November 13, 2007

வயித்துக்காக சிறுவன் இங்கே மூங்கில் கம்பத்தில் நடக்கிறான்

அடேங்கப்பா...! மூக்கில் விரல் வைக்க வைத்த "மூங்கில் கால்' சிறுவன்! - கோவை : நேற்று மாலை 4.00 மணி. பகல் முழுதும் சுட்டெரித்து, மலைமுகட்டில் சூரியன் பதுங்க போகும் வேளை. பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவியரும், பணி முடிந்து செல்வோரும் பெரியகடைவீதி பஸ் ஸ்டாப்பில் பஸ் பிடிக்க முண்டியடித்துக் கொண்டிருந்தனர். மாலை நேரம் என்பதால் ரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகமாயிருந்தது. போலீசார் தங்கள் பங்குக்கு, போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்க... பலரது பார்வையையும் ஈர்த்தது அந்த காட்சி. சுமார் 11 அடி உயரமுடைய இரு மூங்கில்களை "கால்'களாக்கி, "ஹாயாக' ரோட்டில் நடந்து வந்தான் சிறுவன். சட்டை பாக்கெட்டின் வெளிப்புறம் 50, 100 ரூபாய் நோட்டுகளை "குண்டூசி'யால் தைத்து பலரது பார்வையிலும் படும் வகையில் தொங்க விட்டிருந்தான். "என்ன வேண்டுதலோ? எவர் பெற்ற பிள்ளையோ?' என மூக்கில் விரல் வைத்து பெரிசுகள் முணு, முணுக்கப் பார்த்தோர் வியந்தனர்.

தலைக்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு ஈடாக, சாலையில் மெதுவாக மூங்கிலின் மேல் "தவழ்ந்து' சென்றான் அச்சிறுவன். பஸ்சில் சென்றவர்கள் கூட தலையை வெளியே நீட்டி, சூரியனை தரிசிப்பதை போல, உயரே பார்த்தனர்...பக்கவாட்டில் வரும் வாகனத்தில் தலை சிக்கினால் உயிருக்கு உலை வந்துவிடுமே, என்ற கவலை சிறிதும் இன்றி. டூ வீலரில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு, வேடிக்கை பார்க்க பெரியகடைவீதியில் கூடியது கூட்டம். பள்ளி சிறுவர்கள், 11 அடி உயர மூங்கில் சிறுவனை அன்னார்ந்து பார்த்து, ஆச்சரியப்பட்டனர். சுற்றி நின்று கைவலிக்க கரவோசை எழுப்பினர். அப்போது, மூங்கில் சிறுவனுடன் "கீழே நடந்து சென்ற' இன்னொரு சிறுவன், வேடிக்கை பார்ப்போரிடம் பரபரப்புடன் "சில்லறை'களை சேகரித்தான். "காசு பார்க்க' இப்படியும் ஒரு வழியா, என அப்போதுதான் புரிந்தது பலருக்கும். இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என பலருக்குள்ளும் எழுந்தது கேள்வி. கேட்டு, விளக்கம் பெறத்தான் யாருக்கும், நேரமில்லை. அந்த குறையை போக்குகிறது, மூங்கில் சிறுவனின் இந்த பேட்டி:

எனது பெயர் பீரு (11). தந்தை தாராஜன், தாயார் இஷா. சொந்த ஊர் ராஜஸ்தான். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகள், நான்கு சகோதரர்கள். நாங்கள் அனைவருமே, உயரமான மூங்கிலில் கால்களை கட்டிக்கொண்டு "உயரே' நடக்கும், பயிற்சி பெற்றுள்ளோம். ஊர், ஊராக "இப்படி' நடந்து சென்று, பொதுமக்களிடம் பைசா வசூலித்து பிழைப்பு நடத்தி வருகிறோம். சென்னையில் இருந்து 20 நாட்களுக்கு முன் கோவைக்கு வந்தோம். தற்போது, ஈச்சனாரியில் தங்கியிருந்து, பல பகுதிகளுக்கும் "இப்படி' சென்று வருகிறோம். சாதாரணமாக காசு கேட்டால் யாரும் தரமாட்டார்கள். இதுபோன்று வித்தியாசமான முறையில் ஏதாவது செய்தால்தான் ஆச்சர்யப்பட்டு, மக்கள் பணம் கொடுப்பார்கள். தினமும் ஏதோ 200-லிருந்து 300-ரூபாய் வரை கிடைக்கும். தம்பி ராம்கிஷன் என்னுடன் வந்து பணம் வசூலிப்பான். மூங்கில் மீது நடப்பதால் கால் வலிக்காதா, என பலரும் என்னிடம் கேட்கின்றனர், வயிற்று பிழைப்புக்காக எல்லாம் பழகிவிட்டது. இவ்வாறு, பீரு தெரிவித்தான்.

No comments: