August 31, 2007

உயிரை பறிக்கும் "செல்போன்"


20 நிமிடத்திற்கு மேல் பேசாதீர்கள் உயிரை பறிக்கும் "செல்போன் பயங்கரம்"

விஞ்ஞானிகள் எச்சரிக்கை தகவல்-சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அக்கம், பக்கத்து கிராமங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஊர் பண்ணையார் வீட்டில் மட்டும் இருந்தது அந்த டெலிபோன். அழகான பெண்ணின் இடைபோல, கன்னங்கரேல் உருவத்தில், சுமார் 2 கிலோ எடை அளவு கொண்ட அந்த போனில் வளையம், வளையமாக 10 ஓட்டைகள் இருக்கும். குறிப்பிட்ட எண்ணை விரலால் இடமிருந்து வலமாக சுற்றிவிட்டால் 'ஸ்பிரிங்' போல ரிவர்ஸ்சில் வந்து டிரிங்... டிரிங்... என்று மணியடிக்கும். அப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஒரே ஒரு 'ரிங்டோன்' தான்! இப்போது ஒரே சட்டைப் பையில் விதம் விதமாக 4 செல்போன்களை தாராளமாக வைத்திருக்கிறார்கள். ஒருபுறம் வேடிக்கையாகவும் இருக்கிறது. காதில் 'ஹெட்போனை' வைத்துக் கொண்டு நடுரோட்டில் தனக்குத்தானே பேசிக் கொண்டு போவதை செத்துப் போன நமது தாத்தா - பாட்டி பார்க்க நேர்ந்தால் 'பாவம், யாரு பெத்த புள்ளையோ இப்படி பைத்தியம் புடிச்சு அலையுது" என்பார்கள்.கற்பனைக்கும் எட்டாத இந்த செல்போனை யார் கண்டுபிடித்தது?சிகாகோவைச் சேர்ந்த 'மார்ட்டின் கூப்பர்' என்பவர்தான் இந்த நவீன செல்போனை கண்டுபிடித்தது.1973-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி உலகின் முதல் செல்போனை கண்டு பிடித்து முதன் முதலாக பேசியதும் இவர்தான். பிரபல 'மோட்டோரல்லா' கம்பெனிதான் முதல் செல்போனை உலகிற்கு காட்டியது.இந்த நிறுவனத்தை சேர்ந்த மார்ட்டின் கூப்பர் முன்னதாக வயர்லெஸ், ஆன்டனா சம்பந்தமான கடை வைத்திருந்தவர் என்பது விசேஷம்.எனினும் இந்த செல்போனுக்கு அடிப்படை ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தது அமெரிக்காவின் நியூஜெர்சியை அடுத்து 'முர்ரேஹில்' பகுதியில் உள்ள 'பெல்' லேபாரட்டரிதான்.இவர்கள்தாம் வயர்கள் இல்லாத வாக்கி - டாக்கி ரேடியோவை 1947-ல் கண்டுபிடித்து ராணுவ உபயோகத்திற்காக தந்தார்கள். இது அதிக எடைகொண்டதாக இருந்தது. இதனை 1960 வாக்கில் ஓரளவுக்கு நவீனமாக்கினார்கள். இதைத்தொடர்ந்துதான் 1973-ல் மார்ட்டின் கூப்பர் நவீன உயர்ரக செல்போனை கண்டுபிடித்தது. 1990-ல் உலகம் முழுவதும் செல்போன்கள் முற்றிலும் நவீன யுகத்திற்கு போய்விட்டன. செல்போனை கண்டு பிடித்ததற்காக கடந்த 2003-ல் வார்தான் இன்போசிஸ் பிசினஸ் டிரான்ஸ்பர்மேசன் விருது கிடைத்திருக்கிறது மார்ட்டின் கூப்பருக்கு!முதல் செல்போனை 'மோட்டோரல்லா' கண்டு பிடித்தாலும் இன்று உலகம் முழுவதும் செல்போன் வியாபாரத்தில் சக்கைப் போடு போடுவது 'நோக்கியா' நிறுவனம் தான்! உலகில் 36 சதவீதம் பேர் இதைத்தான் வைத்திருக்கிறார்கள். இது தவிர எல்.ஜி. மிட், சுபிசி, பேனாசோனிக், சோனி எரிக்சன், சன்யோ, சாம்சங், சைமன்ஸ், தோஷிபா, பிலிப்ஸ் நிறுவனங்களும் போட்டியில் உள்ளன.இன்றைக்கு உலகம் முழுக்க சுமார் 350 கோடி பேர் செல்போன் வைத்திருக்கிறார்கள். இவர்களில் அதிகம் பேர் செல்போன்கள் வைத்து நம்பர் 1 இடத்தில் இருப்பவர்கள் சீனாக்காரர்கள். இங்கு 50 கோடி பேரிடம் செல் இருக்கிறது.இந்தியாவை பொறுத்த வரையில் கடந்த 2007 ஜுன் மாத கணக்குப்படி பதினெட்டே முக்கால் கோடி பேரிடம் செல்போன் இருக்கிறது. இந்தியாவில் மாதத்திற்கு 73 லட்சம் செல்போன்கள் விற்கின்றன. வருகிற 2010-ம் ஆண்டுக்குள் 50 கோடி செல்போன்கள் விற்பனையாகும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.உலகின் பல நாடுகளில் ஜனத்தொகையை விடவும் செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இதில் லக்சம்பர்க்காரர்கள் 164 சதவீதம் செல்போன் வைத்து உலகின் முதல் இடத்திலும், ஹாங்ஹாங்கினர் 117 சதவீதம் செல்போன் வாங்கி 2-ம் இடத்திலும் இருக்கின்றனர்.


வருகிற 2015-ம் ஆண்டு உலகின் 90 சதவீதம் பேரிடம் செல்போன் இருக்குமாம்.'அதிர்ச்சி' இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. ஒருவேளை இந்த செல்போனே உலகை அழிக்க காத்திருக்கும் சுனாமி எமனாக இருக்கலாம்.எந்த ஒரு அபாயகரமான சூழ்நிலையையும் அது வரும் முன்பே கண்டுபிடித்து உலகுக்கு எச்சரிக்க வேண்டியது விஞ்ஞானிகளின் கடமையாகும்.அந்த வகையில் செல்போன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வேகமாக வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன. அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக மையம் நடத்திய ஆராய்ச்சியில் செல்போனின் அதீத பயன்பாட்டால் மூளையில் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடித்தது, எனினும் அறிக்கைக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இது ஒரு தற்காலிக முடிவு என்று விட்டுவிட்டார்கள். செல்போன் என்பது சமீபத்தில் தான் கண்டு பிடிக்கப்பட்டது என்பதால் இதுபற்றிய உண்மைகளை அறிய கால அவகாசம் தேவைப்படும் என்று உலக விஞ்ஞானிகள் அறிவித்த பட்சத்தில் உலக சுகாதார மையமும் முன்னர் அமெரிக்கா கண்டுபிடித்த விஷயத்தில் மூக்கை நுழைத்து 'ஆம்' என்று கூறியிருக்கிறது.கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து செல்போனை உபயோகித்து வந்த 3 ஆயிரம் பேரை பரிசோதித்து பார்த்தபோது அவர்களில் 40 சதவீதம் பேருக்கு மூளையில் கேன்சர்கட்டிகள் உருவாகி உள்ளது. இவை 2 விதமான புதிய கேன்சர் நோயாக உள்ளன.பொதுவாக செல்போனில் இருந்து வெளிவரும் 'ரேடியேசன்' என்ற கதிர்வீச்சு மிகக் குறைந்த அளவுதான் என்றாலும் அது மனித உடலின் திசுக்களை ஓரளவு பாதிக்கத்தான் செய்கிறது.செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் இத்தகைய ஆபத்து. காதையும் உட்காதையும் மூளையுடன் இணைக்கின்ற 'ஆக்யூஸ்டிக் நியூரோம்ஸ்' என்கிற நரம்பு பாதிப்பும் இவர்களுக்கு ஏற்படுகிறதாம். அதிக அளவு செல்போன் உபயோகிப்பவர்களுக்கு மூளைச் செயல்பாடுகள், தூக்கம், விழிப்புணர்வு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுவதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயம் உடல் திசுக்கள் முழு வளர்ச்சி அடையாத நிலையில் குழந்தைகளும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் கதிர்வீச்சுகள் இவர்களின் திசுக்களை மிக எளிதாகவே பாதித்துவிடும் என்ற நிலையில் இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நீண்டகாலம் செல்போனை பயன்படுத்தியவர்கள் ஆகிறார்கள். எனவே அதிக ஆபத்து இவர்களைச் சூழ்ந்திருக்கிறது என்கிறார்கள்.இதுபற்றி அயிஸ் செல்சின், லாவரிசாலிஸ் என இரு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்த வண்ணம் இருக்கிறார்கள்.இதுதவிர உளவியல் ரீதியான ஆராய்ச்சி முடிவு களும் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களில் 60 சதவீதம் பேருக்கு கோப குணமும், தலைவலியும், பெருகுவதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவேளை செல்போனால் கேன்சர் நோய் உறுதி செய்யப்பட்டால் 2015-ல் உலகில் 90 சதவீதமான மக்களின் கதி என்னவாகும். - 'இப்பவே கண்ணைக்கட்டுதே"


எச்சரிக்கை டிப்ஸ்: செல்போன் என்பது அடிப்படை தகவல் பரிமாற்றத்திற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதனை நம்மவர்கள் நீண்ட நேர அரட்டைக் கச்சேரிக்காக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். பேசுவது காதலியாக இருந்தாலும் கூட ஒருவரிடம் 20 நிமிடங்களுக்கு அதிகமாக பேசாதீர்கள். நட்புகளை வளர்த்துக் கொண்டு அதிகம் பேரிடம் இடைவெளியின்றி பேசாதீர்கள். போதிய ஓய்விற்கு பிறகே அடுத்தவரிடம் பேச வேண்டும். ஒரே சமயத்தில் பல போன்களில் பேசாதீர்கள். வள, வள பேச்சுக்களை தவிருங்கள். இரவில் செல்போனுக்கும் ஓய்வு கொடுத்துவிடுங்கள்.

No comments: