September 18, 2007

‘நான் முதல்வர் ஆக முடியாதா?’ - விஜய டி.ராஜேந்தர்

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. அணியில் இருந்த லட்சிய தி.மு.க.வின் தலைவர் விஜய டி.ராஜேந்தர் கடைசி நேரத்தில் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் வெளியேறி, தி.மு.க. அணிக்காக பிரசாரம் செய்தார். ‘சுங்குவார் சத்திரத்தில் சுக்குக் காப்பி விற்றாலும் விற்பானே தவிர, சுயமரியாதையை எப்போதும் இழக்கமாட்டான் இந்த ராஜேந்தர்’ என்று அந்த நேரத்தில் சொன்னார். இப்போது தி.மு.க. அணியில் தனது சுயமரியாதைக்கு, பங்கம் வந்திருப்பதாகச் சொல்லி கலைஞர் மீதும் தி.மு.க. மீதும் விமர்சனங்களைச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து முதலில் பொதுக்குழுவை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அறிவித்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளில் இருந்த ராஜேந்தரைச் சந்தித்தோம். எப்படிப் பேசியிருப்பார் என்று சொல்லத் தேவையில்லை. பேட்டிக்குள் போகலாம்...
  • ஏன் இந்தத் திடீர் ஆவேசம்?
‘‘எனக்கென்னவோ இது ஆவேசத் தாக்குதல் மாதிரி தெரியவில்லை. ஆசுவாசமான தாக்குதல்தான். வழக்கமான மனநிலையுடன் இருந்துவரும் நான், என் மனதில் எழுந்த கேள்விகள் மற்றும் நெருக்கடிகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். உதாரணத்திற்கு, நான் சமீபத்தில் நாகர்கோயிலுக்குப் போயிருந்தேன். எங்கள் கட்சி நிர்வாகிகள் அப்போது என்னைச் சந்தித்தார்கள். ’கட்சிக்குப் பெயர் வைக்கும் முன்பாகவே சரத்குமாருக்கு வாழ்த்துச் சொல்கிறார் கலைஞர். அதுதான் அரசியல் நாகரிகம். என்றாலும் நம்மை ஒரு கட்சியாகவே அவர் மதிக்க மாட்டேன் என்கிறாரே?’ என்று கேட்டார்கள். நானும் இதுபற்றி யோசித்துப் பார்த்தேன். சரத்குமார் கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்காக ஓட்டுக் கேட்டவர். நான் தி.மு.க.வுக்காக மாநிலம் முழுக்க பிரசாரம் செய்தவன். என்னுடைய வரவுக்காக தி.மு.க. தலைவர்கள் காத்திருந்து பிரசாரத்துக்கு அழைத்துச் சென்றார்கள். தி.மு.க.வுக்கு எதிராக வைகோ கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டபோது, அதற்குப் பதில் சொல்ல தி.மு.க.வில் ஆளே இல்லை என்ற நிலையில், இந்த டி.ஆர்.தான் அதை எதிர்கொண்டு சமாளித்தான். அவர்கள் இல்லை என்று மறுக்க முடியுமா? தேர்தல் முடிந்ததும் கலைஞர் எனக்கு போன் செய்து நன்றி சொன்னார்.ஆனால், கடந்த ஓராண்டாகவே எங்களை ஒரு பொருட்டாகவே அவர்கள் மதிக்கவில்லை. ஆனாலும் என்னை பத்திரிகையாளர்கள் சந்தித்து இந்த ஆட்சி பற்றி கேள்வி கேட்கும்போதெல்லாம் நான் மென்மையாகவே பதில் சொல்லி வந்திருக்கிறேன். அப்படி இருந்தும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டமாக இருந்தாலும் சரி... அனைத்துக் கட்சிக் கூட்டமாக இருந்தாலும் சரி... எங்களை மதித்து அழைப்பதே இல்லை. உள்ளாட்சித் தேர்தலின்போதும் எங்களை மதித்து இடங்களை அளிக்கவில்லை. ஆனாலும் பிரசாரம் செய்ய அழைத்தார்கள். நான் போகவில்லை. நான் தன்மானம் உள்ளவன். தேவை என்றால் பயன்படுத்திக்கொள்வது, பின்பு திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்பதை எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்?கூட்டணியில் இருந்துகொண்டே இந்த ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கும் பா.ம.க.வை தாங்குதாங்கென்று தாங்குகிறார்கள். எங்கள் இயக்கம் என்றால் அவ்வளவு மட்டமா? ஆக கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதிலேயே ஒரு குழப்பமான சூழ்நிலை. இந்த நிலையில்தான் என்னுடைய கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி எங்கள் கட்சியின் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.
  • ஜெயலலிதாவாவது எனக்கு உரிய மரியாதை தந்தார். ஆனால் கலைஞர் மதிக்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறீர்களே...அப்படி என்ன நடந்துவிட்டது?
‘‘காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதி இடைத்தேர்தல்களின் போது கலைஞர் ஏழு கட்சிக் கூட்டணியுடன் பலமாக இருந்தார். அந்த நேரத்தில் என்னை அழைத்த புரட்சி செல்வி (ஜெயலலிதாதாங்க..), அ.தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்யச் சொன்னார். சங்கராச்சாரியார்கள் கொலை வழக்கில் கைதான பின்பு, காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க.வை ஆதரித்து யாருமே பேசத் தயங்கிய நேரத்தில் நான் போய்ப் பேசினேன். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்ததற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன். அந்தம்மாவும் தனது நன்றியை வெளிப்படுத்தினார். பின்பு போட்டியிடும் இடங்கள் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாட்டால் சுயமரியாதையோடு வெளியேறினேன்.ஆனால், தி.மு.க.வுக்காக நான் கடுமையான உழைப்பை வெளிக்காட்டியும் கூட என்னை, என் இயக்கத்தை அங்கீகரிக்க அவர்கள் தயங்குகிறார்கள்.. மறுக்கிறார்கள்... அதன் அடிப்படையில்தான் அந்தக் கருத்தைச் சொன்னேன்.
  • அதெல்லாம் சரி...உங்கள் கட்சிக்கு பத்து சதவிகித ஓட்டு இருப்பதாகச் சொல்கிறீர்களே.. உங்களுக்கே இது சரியாகப்படுகிறதா?
அப்படி இல்லையென்றால், நான் பேசினால்தான் கூட்டம் வரும் என்று சொல்லி அந்தம்மாவும், கலைஞரும் மாறி மாறி அழைத்தார்களே ஏன்? நான் மக்கள் கூட்டத்தை ஈர்ப்பவன் என்பதால்தானே? இது பொய் என்றால் ‘இல்லை.. ராஜேந்தர் சொல்வது தவறு’ என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். இன்றைக்கு டி.வி.ல கூட டி.ஆர். புரோகிராம் என்றால் டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறுதுல்ல... அட...ஒரு பத்திரிகையில் என் பேட்டி வருகிறது என்றால் அந்தப் பத்திரிகை பரபரப்பாக விற்கிறது. உங்களுக்கு எத்தனை எம்.பி. சீட் வேணும்னு இப்பவும் என்னைப் பார்த்துக் கேட்கும் நிலையில்தான் நான் இருக்கிறேன். எனக்கு எந்த ஆதரவும் இல்லையென்றால் எப்படி இப்படிக் கேட்பார்கள்? ‘என் நாக்கில் சரஸ்வதி இருக்கிறாள்’ என்று வெண்ணிற ஆடை மூர்த்தி சொல்கிறார்... எங்கே போனாலும் என்னால் சரளமாகப் பேச முடியும். என் திறமை வெளிப்படுகிறது... மக்களிடம் எனக்கு இன்னமும் செல்வாக்கும் நம்பகத்தன்மையும் இருக்கிறது. நடுநிலை வாக்காளர்களை என் பக்கம் திருப்பும் சக்தி எனக்கு உண்டு. 30 சதவிகித வாக்குகளை இப்படி என்னால் திருப்ப முடியும். இந்த நிலையில் எப்படிச் சொல்ல முடியும் எனக்கு செல்வாக்கு இல்லையென்று?’’
  • பத்து சதவிகித வாக்குகள் இருக்கிறது’ என்று விஜயகாந்த் சொன்னால் நம்பலாம். அவர் தன்னை நிரூபித்திருக்கிறார். ஆனால் நீங்கள் சொல்வதை இன்னமும் நம்ப முடியவில்லையே...?
என்ன... அவர் பத்து சதவிகிதம் வச்சிருக்கார்.. பத்து சதவிகிதம் வச்சிருக்கார் என்றே சொல்கிறீர்கள்? அவர் எப்போது அரசியலுக்கு வந்தார்? ஒண்ணு தெரிஞ்சுக்கங்க.. இவனும் வேணாம்.. அவனும் வேணாம்.. என்று சொல்லி குப்பைலகூட தங்களோட ஓட்டைப் போடும் நடுநிலையாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அந்த ஓட்டிலிருந்துதான் நான் பர்கூரில் நாற்பதாயிரம் ஓட்டு வாங்கினேன். ‘ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பது மாதிரி, ஆளே இல்லாத நேரத்தில்தான் விஜயகாந்தின் இந்த ஆட்டமெல்லாம். நான் இதோ முழு வீச்சில் களத்தில் இறங்கப் போகிறேன் . இப்போ வாங்க பார்ப்போம்.. இதுவரை என் செல்வாக்கை தி.மு.க. வெற்றிக்கு நான் பயன்படுத்தினேன்..அ.தி.மு.க. வெற்றிக்குப் பயன்படுத்தினேன்.. இப்போ நான் சொல்றேன்.. தி.மு.க.வும் இல்ல.. அ.தி.மு.க.வும் இல்ல.. நடுநிலையாளர்களின் ஓட்டைப் பிரிக்க நான் வருகிறேன். இப்போ சந்திப்போம் வாங்க.. இதான் சவால்..இதான் போட்டி.ஆக, அவர் வாங்கிய பத்து சதவிகித ஓட்டு அவருக்கு விழுந்தது இல்லை. சரி அப்படியே விழுந்ததுன்னு சொன்னா எங்கே அவர் படத்துக்கு இப்போ கலெக்ஷன் காட்டச் சொல்லுங்க பார்க்கலாம்..? சபரி படத்தோட நிலை என்ன? அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரின் நிலை என்ன?234 தொகுதிகளில் போட்டியிட்டு பல கோடி செலவு செய்து, ஒரே ஒரு தொகுதியில் ஜெயிப்பது சாதனை அல்ல. இவர் அடுத்த முதல்வர் ஆவேன் என்கிறாரே ஏன் ஒரு இடம்தான் ஜெயிக்க முடிந்தது? நான் முதல்வர் ஆவேன்னு சொல்லலை. என் இலக்கு நடுநிலையான அந்த முப்பது சதவிகித வாக்குகளை என் பக்கம் திருப்ப வேண்டும் என்பதுதான். அது ஒரு பிராசஸ். பொருத்திருந்து பாருங்க.
  • உங்களின் இந்தத் திடீர் விமர்சனத்திற்குப் பின்னால் மாறன் சகோதரர்கள் இருக்கிறார்கள் என்றொரு விமர்சனம் இருக்கிறதே..?
யாருடைய ஹேஷ்யம், ஜோதிடம் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. நான் இந்தப் பேட்டி கொடுத்த அடுத்த நாளே சுனாமி வருதுன்னா பாருங்க.. யாராவது எதிர்பார்த்தார்களா? நான் சன் டி.வி.ல புரோகிராம் பண்றேன். Êசக்சஸ்புல்லா போகுது. கலைஞர் டி.வி.லயும் என்னைக் கூப்பிட்டார்கள். நான் பிசியாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இன்றைக்கு இந்த ராஜேந்தரால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று கலைஞரைச் சொல்லச் சொல்லுங்கள்..அப்புறம் பாருங்கள் எனக்கு எந்தெந்த கதவுகள் திறக்கிறது என்று. எனக்குக் கொடுத்த சீட்டை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தன்மானத்தோடு வெளியே வந்தவன் இந்த டி.ஆர்.! அப்படிப்பட்ட நான் யாருடைய பேச்சையும் எந்தச் சூழ்நிலையிலும் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. இறைவனுக்கும் என் தொண்டனுக்கும் மட்டும்தான் நான் அடிபணிவேன்.
  • சரி..லட்சிய தி.மு.க.வின் லட்சியம்தான் என்ன?
எல்லா கட்சியும் இன்று ஜாதி, மத அடிப்படையில் செயல்படுகின்றன. நான் மட்டும்தான் என் கட்சியை ஜாதி, மதங்களைக் கடந்து மதநல்லிணக்க இயக்கமாக நடத்துகிறேன். இன்றைக்கு தமிழ்நாட்டில் பெண்களின் வாக்குகளை என்னைத் தவிர வேறு யாரால் வாங்க முடியும் சொல்லுங்க.. அந்த அளவுக்குத் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வேறு எந்த நடிகனாவது இந்த விஷயத்தில் என்னோடு போட்டி போட்டு வரமுடியுமா சொல்லுங்க.? நான் ஜாதி அரசியல் பண்ணலை. ஆந்திராவில் இருந்து எனக்குப் பணம் வரலை. கட்சிப் பதவியை பணத்துக்காக விற்கலை. அடிமட்டத் தொண்டனை மதிக்கிறவனா இருக்கிறேன்.ஊழலை எதிர்க்கிறேன்னு சொல்றாரே விஜயகாந்த்.. அவர்கூட இருக்கிற கு.ப.கி. யாரு? பொன்னுசாமி யாரு? அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர்களா? தூய்மையை தொட்டில் கட்டி ஆட்டியவர்களா? வாய்மையை வாய்க்கால் வெட்டிக் காத்தவர்களா? சுத்தமான கரத்துக்குச் சொந்தக்காரர்களா? இவர்களை வைத்து எப்படி இவர் ஊழலை ஒழிப்பார்? என்கிட்ட இதுவரை எந்த முன்னாள் மந்திரியும் வரலை. காரணம், என்னோட ‘மிஸ்டர் கிளீன் இமேஜ்’. விஜயகாந்தை ஊடகங்கள்தான் பெரிதாகக் காட்டுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை காலம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் முன்னுக்குக் கொண்டு வந்து வைக்கும். ‘வல்லவன்’ படத்தில் ஒரு டயலாக் உண்டு. யார் முன்னாடி போறதுங்றது முக்கியம் இல்ல. ‘யார் முந்தியடித்து முதலாவதா வராங்கங்றதுதான் முக்கியம்’. எனக்கு இப்போ எந்தக்கட்டுப்பாடும் இல்ல. இளைஞர்கள் முழுமையா என் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். இவர்களை வைத்து எதிர்கால தமிழகத்தை உருவாக்கும் சக்தியா எங்கள் இயக்கத்தை ஆக்குவதுதான் லட்சியம்.’’
  • ‘நான் முதல்வர் ஆக முடியாதா?’ன்னு கேட்டிருக்கிறீர்கள். ஏன் இப்படி?
நான் அப்படிச் சொல்லவில்லை. ‘நீங்கள் முதல்வர் ஆக முடியுமா’ என்று கேட்டார்கள். ‘நான் ஆக முடியாதுன்னு நீங்க சொல்ல முடியுமா’ன்னு கேட்டேன். நான் கேக்குறேன்.. அடுத்தவர் எழுதிக் கொடுப்பதைப் பேசி, அறிக்கையாக வெளியிடும் தலைவர்கள் இருக்கும்போது, சொந்தமாக நல்ல தமிழைப் பேசும் நான்.. எம்.ஜி.ஆரை எதிர்த்து எதிர்நீச்சல் போட்ட நான், கலைஞருடன் சமகாலத்தில் அவருக்குக்கை கொடுத்த நான், ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு சரிக்குச் சரி நின்ற நான்... ஏன் ஒரு தலைவனாக வரமுடியாது?தவிர நான் ஒரு தமிழன். விஜயகாந்துக்கு ‘திராவிட’ன்னுதான் போஸ்டர்அடிப்பாங்க. அதுக்கு என்ன அர்த்தம்? எனக்கு ‘தமிழன்’னு அடிப்பாங்க. ஆக ஒரு திராவிடனே தமிழ்நாட்டைப் பிடிக்க நினைக்கும்போது ஒரு தமிழன் நான் ஏன் நினைக்கக் கூடாது? இதுதான் சார் இப்போ போட்டியே.’’
  • நீங்கள் முன்பு தனிக்கட்சி நடத்தியபோதும் ‘எனக்குத் தலைவர் கலைஞர்தான்’ என்று சொல்லி இருந்தீர்கள். இப்போதும் உங்கள் தலைவர் கலைஞர்தானா?
‘‘அது அப்போ சொன்னேன். அதனாலதான் தலைவருக்கு ஒரு இக்கட்டு என்று சொன்னபோது என் கட்சியை தி.மு.க.வுடன் இணைத்து தேர்தலின்போது உதவினேன். ஆனால் லட்சிய தி.மு.க.வை நான் தொடங்கிய பின்பு ஒரு விஷயம் முடிவு பண்ணிட்டேன். இனிமே யாரையும் தலைவன்னு சொல்றதில்ல. சார், முதல்வர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டி போடட்டும். ஆனா தமிழ்நாட்டில், தமிழினத்தின் தலைவனாக நான் வருவேன். அதற்கான அனுபவமும் தகுதியும் நம்பகத்தன்மையும் எனக்கு உண்டு. தமிழ்க் குலத்தின் பிரதிநிதியாக, தாய்க்குலத்தின் அங்கீகாரம் பெற்றவனாக, இளைஞர்களுக்கு தன்னம்பிகை ஊட்டுபவனாக இருந்து அந்த இடத்தை நான் அடைந்தே தீருவேன்.’’
  • உங்களின் இதுமாதிரியான கருத்துக்களைப் பார்த்து சிலர் கிண்டலடிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
‘‘அந்த மாதிரி ஆட்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ‘கடவுளே இல்லை’ என்று சொல்லும் உலகம் இது. காந்தியை சுட்டுக்கொன்றவர்களுக்காக மேடை போட்டுப் பேசும் உலகம் இது. என்னுடைய திட்டங்கள் அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். நான் என்ன கடவுளா, எல்லோரும் ஏற்றுக்கொள்ள? எம்.ஜி.ஆர். ‘அண்ணாயிசம்’ என்று சொன்னபோது ‘அண்ணாயிசமா, பாயசமா’ என்று கிண்டலடித்தவர்கள் பின்பு என்ன ஆனார்கள்? எந்த சாதனையாளனை உலகம் எடுத்த எடுப்பில் அங்கீகரித்திருக்கிறது? கடற்கரையில் சுண்டல் விற்பவனைக்கூட கிண்டல் செய்வார்கள். ஆனால் அவன் வீட்டிற்குக் காசு கொண்டு போவான். கிண்டல் பண்றவன் என்ன கொண்டுபோவான்? அதனால் இதுமாதிரி கிண்டல்களை நான் பொருட்படுத்த மாட்டேன்.’’
  • இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்று சொல்லுங்களேன்?
‘‘எங்கள் கட்சி பொதுக்குழு கூடப்போகிறது. அதுவரை பொறுத்திருங்கள். என் வேகமும் குறையாது. விவேகமும் மறையாது. நான் சரித்திரம் படைக்கக் காத்திருக்கும் சத்ரியன் மட்டும் அல்ல.. சாணக்யன்!’’ என்று தனது ஸ்டைலிலேயே சொல்லி பேட்டியை முடித்துக் கொண்டார் விஜய டி.ராஜேந்தர்.

No comments: