September 24, 2007

  • சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் செயல்படுத்தக் கோரி பந்த் : சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரி அக்டோபர் 1 ஆம் தேதி தமிழகத்தில் முழு வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு நடத்துவது என்று திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவுசெய்துள்ளன.
    இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயுள்ள கடலில் காணப்படும் பாறைத் திட்டுக்கள் இராமரின் வானரசேனையால் கட்டப்பட்ட பாலம் என்றும் சேது சமுத்திரத் திட்டத்திற்காக இந்த அமைப்புக்களை இடிக்கக் கூடாது என்றும் கூறி இந்துத்துவ அமைப்புக்கள் இந்தியாவின் சில பகுதிகளில் போராடி வருகின்றன.
    இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது ராமர் குறித்து மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கின.
    சர்ச்சைக்கு வித்திட்ட கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொண்ட மத்திய அரசு, இராமரால் கட்டிய பாலம் என்று பக்தர்களால் நம்பப்படும் பாறைத்திட்டுக்களை உடைக்காமல் இத்திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.இதற்கு மூன்று மாத கால அவகாசத்தையும் மத்திய அரசு கோரியிருந்தது.
    இதன் காரணமாக சேது சமுத்திரத் திட்டம் குறித்த காலத்துக்குள் நிறைவேறுமா என்பது குறித்து ஐயம் எழுந்துள்ளது.
    இந்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளன.
    இம்முடிவு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்காகவே முழு வேலை நிறுத்தம் நடத்தப்படுவதாக தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.
    இப் பிரச்சனையில் மத்திய அரசின் அணுகுமுறை தனக்கு பெரிய ஏமாற்றத்தையோ, திருப்தியையோ அளிக்கவில்லை என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி கூறினார்
  • 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றது :
    முதலாவது 20 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இன்று தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோஹனஸ்பர்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணியை ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி இருபது ஓவர்களில், ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை எடுத்தது. இந்திய அணியின் சார்பில் கவுதம் கம்பீர் சிறப்பாக ஆடி 54 பந்துகளில் 75 ஓட்டங்களை எடுத்தார். பாகிஸ்தான் அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய உமர் குல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்
  • ராகுல் காந்திக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி : ராகுல் காந்திகாங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்திக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    படுகொலை செய்யப்பட்ட தனது தந்தை ராஜீவ் காந்தி போட்டியிட்டு வென்ற அமேதி தொகுதில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகுல் காந்தி
  • மன்னிப்பு கேட்டார் ஜப்பானியப் பிரதமர் : பிரதமர் பதவியிலிருந்து விலகும் ஷின்சோ ஆபே, தாம் இம்மாதத்தின் முற்பகுதியில் எதிர்பாராத ஒரு தருணத்தில் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட குழப்பங்களுக்கான அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்
  • கால நிலை மாற்றம் குறித்து சர்வதேசத் தலைவர்கள் கவலை : பாதிக்கும் சீதோஷ்ணநிலை மாற்றத்தை கையாளும் விதம் பற்றி, உலக நாட்டுத் தலைவர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்று, ஐநா மன்றத்தின் தலைமை செயலர் பான்கிமூன் அவர்கள் கூறியிருக்கிறார்
  • விடுதலைப் புலிகள் 20 பேர் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவிப்பு : இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் கிளாலி இராணுவ முன்னரங்க பகுதியில் இன்று அதிகாலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதல்களில் 20 விடுதலைப் புலிகளும், ஒரு இராணுவ சிப்பாயும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • இன்றைய (செப்டம்பர் 24 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews


No comments: