December 03, 2007

முத்தையா முரளீதரன் உலக சாதனை

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளரான முத்தையா முரளீதரன் உலக சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்கிற பெருமையை அவர் பெறுகிறார். கண்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முன்றாம் நாளான இன்று தனது 709ஆவது விக்கெட்டை வீழ்த்தி அவர் உலக சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ண்னின் 708 விக்கெட்டுகள் என்கிற சாதனையை அவர் முறியடித்துள்ளார். ஞாயிறன்று வார்ண் அவர்களின் சாதனையை சமன் செய்திருந்த முரளீதரன் இன்று இங்கிலாந்து அணியின் பால் காலிங்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தியபோது உலகிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். சொந்த மண்ணில் தனது பெற்றோர்கள், மனைவி மற்றும் உறவினர்கள், நன்பர்கள் சூழ்ந்திருக்க இந்தச் சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் அண்மைய ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின்போது இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டிருந்தால் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று சாதனைக்கு பிறகு கருத்துவெளியிட்டுள்ள முரளீதரன் கூறியுள்ளார். முத்தையா முரளிதரனின் உலக்ச் சாதனையைப் பாராட்டி இலங்கை அரசு அவரது உருவம் பதித்த தபால் தலை ஒன்றினை வெளியிட்டு கௌரவித்துள்ளது. இலங்கை அரசின் அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பாராட்டினை முரளீதரனுக்கு தெரிவித்துள்ளனர். தனது சாதனையை முறியடித்துள்ள முரளீதரன் ஆயிரம் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய திறமை வாய்ந்தவர் என்று ஷேன் வார்ண் தெரிவித்துள்ளார். அவ்வாறு அவர் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தினால், அந்தச் சாதனையை யாராலும் தகர்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்

No comments: