருப்பு எம்சியாருங்கிய, செவப்பு எம்சியாருன்றங்கிய ஒரே ராப்சர் , அதுதான் போட்டு தல்லுனாதான் சரிபட்டு வரும்.