August 31, 2007

'அகில இந்திய சமத்துவமக்கள் கட்சி'

நடிகர் சரத்குமாரின் புதிய கட்சி இன்று மாலை உதயமானது. புதிய கட்சிக்கு 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நடிகர் விஜயகாந்த்தைத் தொடர்ந்து சரத்குமாரும் அரசியல் களம் கண்டுள்ளார். தனது கட்சி இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் சரத்குமார். அதன்படி இன்று மாலை சென்னை வடபழனி பத்மாராம் கல்யாண மண்டபத்தில் சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். சரியாக இன்று (31-08-2007) மாலை 6.30 மணிக்கு தனது கட்சியின் பெயரை அவர் அறிவித்தார். தனது புதிய கட்சிக்கு 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்று பெயர் சூட்டியுள்ளார் சரத்குமார். கட்சியின் தலைவராக சரத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். பிற நிர்வாகிகள் விவரம்: அவைத் தலைவர் - முருகன் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி) பொதுச் செயலாளர் - கரு. நாகராஜன் துணைத் தலைவர் - எர்ணாவூர் நாராயணன். பொருளாளர் - செல்வராஜ். துணை பொதுச் செயலாளர் - சுந்தரேசன் கொள்கை பரப்புச் செயலாளர் - மருது அழகுராஜா. கட்சிப் பெயரை அறிவித்து செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில், இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக, ஒரு புதிய அரசியல் நாகரீகத்தை உருவாக்கவே இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களை அரசியல் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். அவர்கள் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகிறோம். அதை ஏற்படுத்தக் கூடிய தகுதி படைத்தது எங்களது கட்சி மட்டும்தான். மற்ற கட்சிகளுக்கு அந்த அருகதை கிடையாது. பிற கட்சிகள் எல்லாம் தங்களது சுய லாபத்திற்காக தொடங்கப்பட்டவை. நாங்கள் அப்படி இல்லாமல், இன்றைய இளைஞர்களை ஆக்கப்பூர்வமான வழியில் அரசியலில் ஈடுபடுத்தி புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காட்டிய வழியில்தான் நாங்கள் போகப் போகிறோம். அவர் கண்ட கனவையே நாங்களும் காணுகிறோம். எங்களது முக்கிய நோக்கம் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான். அதே நோக்கத்தில்தான் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. இரு கட்சிகளுக்கும் ஒரே நோக்கம்தான். எனவே எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார் சரத்குமார்.

No comments: