December 06, 2007

நடிகர் விஷாலின் தமிழ்ப் புரட்சி

ஏற்கனவே புரட்சி கலைஞர் விஜயகாந்த், புரட்சி தமிழன் சத்யராஜ் ஆகியோர் ஆற்றி வரும் தமிழ்ப் புரட்சி நாம் அனைவரும் அறிந்ததே. இது போதாதென்று புரட்சித் தளபதியாக நடிகர் விஷால் உருவெடுத்துள்ளார். அப்படி என்ன தமிழ்ப் புரட்சி அவர் செய்துவிட்டார் என்ற கேள்வி உங்கள் அனைவரிடமும் எழலாம். அவர் செய்த புரட்சி குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு மிகப்பெரிய பட்டியலாக நீண்டு செல்கிறது.
  1. சண்டைகோழி என்ற படத்தில் "ஒரு நிமிஷம்" என்ற வசனத்தை மிக அழகாக "ஒனிஷம்" என்று சொல்லி அவர் ஆற்றியது மிகப்பெரும் புரட்சியன்றோ?
  2. சிவப்பதிகாரம் படத்தில் ஒரு நீண்ட வசனம் வரும். பத்துக்கும் மேற்பட்ட தமிழின் சிறப்பு "ழ" கரம் இடம் பெரும் பல வார்த்தைகளைக்கொண்ட வசனம் அது. ஒவ்வொரு தடவையும் "ழ" கரத்தை மிக அழகாக "ல" கரமாக உச்சரித்து அவர் செய்த தமிழ்ப் புரட்சிக்காகவே ஓராயிரம் புரட்சிப் பட்டங்கள் தரலாம்.


எப்பொழுது நடிகர் விஷால் புரட்சித் தளபதியாக பெயர் எடுத்தாரோ அதற்குமேல் கார்ல் மார்க்ஸ், லெனின், சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, நேதாஜி, பகத்சிங், பிரபாகரன் போன்ற மாபெரும் புரட்சியாளர்களை இனிமேல் "புர்ச்சியாளர்கள்" என்று விஷால் பாணியில் அழைப்பதே சாலப்பொருந்தும்.

என்ன சொல்கிறீர்கள் என் இனிய தமிழ் மக்களே?

No comments: