நிறைய கனவுகள் இருக்கு! - கபடி கவிதா
டெஹ்ரானில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தங்கம் வென்றவரும், இந்திய அணியின் துணை கேப்டனுமான கவிதா: இந்திய பெண்கள் கபடி அணியில் இருக்கும் ஒரே தமிழ் பெண் நான். என் அப்பாவுக்குத்தான் எல்லா நன்றியும். என்னைச் சேர்த்து வீட்டில் அஞ்சு பொண்ணுங்க. அம்மா, ஹார்ட் பேஷன்ட். மூணு வருஷமா போராடி, முடியாமல் இறந்துட்டாங்க. அப்புறம் எங்களுக்கு எல்லாமே அப்பாதான். பல்லவன் டிரான்ஸ் போர்ட்ல பியூனா இருக்கார். ரொம்பக் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். கிரிக்கெட், ஹாக்கி மாதிரியான விளையாட்டுகளைத் தான் நான் முதலில் விளையாடிட்டு இருந்தேன். எந்த உபகரணமோ, பொருளோ இல்லாமல், உடம்பின் சக்தியை மட்டுமே வெச்சு விளையாடுற ஆட்டம் என்பதால், கபடியில் அதிகமா வீரம் இருக்குன்னு ஈர்ப்பு வந்தது. கபடியில் யூனிவர்சிட்டி லெவலில் ஜெயிச்சு, தமிழ்நாடு அணியில் தேர்வானேன். நல்லா விளையாடி, அஞ்சே வருஷத்தில் தமிழ்நாடு அணிக்கு கேப்டன் ஆனேன். என் ஆசைப்படி ரெண்டு வருஷத்துக்கு முன்னால், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் வேலை கிடைச்சது. தமிழ்நாடு போலீஸ் கபடி டீமுக்கு என்னை செலக்ட் பண்ணினாங்க. மதுரையில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் ஆடியதைப் பார்த்து, நேஷனல் டீம் கேம்ப்புக்கு அழைப்பு வந்தது. சிம்லா, குஜராத், டில்லின்னு மூணு இடங்களில் கேம்ப். கடைசியா 12 பேர்களில் ஒருத்தியா என்னைத் தேர்ந்தெடுத்து, துணை கேப்டனாக்கினாங்க.என்னதான் கபடி, இந்திய விளையாட்டுன்னாலும், மத்த டீம் பெண்கள் அசாதாரண வேகத்தில் ஆடி மிரட்டிட் டாங்க. ஐடியா, டெக்னிக் இரண்டையும் பயன்படுத்திதான் அவங்களைத் தோற்கடிச்சோம். என்னைப் பாராட்டி முதல்வர், அஞ்சு லட்ச ரூபாய் பணப் பரிசு கொடுத்தார். இந்த வெற்றியை என் அப்பாவுக்கு அர்ப்பணிக்கிறேன். அடுத்ததா, இந்திய அணியின் கேப்டன் ஆகணும். அதுக்கடுத்து அர்ஜுனா விருது வாங்கணும். நிறைய கனவுகள் இருக்கு" - இவரின் கனவுகள் நனவாகட்டும் என்று வாழ்த்துவோம்!
No comments:
Post a Comment