July 31, 2007

சஞ்சய் தத்துக்கு ஆறு ஆண்டு கால சிறை தண்டனை

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்-துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.டி. கோடே செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்தத் தீர்ப்பை வெளியிட்டார். கடந்த 1993-ம் ஆண்டு மும்பை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில், 257 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை, சிறப்பு தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த வழக்கு மீதான தீர்ப்பு படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதி்க்கப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள், குண்டுவெடிப்புக்கு முன்னதாக வழங்கிய ஆயுதங்களை, சட்டவிரோதமாக தன்னிடம் வைத்திருந்ததாக சஞ்சய் தத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏ.கே. 56 ரக துப்பாக்கி மற்றும் 9 எம்எம் பிஸ்டல் ஆகியவை வைத்திருந்ததாக, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 6 ஆண்டு சிறை தண்டனையுடன், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுக்களை ஏற்கெனவே நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத், ஏற்கெனவே 18 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்துள்ளார்.
முதல் முறை குற்றம் புரிந்தவர்களுக்கான பாதுகாப்பு சட்டப்படி தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று சஞ்சய் தத் கோரியிருந்தார். ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது.

அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை மூலம், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.
மெசப்பட்டோமியா :

உலகின் மிகப் பழமையான் நாகரீகங்களில் மெசப்பட்டோமியா நாகரீகமும் ஒன்று. இன்றைய இராக் பகுதிதான் அன்றைய காலத்தில் மெசப்பட்டோமியா என்று அழைக்கப்பட்டது. அந்த நாகரீகம் மற்றும் வளர்ச்சியில் டைகரிஸ் மற்றும் யூபிரிட்டிஸ் நதிகள் பெரும் பங்கு வகித்தன. இவ்வாறு வரலாற்று சிறப்பு வாய்ந்த டைகரிஸ் நதியில் இன்று பிணங்கள் மிதப்பது சர்வசாதாரணமான காட்சியாக இருக்கிறது. தினம் தினம் பலரது உடல்கள் அந்த நதியில் இருந்து கண்டெடுக்கப்படுவதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். இது குறித்த பெட்டகத்தை இங்கு கேட்கலாம்.தொடர்ந்து இன்றைய தமிழோசை (ஜுலை 31 செவ்வாய்க்கிழமை) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

No comments: