December 07, 2007

பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்குச் சிறைத் தண்டனை: இந்தியாவில் புதிய சட்டம்

இந்தியாவில் வயது முதிர்ந்த பெற்றோரை கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகள், இனி சிறைத் தண்டனை பெறத் தயாராக இருக்க வேண்டும். இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய சட்டம் இதற்கு வழிவகுத்திருக்கிறது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் என்ற பெயரிலான அந்தச் சட்டத்தின்படி, பெற்றோரை நிராதரவாகக் கைவிடும் பிள்ளைகள், மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொள்வோர், தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்றும் இந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பிரிவைக் கொண்டு வந்திருப்பதற்கு, பிள்ளைகளுக்கு இருக்கும் நிதி வசதிகள், பெற்றோருக்கு இல்லை என்பதுதான் காரணம் என்று இந்திய நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தின் மீதான விவாத்தின்போது கருத்துத் தெரிவித்தார் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சர் மீரா குமார். ஏற்கெனவே உள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, பிள்ளைகளிடமிருந்து பெற்றோர் பராமரிப்பு வசதியைப் பெற முடியும் என்றாலும்கூட, அதில் அதிக செலவு பிடிப்பதுடன் பெற்றோர் தங்களுக்கு நியாயம் கிடைக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. அதனால்தான் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று மீரா குமார் விளக்கமளித்தார். சொந்தப் பிள்ளைகள் மட்டுமன்றி, முதியவர்களின் சொத்துக்களைப் பெற்ற உறவினர்களும் இந்தச் சட்டத்தின்கீழ் கொணடுவரப்பட்டிருக்கிறார்கள். இந்தியக் கலாசாரத்துக்கே உரித்தான கூட்டுக் குடும்ப முறை வேகமாக மறைந்து வருவதால், வயதான பெற்றோர்கள், குறிப்பாக விதவைகள் தனித்து விடப்படுகிறார்கள். அதனால் தேவையான ஆதரவு கிடைக்காமல் போவதுடன் கடுமையான மன-உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள் என்று புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதிர்ந்த வயது என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. அதனால் முதியோர் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மீராகுமார். இந்தப் புதிய சட்டத்தின் மூலம், அரசு தனது நோக்கத்தை நிறைவேற்ற முடியுமா என்பது பற்றி மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறையின் இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

No comments: