September 24, 2007

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு

துணிச்சலாக கருத்துக்களை வெளியிட்டு வரும் கலைஞர் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தக் காரரல்ல. ஆறரைக் கோடி தமிழர்களுக்கும் முதலமைச்சர். அத்தகையவருக்கு எதிராகக் கொலை வெறித் தூண்டுவதை அனுமதிக்க முடியாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பெரியார் பிறந்த பூமி என்று எச்சரிக்கிறார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு. இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு இருப்பதாவது: தி.மு.கழகம் என்ற ஒரு கட்சிக்கு மட்டுமே கலைஞர் சொந்தமானவர் அல்லர்; ஆறரைக் கோடித் தமிழர்களுக்கும் இன்று அவர் முதலமைச்சர். 84 வயதிலும் ஒரு இளைஞரைப் போலத் தமிழகத்திற்காகவும், தமிழர்களுக்காகவும் சிந்தித்து உழைத்துக் கொண்டிருப்பவர். ஒரு பெரும் கொள்கை மரபு வழிக்குச் சொந்தக்காரர். பின் பற்றி வந்துள்ள கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பவர். அந்த வகையில் அவ்வப்போது துணிச்சலான கருத்துகளை வெளியிட்டு வருபவர். தமிழகம் தந்தை பெரியாரின் பூமி. இன்று தந்தை பெரியார் நம்முடன் இல்லை. ஆனால், அவரது பகுத்தறிவுக் கொள்கை களும், சுயமரியாதைச் சிந்தனைகளும் இன்றைக்கும் தமிழர்களை வழி நடத்திக் கொண்டிருக்கின்றன. இங்கே மதத் தீவிரவாதிகளின் சலசலப்பு எடுபடாது என்பதை வேதாந்திகளும், அவருக்குப் பின்னால் மறைந்திருக்கும் மதவாதச் சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும். மதவாத சக்திகள் மக்களை ஒருபுறம் திசை திருப்பிக் கொண்டிருக்கையில், தமிழர்களைப் பெரியாரின் பகுத்தறிவுப் பாதையிலிருந்தும், சிந்தனைகளிலிருந்தும் தடம்புரளச் செய்வதற்கான சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய செயலில் ஈடுபடும் சக்திகளையும் நம் இளைஞர்களுக்கு அடையாளம் காட்ட நாம் தவறிவிடக்கூடாது. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் தந்தை பெரியாரின் கொள்கைகள் மீதும் நம்பிக்கை வைத்திருப்ப வர்கள் இந்த ஆபத்தையும் உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும்.

No comments: