தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகள் : இதில் சமரசம் இல்லை : மருத்துவர் இராமதாசு
இப்படித்தான் வாழவேண்டும் என்று தொன்றுதொட்டு ஆண்டாண்டுகாலமாய் இந்தச் சமுதாயத்தை அரித்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிக் குழுமங்களுக்குள் "இப்படியும் சிறப்பாக வாழலாம்" "இந்தச் சமுதாயத்தைச் சீர்தூக்கிப் பார்க்கலாம்" என்ற ஒரு "மாபெரும் புரட்சி" செய்து.. ... இந்தப் பிரபஞ்சத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் உள்ள கோடானுகோடித் தமிழ்நெஞ்சங்களை, ஏன்? இந்திய நெஞ்சங்களை நன்றியுணர்வோடும், பிரமிப்போடும் "தங்கள் பக்கம்" திருப்பி, சேவைகளிலெல்லாம் பெருஞ்சேவை செய்து வரும் "மகத்தான மக்கள் தொலைக்காட்சி"யை ஒவ்வொரு சமுதாய நல்லெண்ணம் கொண்டவரும் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வரிசையில் இந்தச் சிறியேனும் "நீங்கள் பல்லாண்டு வாழ்க! தங்களின் சேவை இந்த மண்ணுள்ளவரை தொடர்க!! என்று உண்மையான உணர்வுகளோடு வாழ்த்துகிறேன்! "புரட்சியாளன் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறான்" என்பது மக்கள் தொலைக்காட்சிக்காகவே செதுக்கப்பட்டதாக உணர்கிறேன்.
மருத்துவர் இராமதாசு : மக்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும். வர்த்தக காரணங்களுக்காக தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று மக்கள் தொலைக்காட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார். மக்கள் தொலைக்காட்சி இரண்டாவது ஆண்டில் அடிஎடுத்து வைப்பதையொட்டி சென்னை காமராஜர் அரங்கில் வரும் 6-ம் தேதி விழா நடைபெறுகிறது. இதையொட்டி மருத்துவர் இராமதாசு கூறியதாவது : தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ஒரு வித்தியாசமான தொலைக்காட்சி என்று மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மக்கள் தொலைக்காட்சி. தமிழ் மொழியையும் தமிழ் சமுதாய வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. திரைப்படம் அல்லாத அறிவார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி 2-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்படுகின்றன. மக்கள் தொலைக்காட்சி வெற்றிக்கு பாடுபட்டவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள். மத்திய அமைச்சர்கள் பிரிய ரஞ்சன் தாஸ் முன்சி, அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
வீரப்பன் தொடர் : இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சந்தனக்காடு என்ற தொடர் ஒளிபரப்பாகும். மூட நம்பிக்கைகளை தோலுரிக்கும் "வெங்காயம்" வித்தியாசமான இசை நிகழ்ச்சியாக "ஏலேலங்கடி ... ஏலேலோ. 'வணிகர்களுக்கான முகவரி, தமிழ் சமூகத்தின் சமையலை அறிமுகப்படுத்தும் "கைமணம்" இப்படி 18 புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். திரைப்படங்கள்: தரமான திரைப்படங்களை ஒளிபரப்புவது குறித்து பரிசீலித்து வருகிறோம். விளம்பரங்களை ஒளிபரப்புவதில் எங்களுக்கு என்று சில நெறிகளை ஏற்படுத்தி உள்ளோம். அதன்படி "கோக்" "பெப்சி" போன்ற வெளிநாட்டு குளிர்பான விளம்பரங்களை கூட ஒளிபரப்ப மாட்டோம். தற்போது ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்துள்ளோம். இதுபோல் சிங்கப்பூர், மலேசியாவிலும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராமதாஸ்.
No comments:
Post a Comment