November 13, 2007

மணமகன்: செல்வகுமார், மணமகள்: நாய்

  • காங்கிரஸ் இடதுசாரிகள் இடையிலான கருத்துவேறுபாடுகளில் திருப்புமுனை சமரசமா? சர்ச்சைக்குரிய இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடது சாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்து நேயர்கள் அறிவார்கள். இன்று இந்த விஷயத்தில் ஒரு திருப்பம் ஏற்பட்டுவிட்டதாகவும், இந்திய அரசு இந்த ஒப்பந்தம் குறித்து மேலதிக பேச்சுவார்த்தைகளை சர்வதேச அணு சக்தி நிறுவனத்துடன் நடத்தலாம்; ஆனால் இறுதி முடிவை தங்களிடம் கலந்தாலோசித்த பிறகே எடுக்கவேண்டும் என்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளதாகவும் இன்று இந்திய செய்தி நிறுவனங்கள் பல கூறின
  • பாகிஸ்தானில் அவசரநிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தடுக்க நடவடிக்கை : பாகிஸ்தானிய எதிர்க்கட்சித் தலைவியாகிய பேநசிர் பூட்டோ அவர்களால் திட்டமிடப்பட்ட, அவசர நிலைக்கு எதிரான பாரிய போராட்டங்களை தடுக்கும் நோக்கில், அந்நாட்டு அரசு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது
  • மன்னார் மடு தேவாலயப் பகுதியில் எறிகணை வீச்சு : இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை எறிகணைகள் விழுந்து வெடித்ததாகவும், அதில் ஒரு சிறுவனும் வயோதிபப் பெண்ணும் காயமடைந்ததாகவும் தேவாலயத்தில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • திருகோணமலை மோதல்களில் புலிகள் மூவர் கொல்லப்பட்டதாக இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் இலுப்பைக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பின்னிரவு வேளை, அரசாங்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருகின்றது
  • இராக், ஆப்கானிஸ்தான் யுத்த செலவுகள் நினைத்ததற்கு இருமடங்காய் அதிகரித்துள்ளதாக கூறுகிறது ஜனநாயகக் கட்சி : யுத்தங்களினால் அமெரிக்காவுக்கு செலவு அதிகம் என்கிறது ஜனநாயகக் கட்சிஇராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் அமெரிக்கா நடத்திவரும் போர்களுக்கான செலவு முன்பு நினைத்திருந்ததை விட இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது
  • மணமகன்: செல்வகுமார், மணமகள்: நாய் - தமிழ்நாட்டில் பெண் நாய் ஒன்றை இந்துமத சடங்கு முறைகளின்படி திருமணம் செய்துள்ளார் செல்வகுமார் என்பவர். இரண்டு நாய்களை தான் கல்லால் அடித்துக் கொன்றமைக்கு நாயை மணப்பதால் பிராயச்சித்தம் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார். நாய்களை கொன்றதன் பிறகு தான் சபிக்கப்பட்டதாகவும், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதாகவும், காது கேட்காமல் போனதாகவும் செல்வகுமார் கூறுகின்றார். கோயில் ஒன்றில் நடந்த இத்திருமணத்தில் மணப்பெண்ணான நாய் செம்மஞ்சள் புடவை உடுத்தி, மலர் மாலை அணிந்திருந்தது. திருமண விருந்தாக அதற்கு ரொட்டித் துண்டும் கொடுக்கப்பட்டது

No comments: