November 16, 2007

இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு : ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இடதுசாரிகள் இடையில் புதிய திருப்பம்

இந்தியா – அமெரிக்கா இடையிலான இராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு தொடர்பாக இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், அதற்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா தொடர்பான பாதுகாப்பு உடன்பாடு தொடர்பாக சர்வதேச அணு ஆற்றல் அமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு இதுவரை எதிர்ப்புத் தெரிவித்துவந்த இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை குறிப்பிட்ட அளவுக்கு தளர்த்திக் கொண்டிருக்கின்றன. சர்வதேச அணு ஆற்றல் அமைப்புடன் இந்திய அரசு பூர்வாங்கப் பேச்சுக்கள் நடத்துவதற்கு இடதுசாரிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்காக, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட உயர்நிலைக் கமிட்டியின் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை புதுடெல்லியில் நடைபெற்றது. அதில், இடதுசாரிகள் தங்களது முடிவைத் தெரிவித்தார்கள். இதுபற்றி செய்தியாளர்களிடம் அறிவித்தார் பிரணாப் முகர்ஜி. "இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாட்டுக்கு வழிவக்கும் 1, 2, 3 உடன்படிக்கையின் மீது அமெரிக்காவின் ஹைட் சட்டம் எந்த அளவுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது குறித்தும், சர்வதேச அணு ஆற்றல் அமைப்பின் பாதுகாப்பு உடன்பாடு குறித்தும் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு, இந்தியா தொடர்பான பாதுகாப்புக்கான வரைவு உடன்பாடு குறித்து சர்வதேச அணு ஆற்றல் அமைப்பின் தலைமைச் செயலகத்துடன் பேச்சு நடத்த வேண்டும்.
அரசு அந்தப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும். உடன்பாடு குறித்து இறுதி செய்வதற்கு முன்னதாக, அதுகுறித்து இந்தக் கமிட்டி ஆய்வு செய்யும். இந்தியா – அமெரிக்கா இடையிலான இராணுவம் சாரா அணுசக்தி உடன்பாட்டை அமல்படுத்துவதற்கு முன்னதாக, இந்தக் கமிட்டியின் பரிந்துரைகள் கருத்தில் கொள்ளப்படும்" என்றார் பிரணாப் முகர்ஜி. சர்வதேச அணு ஆற்றல் அமைப்புடன் எப்போது பேச்சு நடத்தப்படும் என்பது குறித்து எந்த விவரங்களையும் அவர் வெளியிடவில்லை. இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலையிலிருந்து இறங்கிவரக் காரணம் என்ன என்பது குறித்து, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: