September 30, 2007

பிளாக்மெயிலுக்காக கருணாநிதி உண்ணாவிரதம்!?

  • சுப்ரீம் கோர்ட் தடை என்ன ஆச்சு? : பொதுமக்கள் கேள்வி


சென்னை : தமிழகத்தில் பந்த் நடத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தடை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் வழக்கம்போல பஸ்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை முதலே மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும் பஸ்கள் ஓடவில்லை. ஒரு சில இடங்களில் திறக்கப்பட்டிருந்த கடைகளையும் மூடச் சொல்லி வற்புறுத்தப்பட்டன. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு விட்டன. இதனால் சுப்ரீம் கோர்ட் தடை என்ன ஆச்சு என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பஸ்சுக்காக காலையில் இருந்து மணிக்கணக்கில் காத்திருந்த ‌பொதுமக்கள் அரசு பஸ்கள் இயக்கப்படாததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

  • உண்ணாவிரதம் துவங்கினார் கருணாநிதி : ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு


சென்னை : தி.மு.க. அறிவித்த முழு அடைப்புக்கு சுப்ரிம் கோர்ட் தடை விதித்ததைத் தொடர்ந்து இன்று (1ம்தேதி) உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதையொட்டி சென்னை வாலாஜா சாலை அரசினர் விருந்தினர் இல்லம் முன்பு இரவோடு இரவாக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. காலை 9 மணிக்கு முதல்வர் கருணாநிதி உண்ணாவிரத மேடைக்கு வந்து அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார். அவருடன் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், காங்கிஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் ராஜா, திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஜி.‌கே.வாசன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர்கள் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, அன்பழகன் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதேப்போல தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

  • கோவையில் கடைகளை மூடச் சொல்லி கல்வீச்சு பதட்டம்


கோவை : கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கோவை சாய்பாபா காலனியில் ஓருசில கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அங்கு வந்த ஒரு கும்பல் கடைகளை மூடச் சொல்லி வற்புறுத்தியது. கற்களை வீசி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

  • தமிழகம் முழுவதும் பஸ்கள் ஓடவில்லை : பந்த் இல்லை என்பது கண்துடைப்பு


சென்னை : சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (1ம் தேதி) பந்த் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பந்த்திற்கு சுப்ரிம் கோர்ட் நேற்று அதிரடியாக தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சேது திட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் இருப்பார்கள் என்று முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி அறிவித்தார். பந்த் இல்லை என்று தெரிவித்திருந்தாலும் மாநிலம் முழுவதும் பஸ்கள் எதுவும் இன்று ஓடவில்லை. சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி என அனைத்து நகரங்களிலும் அரசு பஸ்கள் இயங்கவில்லை. கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடாததால் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பந்த் இல்லை என்பது வெறும் கண்துடைப்பாகிப் போனது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளானார்கள்.

  • மதுரையில் தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு


மதுரை : முழு அடைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மதுரையில் இயக்கப்பட்ட தனியார் பஸ் மீது கல் வீசி தாக்கப்பட்டது. காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் நின்ற பஸ் மீது மர்ம கும்பல் கற்களை வீசியது. இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன. நகரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை.



பிளாக்மெயிலுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் : வி.எச்.பி. கருத்து


அகமதாபாத் : சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி தமிழகத்தில் தி.மு.க. சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததைத் தொடர்ந்து இன்று (1ம்தேதி) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விசுவ இந்து பரிஷத் தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா, கருணாநிதியின் உண்ணாவிரதம் பிளாக்மெயில் போல உள்ளது என்றார். சுப்ரிம் கோர்ட்டின் உத்தரவு மகிழ்ச்சி தரத் தக்கதாக இருப்பதாகவும் தொகாடியா கூறியுள்ளார்.

No comments: