மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது : மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரது மட்டக்களப்பு இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களான பீ.அரியநேத்திரன் மற்றும் தங்கேஸ்வரி கதிர்காமன் ஆகியோரின் இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல்கள் காரணமாக நீண்ட காலமாக கொழும்பிலேயே தங்கியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத்தில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் வரவு-செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பின்போது, ஆதரவு வழங்க வேண்டும், இல்லையேல் வாக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டும் என கடந்த ஓரிரு நாட்களாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரக்ளுக்கு தொலைபேசி ஊடாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்ததாகவும், இந்தச் சூழலிலேயே இவர்களின் இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று மாலையுடன் நீக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை அரசதரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது
வட இலங்கை வன்முறை - புலிகள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தகவல் : இலங்கையின் வடக்கே வன்னிப் போர்முனைகளிலும், யாழ்ப்பாணம் கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும் இராணுவத்தனருக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
திருகோணமலையில் பொலிசார் தேடுதல் வேட்டை: 23 பேர் கைது : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தெற்கு பிரதேசத்தின் ஈச்சிலம்பற்றுப் பகுதியில் அரசாங்கப்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டாக நடத்திய தேடுதல்நடவடிக்கையின்போது சந்தேகத்தின் பெயரில் 23 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பாகிஸ்தான் மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை எழுபத்தைந்தை தாண்டியது : பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பராச்சினாரில் சுனி மற்றும் ஷியா முஸ்லிம் குழுக்கள் இடையே தொடர்ந்து வரும் மோதலில் எழுபத்தைந்து பேருக்கும் மேல் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இருத்தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மோர்டர் மற்றும் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்
வங்கதேசத்தில் நிவாரணப் பணிகள் தீவிரம் : கடந்த வியாழனன்று கடும் சூறாவளி தாக்கிய வங்கதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் சுறுசுறுப்படைந்து வருகின்றன. நிவாரணப் பணிகள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கும் தபன் சௌத்ரி இந்தப் புயலை ஒரு தேசியப் பேரனர்த்தம் என்று வர்ணித்துள்ளார்
பர்மாவை இடைநீக்கம் செய்யும் கோரிக்கையை நிராகரித்தது 'ஆசியான்' : ‘ஆசியான்’ எனப்படும் தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து பர்மாவை இடைநீக்கம் செய்யுமாறு அமெரிக்க செனட் விடுத்த கோரிக்கையை அவ்வமைப்பின் தலைவர் நிராகரித்துள்ளார்
திமிங்கல வேட்டையை ஆரம்பித்துள்ளது ஜப்பான் : ஜப்பானை சேர்ந்த கப்பல்கள் திமிங்கல வேட்டைக்காக தென் கடற்பகுதியை நோக்கி பயணித்து வருகின்றன. இந்த வேட்டையின் போது பல ஆண்டுகளில் முதன்முறையாக ஹம்பேக் எனப்படும் திமிங்கலமும் வேட்டையாடப்படும். கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஒப்புதல் மூலம் இந்த வகை திமிங்கலம் வேட்டையாடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது ஹம்பேக் திமிங்கிலத்தின் எண்ணிக்கை வேட்டையாட கூடிய அளவுக்கு அதிகரித்து விட்டதாக கூறியுள்ள ஜப்பான், இந்த பயணத்தின் போது ஐம்பது ஹம்ப்பேக் திமிங்கலங்களையாவது கொல்வது என முடிவு செய்துள்ளது. சர்வதேச சமூகத்தில் தனக்கு இருக்கும் மரியாதை ஜப்பான் கெடுத்துக் கொள்ளப் போகிறது என ஆஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது
No comments:
Post a Comment