December 09, 2007

"எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்" அண்ணா கண்ணன் - நேர்முகம் 2

நான் நிலாச்சாரலுக்காக எடுத்த செவ்வி : முதல்பகுதி கடந்த வாரம் பிரசுரமானது நினைவிருக்கலாம். இரண்டுக்குமே இடது பக்கதில் இணைப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

தங்களின் படைப்பால் இதுவரை ஏதாவது சர்ச்சை அல்லது சுவாரஸ்யமான சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறீர்களா?

கவிதையைப் பரிசோதனைக்கு உரிய ஒன்றாக நான் பார்த்து வருகிறேன். என் பள்ளி நாள்களில் என் பள்ளி ஆசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் ஏற்பாட்டில் நடந்த கவிதைப் பட்டிமன்றம் ஒன்றுக்கு நடுவராக இருந்தேன். 1995-ல் கின்னஸ் சாதனைக்காகக் கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை 48 மணிநேரத் தொடர் கவியரங்கம் ஒன்றை நடத்தியது. அதில் சுமார் 30 கவிஞர்கள், ஒருவர் மாற்றி ஒருவர் கவிதை வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதில் நானும் கலந்துகொண்டேன். கவிதையை வடிவ ரீதியாகப் பல சோதனைகளுக்கு உள்ளாக்கியுள்ளேன். சித்திரக் கவிதைகள் எழுதியது அப்படித்தான். தலைகீழாகப் படித்தால் அதே பாடல் வரும் மாலை மாற்று, உதடு ஒட்டாமல் பாடும் நீரோட்டகம், உதடு ஒட்டிப் பாடும் ஒட்டியம், வரிகள் வளைந்து வளைந்து செல்லும் கோமூத்திரி எனப் பல சித்திரக் கவிகள் படைத்துள்ளேன். பலராலும் அவற்றை எளிதில் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. நானே விளக்கம் அளிக்க வேண்டிய நிலை இருந்தது. பிறகு, அத்தகைய கவிதைகளைப் படைப்பதில்லை. பெண் கவிஞர்களின் படைப்புகள் பற்றிய என் பார்வையைக் 'கவிதாயினி' என்ற தலைப்பில் அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தேன். அப்போது, யோனி, முலை எனப் பாலியல் சொற்களைப் பயன்படுத்திக் கவிதை புனைவது குறித்துக் கடும் விமர்சனம் இருந்தது. ஆனால், அது, படைப்பாளியின் உரிமை. அது, படைப்புக்குத் தேவையாக இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும் என அந்தப் போக்கை நான் ஆதரித்து எழுதினேன். அது குறித்துச் சிலர், குறைப்பட்டுக் கொண்டார்கள். இதயம் பேசுகிறது வார இதழில் வயது வந்தவர்களுக்கு மட்டுமான உள்ளடக்கத்தோடு, ஓர் இலவச இணைப்பு அளித்து வந்த நேரம். அதில் நான் சில கவிதைகள் எழுதினேன். 'இல்லை, ஆனால் இருக்கு!' என்ற கவிதைக்கு அமோக வரவேற்பு கிட்டியது. அது, கிளாசிக்கலாக இருந்தது என்று சிலர், வெகு காலத்திற்குப் பிறகும் பாராட்டினார்கள். ஆனால், 'அந்த' மாதிரி கவிதைகளை எப்படி எழுதலாம்.... எனக் கண்டனங்களும் எழுந்தன. எழுத்தாளர் மாலனின் திசைகள் மின்னிதழில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் எப்படி இருக்கும்? என்ற கருவில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்ததோடு சாதகமாகவும் பாதகமாகவும் சில கருத்துகளை வைத்தேன். 'அடுத்த 50-ஆவது ஆண்டிற்குள், நான் சொன்னவற்றுள் ஏதேனும் ஒன்று நடக்காது போனாலும் நான் என் தலையை மொட்டை அடித்துக்கொள்கிறேன், அப்போது என் தலையில் முடி இருந்தால்' என்று முடித்திருந்தேன். கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆயினும் சிலர், நான், எதிர்மறையாகக் கருத்து தெரிவித்ததற்கு வருந்தினார்கள். அந்தக் கட்டுரையில் தமிழ், செம்மொழி அந்தஸ்து பெறும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதன்படியே தமிழ், செம்மொழி ஆகிவிட்டது.


தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், இங்கிலாந்தின் இன்னொரு மாநிலம்தான் தமிழகம் என்று எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து?

தமிழகத்தில் ஆங்கிலத் தாக்கம் அதிகம் என்பது ஊரறிந்த உண்மை. தாங்கள் கலப்புத் தமிழில் பேசுவதோடு மட்டுமின்றி, யாரேனும் நல்ல தமிழில் பேசினால், அவரைக் கேலி செய்து, பிழைக்கத் தெரியாத ஆள் என முத்திரை குத்தும் குணம் பலரிடமும் உள்ளது. இது, இரட்டைக் குற்றம். மிகவும் போலித்தனமான ஒரு வாழ்வை இங்கே பலரும் வாழ்கிறார்கள். ஆங்கிலத்திலோ, தமிழிலோ தனித்துப் பேசும் வல்லமை இல்லாமல், இரண்டையும் கலந்து பேசித் திரிகிறார்கள். இது, தமிழனின் மொழியாற்றல் வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்றைய சிறுவர்களிடம் பெற்றோர் - ஆசிரியர் - ஊடகங்கள் - சமூகம் என ஒட்டுமொத்தமாக ஆங்கிலத்தைத் திணித்து வருகிறார்கள். இது, அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழுக்குப் பெரும் இழப்பை அளிக்கும். இங்கிலாந்தின் இன்னொரு மாநிலம்தான் தமிழகம் என்று எழுத்தாளர் பிரபஞ்சன் கூறியிருப்பதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எழுத்தாளர்கள் பிரபலமாகும் போது ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாகிவிடுகிற வாய்ப்புகள் ஏற்படுகின்றனவே? இன்றைய சூழலில் அண்ணாகண்ணன் எப்படி?

அரசியல் என்பதை நேரிய நிர்வாகம், சீரிய வழிநடத்தல், ஒளிவு மறைவற்ற மக்களாட்சி என உயர்ந்த தத்துவங்களின் அடிப்படையில் நான் காண்கிறேன். அத்தகைய அரசியலில் எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால் போலித்தனம், இலஞ்சம், ஊழல், ஊதாரித்தனம், ஏமாற்றுதல், சுரண்டல், இரட்டை நாக்கையும் மிஞ்சி, 20 நாக்குகளுடன் பேசுதல், அதிகார துஷ்பிரயோகம், பாரபட்ச அணுகுமுறை, தீர்க்க தரிசனமற்ற திட்டங்கள், மக்களை மழுங்கடித்து, சாதி - மத - இன உணர்வுகளைத் தூண்டி வாக்கு வேட்டை ஆடுவது என எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலோர் உலவுகிறார்கள். இது குறித்துப் பெரும் கவலையும் துக்கமும் உண்டாகிறது. இதற்கான தீர்வுகள் குறித்துச் சிந்தித்து வருகிறேன். மக்களிடம் பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தி, நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். ஓரளவுக்கு என்னைத் தற்காத்துக்கொண்ட பின், பொதுநல ஊழியனாகி, இந்தச் சமுதாயத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. என் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குத் தமிழில் மின்னாளுகை என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இதன் மூலம் வெளிப்படையான, விரைவான, சிக்கனமான ஆட்சி நடத்த வாய்ப்பு உண்டு.


தமிழ்ப்பெண் எப்படி இருக்கவேண்டும் என்று பதிவிட்டிருந்தீர்கள். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு வித்திட்டது எது? .....

No comments: