December 03, 2007

கட்டாய கிராம சேவை: தமிழக மருத்துவ மாணவர்கள் போராட்டத்தினை தொடர்கிறார்கள்

மருத்துவ பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக ஓர் ஆண்டு கிராமப்புறங்களில் பணிபுரியவேண்டுமென்ற மத்திய அரசின் யோசனையினை எதிர்த்து தமிழக மருத்துவ மாணவர்கள் தங்கள் போராட்டத்தினை தொடர்கிறார்கள். இப்பிரச்சினை குறித்து ஆராயவென அமைககப்பட்ட சாம்பசிவராவ் குழுவின் அறிக்கைக்கு பிறகே இறுதிமுடிவு எடுககப்படும் என்று மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உறுதியளித்தும் தங்கள் போராட்டத்தை நிறுத்த மாணவர்கள் முன்வரவில்லை. இன்று தமிழக மருத்துவக் கல்லுரிகளை மாநில அரசு மூடிவிட்டது. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களும வெளியேறிவிட்டனர். ஆனால் பிரச்சினை எதுவும் எழவில்லை. சென்னையிலும் மற்ற பகுதிகளிலும் இன்றிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் என மாணவர்கள் அறிவித்திருககின்றனர். ஆனால் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பவேண்டுமென முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நிபுணர்குழு அமைத்த பிறகும் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற ரீதியில் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசிவருவதால் மாணவர்களுக்கு அச்சம் ஏற்பட்டிருககும் என்றால்கூட, குழுவின் அறிக்கைக்கு பிறகே இறுதிமுடிவு என்று மீண்டும் அவர் உறுதியளித்திருககிறார். எனவே மாணவர்கள் போராட்டதினை கைவிடவேண்டுமென முதல்வர் தனது அறிககையில் கூறியிருககிறார். மாணவர்களோ மத்திய அரசு கிராமப்புற பணித் திட்டம் கைவிடப்படுகிறது என்று அறிவிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனக் கூறுகின்றனர். இதனிடையே பாட்டாளி மககள் கட்சி நிறுவனரும் மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாகடர் ராமதாஸ், கிராமப்புற மருத்துவமனைகளில் அடிப்படைவசதிகளைப் பெருக்கவேண்டும், போதுமான அளவில் மருத்துவர்கள் நியமிககப்படவேண்டுமெனக் கோரி தமிழகம் முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுமென அறிவித்திருக்கிறார்

No comments: