முதல்வர் கருணாநிதியின் மகனும், நடிகருமான மு.க.முத்து உடல் நலக்குறைவுக் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதிக்கும், முதல் மனைவி பத்மாவதிக்கும் பிறந்த ஒரே மகன் மு.க.முத்து. இளம் வயதில் திரைப்படத்தில் நடிக்க விரும்பிய மு.க. முத்து, முரசொலி மாறனின் பூம்புகார் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட "பிள்ளையோ பிள்ளை' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அப்போது, எம்.ஜி.ஆருக்கு இணையாக மு.க. முத்துவை களம் இறக்க கருணாநிதி முயற்சிப்பதாக கூறப்பட்டது. அதன் பின்பு, "பூக்காரி', "சமையல்காரன்', "அணையா விளக்கு' உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்தார். அதன்பின்பு, திரைத்துறையில் இருந்து விலகினார். அரசியல் வானில் தனது தந்தை மின்னினாலும், அதன் கவர்ச்சியில் ஈர்க்கப்படாமல் ஒதுங்கியே இருந்தார். 1991-96 ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுகவில் சேர்ந்தார் மு.க.முத்து. அப்போது, அவருக்கு ஜெயலலிதா ரூ. 5 லட்சம் நிதி வழங்கினார். அதிமுகவில் இணைந்தாலும், கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தார். மு.க.முத்துவின் மகன் அறிவுநிதி, டாக்டராக உள்ளார்.
உடல்நலக் குறைவு: கடுமையான காய்ச்சல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை மு.க.முத்து சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்தவுடன் காலை 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி மருத்துவமனைக்கு நேரில் சென்று மு.க.முத்துவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, டாக்டர் அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, தங்கை தேன்மொழி ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சிகள் ரத்து: மு.க.முத்துவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை மாலையில் இருந்து தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். மு.க. முத்துவின் அருகிலேயே இருக்க வேண்டியுள்ளதால் நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என எழும்பூர் நீதிமன்ற விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment