November 30, 2007

மருத்துவப்படிப்பு ஆண்டு நீட்டிப்பு தேவையா?

வசீகரப்பாடகி வசுந்த்ரா தாஸ்

இன்றைய குறள்

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்

புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்

அறத்துப்பால் : வெஃகாமை

கடன்தான் பொருளாதாரத்தை ஏற்றுகிறது

"ஒரு கிளை சிறப்பாக நடைபெற வேண்டுமென்றால் நிறைய வைப்புத் தொகை வரவேண்டும். அதன் மூலமே கடன் வழங்க முடியும். கடன்தான் பொருளாதாரத்தை ஏற்றுகிறது. டாடா, பிர்லா யாராக இருந்தாலும் சரி கடன்தான் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது. புத்திசாலிகள் சேமிக்கிறார்கள். அதிபுத்திசாலிகள் கடன் வாங்குகிறார்கள். சேமிப்பது ஒரு பகுதி. கடன் வாங்குவது ஒரு பகுதி. கடன் வாங்க வேண்டும். கடன் வாங்குவது குற்றமல்ல. லஞ்சம் வாங்குவதுதான் குற்றம். கடன் வாங்கித் தொழில் செய்ய வேண்டும். வீடு கட்ட வேண்டும். குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்" - ப. சிதம்பரம்

இந்திய கிரிக்கெட் லீக்கின் முதல் போட்டி ஆரம்பம்

கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக, தனியார் நடத்தும் தொழில் முறையிலான சர்வதேச கிரிக்கெட் லீக் ஒன்று, தனது முதல் போட்டியை வடஇந்தியாவில் நடத்திக்கொண்டிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் நெறிமுறைப்படுத்தும் அமைப்பான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்த போட்டியை அங்கீகரிக்க மறுத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த அமைப்பை ஒரு போக்கிரி அமைப்பு என்று வர்ணித்திருக்கிறது. இந்த அமைப்பு, மேற்கிந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் ப்ரையன் லாரா, முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் இன்சமாம்-உல்-ஹக் போன்ற உலகின் சில மிகச் சிறந்த ஆட்டக்காரர்களை இந்த ஒரு நாள் ஆட்டங்களில் ஆட சேர்த்துக்கொண்டிருக்கிறது. பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்களது நாட்டு கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை இந்த போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று எச்சரித்திருக்கின்றன.

மலேஷியாவின் இந்திய வம்சாவழித் தமிழர்கள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கவலை

  • இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மலேஷியாவின் இந்திய வம்சாவழியினர் பற்றி இன்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், "இது நமக்குக் கவலையளிக்கக்கூடிய பிரச்சினை. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களோ, வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரோ எப்போது பாதிக்கப்பட்டாலும், அது நிச்சயமாக இந்தியாவுக்குக் கவலையை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார். மலேஷியாவில் சம-உரிமை கோரி் போராட்டம் நடத்திய இந்திய வம்சாவழியினரின் போராட்டத்தை அடுத்து ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, அந்த நாட்டு அரசுடன் இந்தியா தொடர்பு கொண்டு வருவதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை அடக்க காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களின் நலனைப் பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஜெயலலிதா உள்ளிட்ட மற்ற தலைவர்களும் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்கள். இந்தப் பிரச்சினை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள். இதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமையன்று அந்தப் பிரச்சினை குறித்து மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி. "வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினர் நலனில் அரசு எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. மலேஷியாவில் கணிசமான அளவில் உள்ள இந்திய வம்சாவழியினர் அந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கிறார்கள். மலேஷியாவுடன் இந்தியா நல்ல நட்புறவு கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, மலேஷிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு வருகிறோம்" என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
  • புத்தகத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிக்கொள்வதாக தஸ்லிமா நஸ்ரின் அறிவிப்பு : தஸ்லிமா நஸ்ரின்வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், தான் எழுதிய'த்விக்ஹோண்டிதோ' புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், தனது புத்தகத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு தஸ்லிமா தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில், தஸ்லிமா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது புத்தகத்தில் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளை நீக்க முடிவுசெய்திருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அவர் தெரிவித்திருக்கிறார். "மதச்சார்பின்மையின் மகத்துவத்துக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் புத்தகத்தை எழுதினேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போது இந்தியாவில் உள்ள சிலர், இது அவர்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதுவதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில வரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்" என்று தஸ்லிமா தெரிவித்திருக்கிறார். இந்த முடிவின் காரணமாக, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், இனி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, தஸ்லிமாவின் இந்த முடிவு, அவர் மீண்டும் கொல்கத்தா திரும்வுதற்கு வழிவகுக்கும் என்றார். தஸ்லிமாவின் முடிவை, ஜமியதுல் உலாமை ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலர் மஹமூத் மதனியும் வரவேற்றுள்ளார்
  • பேநசிர் பூட்டோ தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டுள்ளார் : தேர்தல் விஞ்ஞாபனத்துடன் பேநசிர் பூட்டோடிசம்பர் மாதம் 16 ஆம் திகதி அவசரநிலை விலக்கப் போவதாக பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் அவர்கள் அறிவித்ததை அடுத்து, ஜனவரி மாதம் நடக்கவுள்ள தேர்தலுக்கான தமது கட்சியின் விஞ்ஞாபனத்தை பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவியான பேநசிர் பூட்டொ வெளியிட்டுள்ளார். தொழில்வாய்ப்பு, கல்வி, சக்தி, சுற்றுச்சூழல் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக தனது கட்சியின் கொள்கை இருக்கும் என்று திருமதி பூட்டோ தெரிவித்துள்ளார். இந்த தேர்தல்களில் தான் ஒரு எதிர்ப்புடனேயே பங்கேற்பதாகவும், அவற்றை தான் அங்கீகரிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்
  • கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவை அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது : நாட்டின் தலைநகரமாகிய கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் சேவை, இன்று அனுராதபுரம் நகருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
  • இலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுவது குறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அதிர்ச்சி : இந்த வாரத்தின் முதல் நான்கு தினங்களில், இலங்கையின் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சுமார் 49 சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு, சுமார் 60 பேர்வரையில் காயமைடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கிறது
  • புவி வெப்பமடைதலை தடுப்பது தொடர்பில் உலக முன்னணி வணிக நிறுவனங்கள் கோரிக்கை : புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச இலக்கு ஒன்றை நிர்ணயிப்பது தொடர்பில் உலக நாடுகள் மத்தியில் ஒரு இணக்கப்பாடு காணப்பட வேண்டும் என்று உலகின் முன்னணி வணிக நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. இளவரசர் சார்ல்ஸ் அவர்களின் முன்முயற்சியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒன்றுபட்ட கோரிக்கையை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 150க்கும் அதிகமான சர்வதேச முன்னணி வணிக நிறுவனங்கள் முன்வைத்துள்ளன
  • கடத்தப்பட்டிருந்த கொரில்லாக்கள் பிறப்பிடம் திரும்புகின்றன : ஐந்து ஆண்டுகாலமாய் ஒரு சர்வதேச பிணக்குக்கு காரணமாக அமைந்திருக்கின்ற நான்கு அரிய வகை ஆப்பிரிக்க கொரில்லாக்கள், மத்திய ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டிலுள்ள தமது பிறப்பிடத்துக்குத் திரும்பும் பயணத்தின் கடைசி நிலைக்கு தற்போது வந்துள்ளன
  • யுரேனியம் செறிவாக்கலில் இரான் ஈடுபடுவதைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி : ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஹாவியர் சொலானா, இரானை அதன் யூரேனியம் செறிவூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்கவைக்க எடுக்கப்படும் மற்றொரு முயற்சியில், இரானின் தலைமை அணுசக்தி பேச்சுவார்த்தையாளர் சயீத் ஜலீலியை லண்டனில் சந்தித்து பேசியுள்ளார்
  • கரடி பொம்மைக்கு 'முகமது' பெயரிட்ட சர்ச்சை - ஆசிரியருக்கு தண்டனை போதாது என்று கூறி கார்டூமில் ஆர்ப்பாட்டம் : பிரிட்டிஷ் பள்ளிக்கூட ஆசிரியை கிலியன் ஜிப்பொன்ஸ்ஸுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது என்று கூறி அதனைக் கண்டித்து, சுடானின் தலைநகர் கார்ட்டூமின் ஊடாக நூற்றுக்கணக்கானோர் ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்

November 29, 2007

இன்றைய குறள்

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்

அறத்துப்பால் : வெஃகாமை

கடின உழைப்பால் மட்டுமே நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது

"உயர்ந்தோர், தாழ்த்தப்பட்டோர் என்று யாரும் இல்லை. அறிவில் சிறந்தவர்களே நாட்டைத் தலைமையேற்று நடத்திச் செல்வர் என்று அம்பேத்கர் அறிவுறுத்தினார். கடின உழைப்பால் மட்டுமே நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது. சாதி, மத வேறுபாடுகளை நீக்கினால் மட்டுமே நாடு முழுவளர்ச்சி பெறமுடியும்" - சுர்ஜீத் சிங் பர்னாலா

மலேசியத் தமிழர் போராட்டம்

அமைச்சர் டத்தோ சாமிவேலுமலேசியாவிலுள்ள இந்திய வம்சாவழியினரின் நியாமான உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாகக் கூறி, அங்குள்ள தமிழர்கள் கடந்த சில தினங்களாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் மலேசிய இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவின் தலைவரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டங்களில் நியாயம் இல்லை என்று மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அந்நாட்டு பொதுப்பணித் துறை அமைச்சருமான டத்தோ சாமிவேலு தமிழோசையிடம் தெரிவித்தார். அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மூன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழக் கூடிய நாட்டில், உரிமைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் நூறு சதவீத உரிமைகள் எல்லோருக்கும் வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். மலேசியாவில் அரசின் அனுமதி பெற்றுக் கட்டப்பட்டுள்ள இந்துக் கோயில்களுக்கு அரசு மானியங்கள் கூட வழங்கிவருவதை சுட்டிக் காட்டிய மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கோயில்களை எந்த அரசுமே ஏற்றுக் கொள்ளாது என்றும் கூறினார். ஆனாலும் தொடர்ந்து தமிழ் பள்ளிகள் மூடப்படுவது, தமிழ் மாணவர்களுக்கு உயர்கல்விகளில் வாய்ப்புகள் மறுக்கப்படுவது, கோயில்கள் உடைக்கப்படுவது போன்ற காரணங்களே தமது போராட்டத்துக்கான காரணங்கள் என்று இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தும் அமைப்பான இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவின் தலைவர் கணபதி ராவ் தமிழோசையிடம் தெரிவித்தார். இது தொடர்பில் தாங்கள் அரசுக்கு பல மனுக்கள் கொடுத்திருந்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். நாட்டில் புதிதாக உருவாக்கப்படும் நகரங்களில் தமிழ்ப் பள்ளிகள், கோவில்கள் ஆகியவை கட்டப்படுவது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். மலேசியாவில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் தொடர்பாக அமைச்சர் டத்தோ சாமிவேலு, அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையர் டத்தோ சிவசுப்ரமணியம் மற்றும் போராட்டக் குழுவின் தலைவர் கணபதி ராவ் ஆகியோரது பேட்டிகளை கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

கொழும்புத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கண்டனம்

  • இலங்கையின் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த இரண்டு குண்டுத் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூண் அவர்கள் கண்டித்துள்ளார்
  • அவசர நிலையை விலக்கப்போவதாக பாகிஸ்தான் அதிபர் அறிவிப்பு : பாகிஸ்தானில் நான்கு வாரங்களுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையை விலக்கிக்கொள்ளப்போவதாக பாகிஸ்தான அதிபர் பர்வேஸ் முஷாரப் அறிவித்திருக்கிறார்
  • கொழும்புத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை ஜனாதிபதி குற்றச்சாட்டு : இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇலங்கையின் தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத் தாக்குதல்களை இன்றைய தினம் இரானிலிருந்து நாடு திரும்பிய வன்மையாகக் கண்டித்திருக்கிறார்
  • மட்டக்களப்பில் சிங்கள வியாபாரிகள் கொலை : மட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேனியில் இன்று முற்பகல் மரத்தளபாட சிங்கள வியாபாரிகள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்
  • பர்மாவில் புத்த மடாலயத்தை இராணுவத்தினர் மூடியுள்ளனர் : பர்மாவின் ரங்கூன் நகரில் இருக்கும் புத்த மடாலயம் ஒன்றை அந்நாட்டு இராணுவத்தினர் மூடியிருக்கிறார்கள். இந்த மடாலயத்தில், எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சிகிச்சை மையம் ஒன்று செயல்பட்டு வந்தது
  • ஆபிரிக்காவில் சின்னம்மை நோயினால் இறப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது : ஆபிரிக்காவில், சின்னம்மை நோய் மூலம் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைப்பதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச சுகாதார நிறுவனங்கள் கூறுகின்றன.

அத்தையம்மா!

“வாம்மா! புண்ணியவதி! வா! வரும்போதே தூக்கி முழுங்கிட்டு வந்திருக்கியே வா! வந்து வெளக்கேத்தி வய்யிம்மா வெளக்கேத்தி வைய்யி! தலை தலையாய அடிச்சுக்கிட்டனே கேட்டானா அந்தப் படுபாவி! போச்சே! எல்லாம் போச்சே! கொள்ளி வைக்கிற மயன் போய்ட்டானே! அவனுக்கு நான் கொள்ளிவச்சுட்டுல்ல இப்பக் குத்தவச்சுருக்கேன்! பத்தாததுக்கு இவந்தலையில என்ன எழுதியிருக்கோ?” என்று எல்லோருக்கும் முன்னால் தலைவிரி கோலமாகக் கத்திய மாமியாரைப் பார்க்கும்போது தன் கணவர் குமாரும் தானும், தாலி கட்டிய கையோடு ஆசீர்வாதம் வாங்க வந்த கவிதாவுக்கு மிகவும் வேதனையாகவும், அழுகையாகவும் வந்தது.


கவிதா ஒரே பெண். தாயைச் சின்ன வயதிலேயே பறிகொடுத்தவள் தனது பாட்டியிடமும் தந்தையிடமுமே வளர்ந்தவள். பள்ளியில் படிக்கும்போதே தனது பாட்டியும் இறந்துவிடத் தன் தந்தை மறுமணம் செய்துகொள்ளாமலேயே மிகவும் சிரமப்பட்டு வளர்த்துப் படிக்கவைத்து இன்று ஒரு நல்ல வேலையிலும் இருக்கிறாள். தன் தந்தை தனக்காகப் பட்ட துன்பங்களையெல்லாம் நினைத்துப்பார்த்து தந்தைமேல் உயிரையே வைத்திருக்கும் கவிதா, தான் திருமணம் செய்துகொண்டால் தனது தந்தைக்கு யாருமில்லை என்பதாலேயே திருமணம் செய்துகொள்ள விரும்பாதவளாய் இத்தனை வருடங்கள் கழித்துவிட்டாள். ஆனால் உறவுகளும், சம்பிரதாயங்களும், ஒரு பெண் தனது இஷ்டப்படி வாழ விட்டு விடுமா என்ன? தந்தையின் நெடுநாள் வற்புறுத்தலாலும், அவளின் நெருங்கிய தோழிகளின் அறிவுரையாலும், வேறுவழியின்றி, ஒரு நிபந்தனையின் பேரில் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாள். அந்த நிபந்தனை, தான் திருமணம் செய்துகொண்டாலும் தனது தந்தைக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும், பண உதவி உட்பட அவளே கவனித்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் தன் தந்தைக்குத் தன்னை விட்டால் வேறுயாருமில்லை என்பதை மாப்பிள்ளை தன்னைப் பார்க்க வந்திருந்தபோது தெளிவாகக் கூறியிருந்தாள். அதைப்போலவே மாப்பிள்ளையும் நல்ல மனதுடன் ஒத்துக்கொண்டார். தான் நினைத்தபடியே எல்லாம் ஒத்துவந்ததால், கவிதா மிகவும் சந்தோசமாகவே இருந்தாள். மாப்பிள்ளை அடுத்த லீவுக்கு வரும்போது திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏனெனில் அவர் மிலிடரியில் இருப்பதால் வருடம் ஒருமுறை வருவதே பெரிய விசயம். இடையில் அடிக்கடி தொலைபேசி மூலமாகப் பேசிக்கொள்வார்கள். அவர்கள் அருகருகே இல்லாவிட்டாலும், நிச்சயிக்கப்பட்டுவிட்டதால் கணவன் மனைவியளவுக்கு தத்தம் உணர்வுகளையும், சந்தோசங்களையும் போன்மூலமாகவே பகிர்ந்துகொண்டு அந்தத் திருமண நாளுக்காக ஆவலோடு காத்திருந்தனர்.


திருமணம் ஒரு வாரம் இருக்கும்போது கணவராகப்போகும் ரமேஷ் வந்து சேர்ந்தான். வந்ததும் வராததுமாய் நேராக வந்து கவிதாவைப் பார்த்துவிட்டு மிகவும் சந்தோசமாகப் பேசிக் கிளம்பும்போது,


“இனி நான் உன்னைப் பார்க்கமாட்டேன்” என்றான்.


"வாட்… என்ன வெளையாடுறீங்களா? ஐ டோன்ட் நோ, டெய்லி இங்க வந்து எங்கிட்ட ஒரு டென் மினிட்ஸ் பேசிட்டுப்போகல....மவனே! அவ்வளவுதான், ஓகே"...நௌ யு கேன் கோ..பை..பை" என்றாள்.


"நோ! நோ! வாட் ஐ மீன்...மேரேஜ் அன்னிக்கித்தான் ஒன்னெ மீட் பண்ணுவேன்னு சொன்னேன்டா, அப்பத்தான் ஒரு த்ரில் இருக்கும், இன்னொன்னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் இன்விடேசன் குடுக்கணும், தம்பி குமார் மட்டும் தனியாக் கஷ்டப்படுறான்...ஓகே, சீ யு லேடர், பை ஃபார் நௌ" என்று கூறிக் கிளம்பிவிட்டான்.


சரியாகத் திருமணம் இரண்டு நாள் இருக்கும்போது, திடீரெனத் தொலைபேசி ஒலித்தது. ஹலோ என்றவள் இடிந்துபோய் உட்கார்ந்தாள். விழித்துப்பார்த்தாள், பக்கத்தில் தனது தோழியும், தந்தையும் அழுதுகொண்டு இவளைபே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். தன் கைகளைக் கவிதா தலையின் மீது வைத்து,

“ஒனக்கு நான் இருக்கேன்டா, நீ ஒன்னும் கவலப்படாத தங்கம், ஏதோ நமக்கு டைம் சரியல்ல, நீ மட்டும் மனச விட்டுறாத, தைரியமா இரும்மா, எதுவும் நெனைக்கப்படாது… ம்ம்…” என்ற போது, அப்பாவின் கண்களில் எங்கோ ஒலிந்திருந்த கண்ணீர் கொடகொடவென்று கொட்டியது. “ம்ம்….” என்றுதான் கவிதாவால் சொல்ல முடிந்தது. துக்கத்தை தொண்டை வழியாக விழுங்கியதால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. தனக்குக் கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதமாகச் சொல்லி, பிறகு ஒரு வழியாக ஒத்துக்கொண்டு, எல்லாம் ஒன்று கூடி வரும் இந்த நேரத்தில், மாப்பிள்ளை, தன் திருமணத்திற்கான அழைப்பிதழ்களைக் கொடுத்துவிட்டுத் திரும்பும் நேரத்தில், எமனாக வந்தது அந்த லாரி. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் பாதி வழியிலேயே, “இனி நான் உன்னைப் பார்க்கமாட்டேன்” என்று தான் கவிதாவிடம் சொன்னது நினைவில் வந்ததோடு எல்லாம் முடிந்துபோனது.


மகிழ்ச்சி குதூகளிக்கவேண்டிய வீடு மயான வீடு போல் காட்சியளித்தது. கவிதா வாய்விட்டு அழக்கூட முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள். யார் முகத்தையும் பார்க்க முடியவில்லை. இரண்டு முக்கியப் பொருத்தங்கள் இல்லையென்பதாலும், ராசியில்லாதவள் என்பதாலும்தான் இப்படியெல்லாம் ஆனதென்று ஆளாளுக்கு, அங்கங்கு முணுமுணுப்பதுபோல் தோன்றிற்று. தன் தந்தை அதோ ஒரு ஓரத்தில் குனிந்த தலையோடு சேரில் அமர்ந்து எதையோ வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார். இப்போதுதான் கவிதா, தன் அம்மாவை நினைத்து மிகவும் வேதனைப்பட்டாள். வாய்விட்டு அலறி, தன் அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கத்தவேண்டும்போல் இருந்தது. தன் அம்மா இல்லாத வெறுமையை அவள் இன்றளவுக்கு என்றுமே உணர்ந்ததில்லை. அந்த நேரத்தில் யாரோ கதவைத் தட்டியதும் சுதாரித்துத் ‘திக்திக்’ என்ற பயத்தோடு திறந்தாள். அங்கு தான் பயந்தபடியே தன் மாமியார் வந்து நின்றுகொண்டிருந்தார். ஒன்றும் புரியாதவளாய் அவர் முகத்தைப் பார்க்க, நேராக உள்ளே வந்து கதவைத் தாழிட்டுக் கட்டியணைத்துக்கொண்டு சத்தம் வெளியே வராமல் தேம்பித் தேம்பி அழுதார். கவிதாவுக்கு நடப்பது கனவா, நனவா ஒன்றும் புரியாதவளாய் இவளும் கட்டிப்பிடித்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். ஒரு வழியாக உள்ளுக்குள் இருந்த சுமை ஓரளவுக்கு இறக்கி வைத்தது போன்ற ஓர் உணர்வு.


“யாம்மா, நானும் ஒரு பொண்ணுதாம்மா கவிதா! என்னெ மன்னிச்சுரும்மா” என்றதும்,


“அப்படியெல்லாம் சொல்லாதீங்க அத்தை, நீங்கதான் என்னெ மன்னிக்கணும், நான் எந்தப் பாவமும் பண்ணலத்த, எனக்கே பயமா இருக்கு, என்னவெல்லாமோ நடக்குது” என்று முடிப்பதற்குள்,

“நான் சொல்றதக் கவனமாக் கேளும்மா! எம் மூத்த மகன் போனத என்னால தாங்க முடியலம்மா. சொமந்து பெத்த வயிறு எரியிதும்மா. இந்த சண்டாளிய அந்தக் கடவுளு கொண்டுபோகமா, எங்கண்ணுக்கு முன்னாடி எம்புள்ளயப் பறிச்சுறிச்சேம்மா! நான் இருந்து என்னத்தம்மா சாதிக்கப்பேறேன்? நீங்க வாழுற வயசும்மா. இந்த ஊரு சனம் ஆளுக்காளு ஒண்ணொன்னெப் பேசுறதப் பாத்து, ஏதோ புத்தி பேதளிச்சுப்போயி, வாய்க்கி வந்தபடியெல்லாம், நீ வந்ததும் வராததுமாப் பேசிப்புட்டேம்மா. அவன் விதி அம்புட்டுத்தேம்மா, நீ என்ன பண்ணுவ அதுக்கு? தாயில்லாப்பிள்ள! கவிதாக்கண்ணு! நீ இந்த வீட்டு மருமக இல்லம்மா, எம்மகம்மா. எனக்கு பொம்பளப்புள்ள இல்லேன்னு, நீயாச்சும் இந்த வீட்டுக்கு வந்து வெளக்கேத்தோணும்னு நெனச்சேம்மா. என்ன ஆனாலுஞ்சரின்னு, நாந்தேம்மா, எஞ்சின்ன மயன்ட்டயும், இந்த ஊரு பெரிய மனுசக்கட்டயுஞ் சொல்லி, அது இந்த வீட்டுக்குன்னே பொறந்த பொண்ணு, ‘டேய் அவ கழுத்துல தாலியக் கட்டிக் கூட்டிகிட்டு வாடா’ன்னு சொல்லி சம்மதிக்க வச்சேன். எம்புள்ளயப் பறிகுடுத்த வகுத்தெரிச்சல்ல கத்திப்புட்டேன். மனசுல ஒன்னத்தையம் வச்சுக்காத கண்ணு” என்று ஒரே மூச்சில் படபடவெனச்சொல்லி

“காப்பி ஏதும் எடுத்துகிட்டு, இந்தா வாரேன்” என்று வெளியே சென்றுவிட்டாள் கவிதாவின் மாமியார்.

தான் படித்த படிப்பு, பக்குவம், நிதானம், அறிவு எல்லாவற்றையும் விட, படிக்காத மாமியாராக இருந்தாலும், எதார்த்தங்களை எதார்த்தமாக்கிக்கொண்டு தன்னையும் பக்குவப்படுத்தப் பழகிக்கொண்ட அந்த வெள்ளையுள்ளம் படைத்த மாமியார் உருவில் தன் தாயே வந்து ஆறுதல் கூறி அணைத்துக்கொண்டது போல் இருந்தது கவிதாவுக்கு. இழப்பு கவிதாவுக்கு மட்டுமில்லை, அந்தத் தாய்க்கும்தான். ஆனாலும் அந்தச் சோகச் சூழ்நிலையிலும் தன் இரண்டாவது மகனை எப்படிப் பேசிச் சம்மதிக்க வைத்து தன்னைத்திருமணம் செய்ய வைத்தார் என்பதை நினைக்கும்போது கவிதாவால் நம்பமுடியவில்லைதான். இந்த எதார்த்தங்களும், விட்டுக்கொடுத்தலும் நகரத்தில் கவிதா இதுவரை கேள்விப்பட்டதில்லை. மாமியார் என்றாலே கொடுமைக்காரிதான், மருமகள்களுக்கு வில்லிதான் என்ற ஒரு தவறான எண்ணத்தை தவிடு பொடியாக்கியது அந்தக்கணத்தில் நடந்த நிகழ்வுகள். தனக்கென்று நிச்சயிக்கப்பட்ட அந்தக் கணவன் இன்னும் மனதுக்குள் இருந்தாலும், தான் ஒரு புதுப்பிறவி எடுத்த உணர்வோடு தன் மாமியாரைத் தாயாகவே நினைத்து தனக்குத் தன் தாயிடம் கிடைக்காத அத்தனை உணர்வுகளையும் பெற்றுவிட்டதாக ஆறுதலடைந்தாள். பிரகாசமான அந்த நம்பிக்கையில், தன் மறைந்த கணவர் ரமேஷை, குமார் உருவில் முதன்முறையாக நிமிர்ந்து பார்க்க ஆரம்பித்தாள். தூரத்தில் தன் தந்தை அமர்ந்திருப்பதைப் பார்த்து ‘அப்பா! எனக்கு அம்மா கெடச்சுட்டாங்கப்பா, ஒங்களுக்கு நான் இருக்கேம்ப்பா’ என்று கண்கள் கலங்கியபடி கடவுளை நினைத்துப் பெருமூச்சு விட்டாள்.

- நவநீ

இன்றைய குறள்

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்

நடுவுநிலைமை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்

அறத்துப்பால் : வெஃகாமை

November 28, 2007

வசீகரப்பாடகி வசுந்த்ரா

"கவிதைதான் சொல்லை தேர்ந்தெடுக்கிறது"

"கவிதைகளுக்கும், வழக்கத்தில் உள்ள மொழிக்கும் உள்ள உறவு தினசரி மாறிக் கொண்டே இருக்கிறது. மொழி குறித்த நமது பிரக்ஞையை விடாமல் புதுப்பித்துக் கொள்ள கவிதை உதவுகிறது. கவிதையில் தான் மொழியின் சாரம் உயிர்ப் பிடிப்புடன் உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட அனுபங்களை வெளிப்படுத்துவதே சிறந்த கவிதை. ஒரு சொல்லை கவிஞர் தேர்ந்தெடுக்கிறார் என்பதைவிட அந்த சொல்லை கவிதைதான் தேர்ந்தெடுக்கிறது" - பிரம்மராஜன், எழுத்தாளர்

உச்ச நீதிமன்றத்தில் ஹிந்தி

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு : இந்திய உச்ச நீதிமன்றம் இந்தியாவின் உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் ஆங்கிலத்துக்குப் பதிலாக ஹிந்தி மொழியில் தீர்ப்பு வழங்கலாம் என்று அலுவலக மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு, அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது.
இதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமையன்று மக்களவையில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். உறுப்பினர்களின் கூச்சல், குழப்பம் காரணமாக, அவை நடவடிக்கைகள் இருபது நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன. தமிழக உறுப்பினர்களின் ஆவேசமான எதிர்ப்புக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி, நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், மொழிப் பிரச்சினையில் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெரிவித்தார். தமிழக உறுப்பினர்களின் கோரிக்கையை பாஜக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிமன்றங்களில் ஹிந்தி மொழி அவசியம் என்று பாஜகவின் மல்கோத்ரா, ஐக்கிய ஜனதா தளத்தின் பிரபுநாத் சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குருதாஸ்தாஸ் குப்தா உள்ளிட்டோர் வலியுறுத்தினார்கள். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அமைச்சர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இந்தப் பிரச்சினை தொடர்பாக மனுக்கொடுத்தார்கள்.

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சி

  • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாகொழும்பு நாரஹேன்பிட்டி இசப்பத்தான மாவத்தையில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின், சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சகவளாகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சேர்ந்ததாகக் கருத்தப்படும் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் இன்று காலை நடாத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள்
  • இராணுவத் தளபதி பதவியைத் துறந்த பாகிஸ்தானிய அதிபர் முஷாரஃப் அவர்கள் சிவிலியன் அதிபராக பொறுப்பேற்கவுள்ளது பற்றிய செய்திக் குறிப்பு : இராணுவப் பொறுப்பைத் துறக்கும் அதிபர் முஷாரஃப்இது ஒரு அரசியல் சூதாட்டந்தான் ஆனால், நன்றாகத் திட்டமிடப்பட்ட ஒன்று. இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகுவதன் மூலம், முஷாரஃப் அவர்கள் தனது நிலையை பலவீனப்படுத்துகிறார். இதன் மூலம் பாகிஸ்தானின் மிகப் பலம் வாய்ந்த நிறுவனத்தின் மீதான தனது நேரடிக் கட்டுப்பாட்டை அவர் இழக்கிறார்.
    அதேவேளை, இதன் மூலம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், அவர் தன்மீதான அரசியல் அழுத்தத்தையும் தளர்த்திக்கொள்கிறார். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தான் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன் என்றும், ஜனநாயகத்தை நோக்கிய பாதையில் பாகிஸ்தானை தான் உண்மையாகவே நிறுத்தியிருக்கிறேன் என்றும் இப்போது அவரால் சொல்ல முடியும். உண்மையில், ஏனைய நிபந்தனைகளுக்கு முகம் கொடுப்பதைவிட, இராணுவத்தலைமைப் பதவியை துறப்பது ஒப்பீட்டளவில் குறைந்த ஆபத்தையே கொண்டதாகும். அரசியலமைப்புச் சட்டத்தை மீள நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான சமிக்ஞைகள் எதுவும் இன்னமும் தெரியவில்லை. அது வந்தால்தான் எதிர்க்கட்சிகள் தமது ஆதரவாளர்களை ஒன்று திரட்ட ஏதுவாக இருக்கும். அத்துடன் தொடர்பூடகங்களும், அப்போதுதான் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்படும் நிலையும் உருவாகும். பதவி இடை நீக்கம் செய்யப்பட்ட எந்தவொரு நீதிபதியையும் மீள பதவியில் அமர்த்துவதற்கான சமிக்ஞைகள் எதுவும் கூட தென்படவில்லை. ஒரு சுயாதீனமான, விமர்சனத்துடனான நீதித்துறை இன்றுவரை அதிபருக்கு ஒரு யதார்த்தமான அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றது. இன்றுமுதல், அதிபர் முஷாரஃபின் பெரும்பாலான பாதுகாப்பு என்பது, புதிய இராணுவத் தளபதியான ஜெனரல் கயானி அவர்கள் அதிபர் மீது கொண்டுள்ள விசுவாசத்திலேயே தங்கியுள்ளது. அவர் ஒரு நம்பிக்கை மிகுந்த கூட்டாளி. அதிபர் முஷாரஃபின் நீண்டகால யுக்தியின் கவனமாக மேற்கொள்ளப்பட்ட பகுதியே, அவரது பதவியுயர்வாகும். ஒரு சிறந்த இராணுவத் தளபதி என்பதுடன், பாகிஸ்தானின் பலம் மிக்க உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐயின் தலைவராகவும் கயானி பணியாற்றியுள்ளார். அமெரிக்கர்களாலும் அவர் நட்பு ரீதியாகப் பார்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பெனாசீர் பூட்டொ அரசாங்கத்திலும், அவர் ஒரு நல்ல பதவியில் இருந்தவராவார், அத்துடன் அண்மையில் அவருடனான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையிலும் அவர் ஈடுபட்டிருந்தார். ஆகவே அவர் முஷாரஃப்புக்கு விசுவாசமாக இருந்தால், அவரது பதவியுயர்வு, முஷாரஃப்புக்கு ஒரு பலத்தைத் தரும்.
    ஒரு அர்ப்பணிப்புடனான இராணுவ தலைவரான இவர், அதிபரைப் போன்று அரசியல் நெருக்கடிகளில் சிக்கிக்கொள்ளாதவர். ஆகவே இராணுவத்தின் தார்மீக பலத்தை அதிகரிக்கச் செய்தல், மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஒரு ஊக்கத்தைக் கொடுத்தல், ஆகியவை உட்பட எதிர்கொள்ளப்படுகின்ற பல பிரச்சினைகளை எதிர்கொள்ள இவர் ஒரு சரியான ஆளாக இருக்கலாம்
  • நுகேகொட குண்டுவெடிப்பில் 16 பேர் பலி : இலங்கையின் தலைநகர் கொழும்பின் தென்புறமாக நுகேகொட பகுதியில் இன்று பிற்பகல் சனநடமாட்டம் மிக்க இடத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் முப்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சனக்கூட்டம் நிறைந்த புடவைக் கடையொன்றில் இருந்தே இந்தப் பாரிய குண்டு வெடித்துள்ளது.
    குண்டு வெடித்ததை அடுத்து அப்பகுதியில் இருந்த வாகனங்கள் சிலவும், கடைகளும் தீப்பற்றிக்கொண்டுள்ளன. வர்த்தக நிறுவனம் ஒன்றில் காணப்பட்ட சந்தேகத்துக்குரிய பொதி ஒன்றை பாதுகாவலர்கள் அகற்ற முயன்ற போதே அந்தப் பொதி வெடித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
    இந்தத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 37 பேர் காயமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் மீதே அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து கொழும்பு உள்ளடங்கலாக மேல்மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை திங்கட்கிழமை வரை இலங்கை அரசு மூடியுள்ளது
  • இராணுவத்தலைவர் பதவியிலிருந்து முஷாரஃப் விலகினார் : பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் இராணுவத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிவிலியன் அதிபராக பொறுப்பேற்க தயாராகி வருகிறார்
  • கொசோவோவின் எதிர்காலம் குறித்த உடன்பாடு ஏற்படவில்லை
    கொசோவோவின் எதிர்காலம் குறித்து சர்வதேச சமூகத்தின் ஆதரவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் அடுத்ததாக என்ன நடவடிக்கை என்பது குறித்து எந்த உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்துள்ளது
  • வெளிநாட்டுத் தலையீட்டை ரஷியா அனுமதிக்காது என்கிறார் புடின் : ரஷியா தனது வளர்ச்சியில் எந்தவிதமான வெளிநாட்டுத் தலையீடையும் அனுமதிக்காது என்று வெளிநாட்டு தூதுவர்களிடம் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்
  • இந்திய வம்சாவழியினர் மீது மலேசிய அரசு குற்றச்சாட்டு : சிறுபான்மையினருக்கு சம உரிமை கோரும், தடை செய்யப்பட்ட ஊர்வலம் ஒன்றில் கலந்து கொண்டதற்காக மலேசிய அரசாங்கம் இந்திய வம்சாவழியினர் சுமார் 90 பேர் மீது குற்றஞ்சாட்டியுள்ளது
  • தென்னாபிரிக்காவில் எய்ட்ஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் ஊழல் : எயிட்ஸ் மற்றும் எச் ஐ வி பரவலைத் தோற்கடிப்பதற்கான முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்திய ஊழல் மற்றும் தவறான முகாமைத்துவம் ஆகியவற்றை அனுமதித்தது தொடர்பில், தென்னாபிரிக்க அரசாங்கத்தை ஒரு அறிக்கை விமர்சித்துள்ளது

தமிழீழத் தேசியத்தலைவர் ஆற்றிய மாவீரர் நாள் உரை

சர்வதேசச் சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்கும் என எமது மக்கள் இன்றைய புனித நாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர் என்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரையில் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத்தலைவர் இன்று செவ்வாய்க்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை: எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப்பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரிநட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்துநிற்கின்றனர்.


ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச்செல்பவர்கள் எமது மாவீரர்களே. மனித வரலாற்றுச் சக்கரம், காலங்களைக் கடந்து, யுகங்களை விழுங்கி, முடிவில்லாமற் சுழல்கிறது. இந்த முடிவில்லாத இயக்கத்தில், உலகத்து மனிதன் நிறையவே மாறிவிட்டான். அவனிடத்தில் எத்தனையோ புதிய சிந்தனைகள் தோன்றியிருக்கின்றன் எத்தனையோ புதிய கருத்தோட்டங்கள் பிறந்திருக்கின்றன. எத்தனையோ புதிய எண்ணங்கள் அவன் மனதிலே தெறித்திருக்கின்றன. இந்தச் சிந்தனைத் தெறிப்பிலே, சுதந்திரமும் சமத்துவமும் கூடிக்குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டுகொண்டான். சாதி, சமய, பேதங்கள் ஒழிந்த, அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற, சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய, கொந்தளிப்புக்களும் நெருக்கடிகளும் அகன்ற ஓர் உன்னத வாழ்வைக் கற்பிதம் செய்தான். இந்தக் கற்பிதத்திலிருந்து தோன்றிய கருத்துருவம்தான் சுதந்திரம். இந்த உன்னதமான கருத்துருவை வாழ்வின் உயரிய இலட்சியமாக வரித்து, மனிதன்
போராடப் புயலாகப் புறப்பட்டான்.


ஓயாது வீசும் இந்த விடுதலைப் புயல் இன்று எமது தேசத்திலே மையம்கொண்டு நிற்கிறது. சுழன்றடிக்கும் சூறாவளியாக, குமுறும் எரிமலையாக, ஆர்ப்பரித்தெழும் அலைகடலாக எமது மக்கள் வரலாற்றிலே என்றுமில்லாதவாறு ஒரே தேசமாக, ஒரே மக்களாக ஒரே அணியில் ஒன்றுதிரண்டு நிற்கின்றனர். ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாக, ஒன்றுபட்ட இனமாகத் தமக்கு முன்னால் எழுந்த எல்லாத்தடைகளையும் உடைத்தெறிந்து நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்துநிற்கின்றனர். எல்லைக்காப்புப் படைகளாக, துணைப்படைகளாக, விசேட அதிரடிப்படைகளாக எழுந்துநிற்கின்றனர். போர்க்கோலம் கொண்டு, மூச்சோடும் வீச்சோடும் போராடப் புறப்பட்டுநிற்கின்றனர். முப்பத்தைந்து ஆண்டுகளாக ஓய்வில்லாமல் வீசும் எமது வீரவிடுதலை வரலாற்றில் நாம் என்றுமில்லாதவாறு தரைப்படை, கடற்படை, வான்படையென முப்படைகளும் ஒன்றுசேர ஒரு பெரும் படையாக எழுந்து, நிமிர்ந்து நிற்கிறோம்.


நீண்ட கொடிய சமர்களிற் களமாடி அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற முன்னணிப் படையணிகளோடும் பன்முகத் தாக்குதல்களையும் நிகழ்த்தவல்ல சிறப்புப் பயிற்சிபெற்ற சிறப்புப் படையணிகளோடும் நவீன படைக்கலச் சக்திகளுடனும் பெரும் போராயுதங்களுடனும் ஆட்பலம், ஆயுதபலம், ஆன்மபலம் எனச் சகல பலத்துடனும் நவீன இராணுவமாக வளர்ந்துநிற்கிறோம்.


நீண்டகாலம் பெரும் சமர்களை எதிர்கொண்டு, மூர்க்கமாகப் போர்புரிந்து பெற்றெடுத்த பட்டறிவாலும் கற்றறிந்த பாடங்களாலும் கட்டப்பட்டுச் செழுமைபெற்ற புதிய போர் மூலோபாயங்களோடும் புதிய போர்முறைத் திட்டங்களோடும் நவீன போரியல் உத்திகளோடும் எதையும் எதிர்கொள்ளத் தயாராக நிற்கிறோம். இந்த மலையான நிமிர்விற்கு, இந்தப் பூகம்ப மாற்றத்திற்கு ஆதாரமாக நிற்பவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் இங்குப் பெருமிதத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.


எனது அன்பார்ந்த மக்களே!

நாம் வாழும் உலகிலே புதிய பூகம்ப மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. உலகமே ஆசியாவை நோக்கித் திரும்பியிருக்கிறது. இருபத்தொராம் நூற்றாண்டும் ஆசியாவின் சகாப்தமாக ஆரம்பித்திருக்கிறது. எமது பிராந்தியத்தைச் சேர்ந்த, எமது கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் சமூக, பொருளாதார, விஞ்ஞானத்துறைகளிலே பெருவளர்ச்சியீட்டி முன்னேறி வருகின்றன. அண்டவெளி ஆராய்ச்சிகள், சந்திரமண்டல ஆய்வுகள், அணுக்கருப் பரிசோதனைகளெனப் புதிய பாதையிலே பயணிக்கின்றன. மனித சமுதாயம் முன்னெப்போதும் காணாத புதிய சவால்களுக்கு முகம்கொடுத்து, இயற்கையின் எண்ணற்ற புதிர்களுக்கு விடைகள் காணவும் தீராத வியாதிகளுக்குத் தீர்வுகள் தேடவும் புதிய பயணத்திலே இறங்கியிருக்கிறது. அரிய உயிரினங்களையும் தாவர வகைகளையுங்கூடக் காத்து, பூகோள முழுமையையும் பாதுகாக்கின்ற புனித முயற்சியிலே காலடி எடுத்துவைத்திருக்கிறது. ஆனால், சிங்களத் தேசம் மாத்திரம் நேரெதிர்த் திசையிலே, அழிவு நோக்கிய பாதையிலே சென்று கொண்டிருக்கிறது. தன்னையும் அழித்து, தமிழினத்தையும் அழித்துவருகிறது. இதனால், அழகிய இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்கிறது. பௌத்தம் ஓர் ஆழமான ஆன்மீகத் தரிசனம். அன்பையும் அறத்தையும் ஆசைகள் அகன்ற பற்றற்ற வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மீகத் தத்துவம். இந்தத் தார்மீக நெறியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் சிங்களம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே இனவாத விசத்தினுள் மூழ்கிக்கிடக்கிறது. சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமான வன்முறையாகக் கோரத்தாண்டவமாடுகிறது. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை அகன்ற அகிம்சை வழியிலும், ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்டபோதும் சிங்கள உலகிலே சிறிதளவும் மனமாற்றம் நிகழவில்லை. எத்தனையோ இழப்புக்கள், எத்தனையோ அழிவுகள், எண்ணற்ற உயிர்ப்பலிகள் நிகழ்ந்தபோதும் சிங்களத் தேசம் மனந்திருந்தவில்லை. தொடர்ந்தும், அது வன்முறைப் பாதையிலேயே பயணிக்கிறது. அடக்குமுறையாலும் ஆயுதப்பலத்தாலும் தமிழரின் தேசியப்
பிரச்சினைக்குத் தீர்வுகாணவே அது விரும்புகிறது. அமைதி முயற்சிகளுக்கு ஆப்புவைத்துவிட்டு, தனது இராணுவ நிகழ்ச்சித்திட்டத்தைத் துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. இதற்குச்சர்வதேசச் சமூகத்தினது பொருளாதார, இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் ஒருபக்கச்சார்பான தலையீடுகளுந்தான் காரணம். எமது பிராந்தியத்திலே உலகப் பெரு வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம். இதற்கு இலங்கைத்தீவில் நெருக்கடிநிலை நீங்கி, சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். இதேநேரம் பேரினவாதச் சிங்கள அரசு உலகநாடுகளின் நலன்களையும் அவை எமது பிராந்தியத்திற் பதிந்திருப்பதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது. போலியான, பொய்யான பரப்புரைகள் வாயிலாக உலகநாடுகளைத் தமது வஞ்சக வலைக்குள் வீழ்;த்தி, தமிழரது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத்திருப்பிவிடுகின்ற கைங்கரியத்தைச் செய்துவருகிறது. சிங்கள அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து, உலகநாடுகள் எமது பிரச்சினையில் எதிர்மறையான தலையீடுகளைச் செய்வதுதான் எமக்கும் எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.


இப்படியான அநீதியில் அமைந்த அந்நியத் தலையீடுகள், காலங்களை விழுங்கி நீண்டுசெல்லும் எமது போராட்டத்திற்குப் புதியவை அல்ல. அன்று இந்தியா தனது தெற்கு நோக்கிய வல்லாதிக்க விரிவாக்கமாக எமது தேசியப் பிரச்சினையிலே தலையீடு செய்தது. தமிழரது சம்மதமோ ஒப்புதலோ இன்றி, சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்தது. அடிப்படையில் அந்த ஒப்பந்தம் தமிழரது நலனுக்காகவோ நல்வாழ்விற்காகவோ செய்யப்பட்டதன்று. தீர்வு என்ற பெயரில் ஐம்பத்தேழிற்கைச்சாத்தான பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இருந்த அதிகாரங்களைக்கூடக் கொண்டிராத எலும்புத்துண்டு போன்ற ஒரு அரைகுறைத் தீர்வை இந்தியா அன்று எம்மக்கள்மீது கட்டிவிட முயற்சித்தது. ஓர் இலட்சம் இராணுவத்தினரின் பக்கபலத்தோடும் இரண்டு அரசுகளின் உடன்பாட்டு வலிமையோடும் எட்டப்பர் குழுக்களின் ஒத்துழைப்போடும் அந்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்திவிட இந்தியா தீவிரமாக முயற்சித்தது. தமிழரது தேசியப் பிரச்சினையின் அடிப்படைகள் எதையும் தொட்டு நிற்காத, தமிழரின் அரசியல் அபிலாசைகள் எதையும் பூர்த்திசெய்யாத அந்த அரைகுறைத்தீர்வைக்கூடச் செயற்படச் சிங்களப் பேரினவாதிகள் அன்று அனுமதிக்கவில்லை.


சிங்களத் தேசம் பற்றியும் அதன் நயவஞ்சக அரசியல் பற்றியும் நாம் நன்கு அறிவோம். எமக்கு அதுபற்றிய நீண்ட பட்டறிவும் கசப்பான வரலாறும் இருக்கின்றன. எனவேதான், நாம் அன்று இந்தியாவுடன் பல்வேறு தடவைகள் பல்வேறு இடங்களிற் பல்வேறு மட்டங்களில் நடந்த பேச்சுக்களின்போது, சிங்களப் பேரினவாதம் பற்றி அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக்கூறினோம். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, தமிழர் தேசத்தில் அமைதியைக் கொண்டுவருவது சிங்கள அரசின் நோக்கமன்று, தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து, தமிழரின் வளங்களை அழித்து, தமிழரை அடிமைகொண்டு, அழித்தொழிப்பதுதான் சிங்கள அரசின் நோக்கம் என்பதை அன்று இந்தியாவிற்கு எடுத்துரைத்தோம். இந்தியா இணங்கமறுத்தது. இதனால், தமிழ் மக்கள் தமது மண்ணிலேயே பெரும் அழிவுகளையும் அனர்த்தங்களையும் சந்தித்தனர். அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கிறது. சிங்கள அரசின் சாதுரியமான, சாணக்கியமான பரப்புரைகளுக்குப் பலியாகி, சமாதான முயற்சிகளுக்குப் பாதுகாவலனாக நின்ற நாடுகளே, எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டிருக்கின்றன. இதில் வேதனையான, ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்னவென்றால் ஒருகாலத்தில் எம்மைப் போன்று தமது சுதந்திரத்திற்காகப் போராடிய தேசங்களும் எம்மைப் பயங்கரவாதிகளாகப் பட்டஞ்சூட்டியமைதான்.


இவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று, தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டிவருவதையும் சிங்களத் தேசத்தாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குட்சிக்கி, எம்மக்கள் அழிந்துவருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க, புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டுவருவதையும் சிங்களப் பேரினவாதத்தாற் சகிக்கமுடியவில்லை. எனவேதான், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடச் சிங்களப் பேரினவாதம் தீவிரமாக
முயற்சித்துவருகிறது. இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன. எம்மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டிவருகின்றன. தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன.


நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப் படுத்தியிருக்கின்றன. இத்தகைய நடுநிலை தவறிய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் சர்வதேசச் சமூகம்மீது எம்மக்கள்
கொண்டிருந்த ஆழமான நம்பிக்கைகளை மோசமாகப் பாதித்திருப்பதோடு அமைதி முயற்சிகளுக்கும் ஆப்பு வைத்திருக்கின்றன் சமாதானப் பேச்சுக்களிற் பங்குகொண்ட இருதரப்பினரது சமநிலை உறவைப் பாதித்து, அமைதி ஒப்பந்தமும் முறிந்துபோக வழிசெய்திருக்கின்றன.


அத்தோடு, இந்நாடுகள் வழங்கிவரும் தாராளப் பொருளாதார இராணுவ உதவிகளும் இரகசியமான இராஜதந்திர முண்டு கொடுப்புக்களும் சிங்கள இனவாத அரசை மேலும்மேலும் இராணுவப் பாதையிலேயே தள்ளிவிட்டிருக்கிறன. இதனால்தான், மகிந்த அரசு அநீதியான, அராஜகமான ஆக்கிரமிப்புப் போரை எமது மண்ணிலே துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்து வருகிறது. இராணுவப் பலத்தைக்கொண்டு, தமிழரின் சுதந்திர இயக்கத்தை அழித்துவிடலாம் என்ற மமதையில் மகிந்த அரசு சமாதானத்திற்கான கதவுகளை இறுகச்சாத்தியது. தமிழ் மண்ணை ஆக்கிரமித்து, தமிழரை அடக்கியொடுக்கி ஆளவேண்டும் என்ற ஆசை என்றுமில்லாதவாறு தீவிரம்பெற்றது. முழுஉலகமும் முண்டுகொடுத்துநிற்க, போர்நிறுத்தத்தைக் கவசமாக வைத்து, சமாதானச் சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தி, மகிந்த அரசு ஆக்கிரமிப்புப் போரை அரங்கேற்றியது. போர் நிறுத்தத்தைக் கண்காணித்த கண்காணிப்புக்குழு கண்களை மூடிக்கொண்டும் கைகளைக் கட்டிக்கொண்டும் கொழும்பிலே படுத்துறங்கியது.


அனுசரணையாளரான நோர்வே நாட்டினர் அலுத்துப்போய் அமைதியாக இருந்தார்கள். எமக்குச் சமாதானம் போதித்த உலக நாடுகள் மௌனித்துப் பேசமறுத்தன. "சமாதானத்திற்கான போர் என்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை" என்றும் "தமிழரின் விடுதலைக்காக, விமோசனத்திற்காக நடாத்தப்படும் போர்" என்றும் சிங்கள அரசு தமிழின அழிப்பை நியாயப்படுத்திப் போரைத் தொடர்கிறது. மகிந்த அரசு தனது முழுப் படைப்பலச்சக்தியையும் அழிவாயுதங்களையும் ஒன்றுதிரட்டி எமது தாயகத்தின் தெற்குப் பிராந்தியம் மீது பெரும் போரைக் கட்டவிழ்த்துவிட்டது. ஓயாத மழையாகப் பொழிந்த அகோரக் குண்டுவீச்சுக்களாலும் எறிகணைகளாலும் எமது பண்டைய நாகரிகம் புதைந்த வரலாற்றுமண் மயானபூமியாக மாறியது. சரித்திரப் பிரசித்தி பெற்ற தமிழரின் தலைநகரான திருமலை சிதைக்கப்பட்டது. தமிழரின் பண்டைய பண்பாட்டு நகரான மட்டக்களப்பு அகதிகளின் நகரானது. வடக்கில் தமிழரின் கலாச்சார மையமான யாழ்ப்பாணம் வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.

மொத்தத்தில், சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போர் தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து, தமிழரை அகதிகளாக்கி, தமிழரின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீரழித்து, தமிழருக்கு என்றுமில்லாத பேரவலத்தைக் கொடுத்திருக்கிறது. எமது தாய்நிலம், ஒருபுறம் சிங்கள இராணுவப் பேயாட்சிக்குட் சிக்கிச்சீரழிய, மறுபுறம் உயர்பாதுகாப்பு வலயங்கள், விசேட பொருளாதார வலயங்கள் என்ற பெயரில் வேகமாகச் சிங்களமயப்படுத்தப்படுகிறது. சிங்கக் கொடிகளை ஏற்றியும் சித்தார்த்தன் சிலைகளை நாட்டியும் வீதிகளுக்குச் சிங்களப் பெயர்களை மாற்றியும் பௌத்த விகாரைகளைக் கட்டியும் சிங்களமயமாக்கல் கடுகதி வேகத்திலே தொடர்கிறது. இதன் உச்சமாக, தமிழீழத்தின் தென் மாநிலம் முழுவதிலும் சிங்களக் குடியேற்றங்கள் காளான்கள் போன்று அசுரவேகத்திலே முளைத்துவருகின்றன. அநீதியான யுத்தம் ஒன்றை நடாத்தி, பொருளாதாரத் தடைகளை விதித்து, போக்குவரத்துச் சுதந்திரத்தை மறுத்து, தமிழரைக் கொன்றுகுவித்து, இலட்சக்கணக்கில் இடம்பெயரவைத்துவிட்டு, தமிழின ஆன்மாவை ஆழமாகப் பாதித்த இந்தச் சோகமான நிகழ்வைச் சிங்களத் தேசம் வெற்றிவிழாவாகக் கொண்டாடிமகிழ்கிறது. தமிழரைப் போரில் வென்றுவிட்டதாகப் பட்டாசு கொழுத்தி, வாணவேடிக்கைகள் காட்டி ஆர்ப்பரிக்கிறது.

கிழக்கு மீதான முற்றுகைவலயம் முற்றுப்பெற்றுவிட்டதாகவும் யாழ்ப்பாணத்தின் கழுத்தைச் சுற்றி முள்வேலியை இறுக்கி விட்டதாகவும் சிங்கள இராணுவத் தலைமை எண்ணிக்கொண்டது. பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரை, கிழக்குக் கரையோரம் முழுமைக்கும் விலங்கிட்டுவிட்டதாகச் சிங்களப் பேரினவாதம் திமிர்கொண்டது. புலிகளுக்கு எதிரான போரிற் பெருவெற்றி ஈட்டிவிட்டதாகச் சிங்கள ஆட்சிப்பீடம் திருப்திகொண்டது.

எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது. குறைத்தே மதிப்பீடுசெய்கிறது. பூகோள அமைப்பையும் புறநிலை உண்மைகளையும் மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு, எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் சரியாக எடைபோட்டு, எதிர்விளைவுகளை மதிப்பீடு செய்து, இவற்றின் அடிப்படையிலேயே நாம் எமது போர்த்திட்டங்களைச் செயற்படுத்துகிறோம். எதிரியின் யுத்த நோக்குகளையும் உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக அனுமானித்தறிந்தே, எமது போர்த்திட்டங்களை வகுக்கிறோம். இப்படித்தான் கிழக்கிலும் எமது போர்த்திட்டங்களை வகுத்தோம். தற்காப்புத் தாக்குதல்களை நடாத்தியவாறு தந்திரோபாயமாகப் பின்வாங்கினோம். புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும் நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் "ஜெயசிக்குறு சமரிற் கற்றறிந்திருக்கலாம். ஆனால், சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து, பெருந்தொகையில் படையினரை முடக்கி, ஆளில்லாப் பிரதேசங்களை இன்று ஆட்சிபுரிகிறது. நில அபகரிப்பு என்ற பொறியிற் சிங்களம் மீளமுடியாதவாறு மீளவும் விழுந்திருக்கிறது.

இதன் பாரதூரமான விளைவுகளை அது விரைவிற் சந்தித்தே ஆகவேண்டிவரும். வரலாற்றிலே முதல்தடவையாக எமது கரும்புலி அணியினரும் வான்புலிகளும் கூட்டாக நடாத்திய "ல்லாளன் நடவடிக்கை சிங்கள இராணுவப்பூதத்தின் உச்சந்தலையிலே ஆப்பாக இறங்கியிருக்கிறது. இந்த மண்டை அடி சிங்களம் கட்டிய கற்பனைகள் கண்டுவந்த கனவுகள் அத்தனையையும் அடியோடு கலைத்திருக்கிறது. அநுராதபுர மண்ணில் எம்மினிய வீரர்கள் ஏற்படுத்திய இந்தப் பேரதிர்விலிருந்து சிங்களத் தேசம் இன்னும் மீண்டெழவில்லை.

ஈகத்தின் எல்லையைத் தொட்டுவிட்ட இந்த வீரர்களின் உயர்ந்த உன்னதமான அர்ப்பணிப்பு சிங்களத்தேசத்திற்கு ஒரு செய்தியைச் சொல்கிறது. அதாவது, தமிழனை அழிக்க நினைப்போருக்கு அழிவு நிச்சியம் என்பதோடு, இந்த மாவீரர்கள் பற்றவைத்துள்ள விடுதலைத்தீயின் எரிநாக்குகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் எங்கிருந்தாலும் தப்பிவிடமுடியாது என்பதுதான் அது. இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம் தமிழரின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது என்பதை மகிந்த அரசு இனியும் உணர்ந்துகொள்ளப்போவதில்லை. இராணுவ மேலாதிக்கத்தை எட்டிப்பிடிக்கவேண்டும், தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துச் சிங்களமயமாக்கிவிடவேண்டும் என்ற ஆதிக்கவெறியும் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து அகன்றுவிடப்போவதில்லை.

தொடர்ந்தும் கோடிகோடியாகப் பணத்தைக் கொட்டி, உலகெங்கிலிருந்தும் அழிவாயுதங்களையும் போராயுதங்களையும் தருவிக்கவே மகிந்த அரசு முனைப்புடன் செயற்படுகிறது. எனவே, மகிந்த அரசு தனது தமிழின அழிப்புப்போரைக் கைவிடப்போவதில்லை. தனது பாரிய இராணுவத் திட்டத்தையும் அதன் விளைவாகத் தமிழீழ மண்ணில் ஏற்பட்டுவரும் பேரவலங்களையும் மூடிமறைத்து, உலகத்தின் கவனத்தைத் திசைதிருப்பி, உலக நாடுகளின் உதவியையும் பேராதரவையும் பெற்றுக்கொள்ளவே மகிந்த அரசு அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அமைத்தது.

இதனைக் கடந்த மாவீரர் நினைவுரையில் நான் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தேன். வருடக்கணக்கிற் காலத்தை இழுத்தடித்து, எந்தவிதமான தீர்வையும் முன்வைக்கமுடியாது, இறுதியில் இரண்டு மாத விடுப்பிற் பிரதிநிதிகள் குழுவினர் சென்றிருப்பது இதனையே காட்டிநிற்கிறது. தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையிற் சமாதான வழியில்
தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லையென்பது கடந்த அறுபது ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை
ஏற்றுக்கொள்ளவும் தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத்திட்டமே வேண்டாம் என மஞ்சள், சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நிலைப்பாடுகளிலிருந்து குத்துக்கரணம் அடித்து, அரசின் போர் நடவடிக்கைக்கும் ஆதரவு, சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவு எனப் பிரதான எதிர்க்கட்சி எதையும் தெளிவாகக் கூறாது இழுவல் மொழியில் நழுவிக்கண்ணாம்பூச்சி விளையாடுவதும் இதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன. இதன்மூலம் சிங்கள அரசியற் கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக்கட்சிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து யாரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று. சிங்களப் படைகளின் "அக்கினிக்கீல" என்ற பாரிய படைநடவடிக்கையைத் தவிடுபொடியாக்கி, போரிற் புலிகளை வெற்றிகொள்ளமுடியாது என்பதைச் சிங்களத் தேசத்திற்கு இடித்துரைத்தபோதுதான் அன்று சிங்களம் அமைதி முயற்சிக்கு ஆர்வம்காட்டியது. எமது உயரிய போராற்றலை வெளிப்படுத்தி, இராணுவ மேலாதிக்கநிலையில் நின்றபோதுதான் சிங்களத் தேசம் அமைதி ஒப்பந்தத்திற் கைச்சாத்திட்டது. உலக நாடுகளிலிருந்து பெற்ற தாராள நிதியுதவிகளையும் ஆயுத உதவிகளையுங் கொண்டு தனது சிதைந்துபோன இராணுவ இயந்திரத்தைச் செப்பனிட்டு, தனது இராணுவ அரக்கனைப் போரிற்குத் தயார்ப்படுத்திச் சிங்களத் தேசம் சமாதான வழியிலிருந்தும் சமரசப் பாதையிலிருந்தும் விலகித் தனது பழைய இராணுவப்பாதையிற் பயணிக்கிறது.

மகிந்த அரசு ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை முறித்து, தமிழர் தாயகத்தின் புவியியல் ஒருமைப்பாட்டையும் தனித்துவத்தையும் அழித்தொழிக்கும் இராணுவச் செயற்றிட்டத்தை இன்று ஈவிரக்கமின்றிச் செயற்படுத்திவருகிறது. ஆயிரக்கணக்கில் எம்மக்களைக் கொன்றுகுவித்து, கடத்திப் புதைகுழிகளுக்குட் புதைத்து, பெரும் மனித அவலத்தை எம்மண்ணில் நிகழ்;த்திவருகிறது. அனுசரணையாளரான நோர்வேயை அதட்டி அடக்கிவருகிறது. கண்காணிப்புக்குழுவைக் காரசாரமாக விமர்சித்துவருகிறது. தனது பயங்கரவாதத்தை மூடிமறைக்க ஐ.நாவின் உயர் அதிகாரிகளைக்கூடப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கிறது. செய்தியாளர்களோ தொண்டுநிறுவனங்களோ செயற்படமுடியாதவாறு தமிழர் தாயகத்திற்கு பதற்றத்தையும் பயப்பீதியையும் உருவாக்கி, உண்மை நிலைவரத்தை உலகிற்கு மறைத்துவருகிறது. உலக நாடுகள் தமது சொந்தப் பொருளாதாரக் கேந்திர நலன்களை முன்னெடுக்கின்ற போதும் மனித உரிமைகளுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் மதிப்புக்கொடுக்கத் தவறுவதில்லை. இந்தப் பிரபஞ்சமும் சரி, மனித வாழ்வியக்கமும் சரி, உலக உறவுகளும் சரி தர்மத்தின் சக்கரத்திலேயே இன்னமும் சுழல்கின்றன. இதனால்தான், விடுதலைக்காகப் போராடிய கிழக்குத்தீமோர், மொன்ரிநீக்ரோ போன்ற தேசங்கள் சர்வதேசத்தின் ஆதரவோடும் அனுசரணையோடும் புதிய தேசங்களாக அடிமை விலங்கை உடைத்தெறிந்துகொண்டு விடுதலை பெற்றன. கொசோவோ போன்ற தேசங்களின் விடுதலைக்காகவும் சர்வதேசம் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட்டுவருகிறது.

இருப்பினும், எமது தேசியப் பிரச்சினையிற் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் எம்மக்களுக்குத் திருப்தி தருவனவாக அமையவில்லை. இந்நாடுகள் மீது எம்மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று தகர்ந்துபோயிருக்கிறது. இந்நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டிலே இன்று பெரும் கேள்விக்குறி எழுந்திருக்கிறது. சமாதானத்திற்காக உழைத்த எமது தவப்புதல்வன் தமிழ்ச்செல்வனைச் சர்வதேசம் சமாதானம் பேசியே சாகடித்திருக்கிறது. அமைதிப் பாதையில் இயங்கிய எமது விடுதலை இயக்கத்தின் இதயத்துடிப்பை வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தியிருக்கிறது. எமது இதயங்களில் இலட்சிய நெருப்பை மூட்டி, மறைந்த மாவீரருக்கு ஆண்டுதோறும் விளக்கேற்றும்போது எப்போதும் என்னருகிருந்த எனது அன்புத்தம்பி தமிழ்ச்செல்வனுக்கும் சேர்த்து இம்முறை என்கையால் ஈகச்சுடரேற்றும் நிலைமையைச் சர்வதேசம் உருவாக்கியிருக்கிறது. உலகத் தமிழினத்தையே கண்ணீரிற் கரைத்து, கலங்கியழவைத்திருக்கிறது. சிங்களத் தேசத்தின் சமாதான விரோதப்போக்கை, போர்வெறியை உலக நாடுகள் உறுதியோடு கண்டித்திருந்திருந்தால், தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான். சமாதானத்திற்கு இப்படியொரு பேரிடி விழுந்திருக்காது. சமாதானத்தின் காவலர்களாக வீற்றிருக்கும் இணைத்தலைமை நாடுகளும் இந்தப் பெரும் பொறுப்பிலிருந்து தவறியிருக்கின்றன. சமாதானத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் தார்மீகக் கடமைப்பாடும் இந்த இணைத்தலைமை நாடுகளுக்கு இல்லையென்றால் காலத்திற்குக்காலம் இடத்திற்கிடம் அவர்கள் மாநாடு கூட்டுவதன் அர்த்தம்தான் என்ன? சிங்கள அரசிற்குச் சீர்வரிசை செய்து, ஆயுத உதவிகள் அளித்து, தமிழரை அழித்துக்கட்டத் துணைபோவதுதான் இந்த நாடுகளின் உள்ளார்ந்த நோக்கமா? இத்தனை கேள்விகள் இன்று எம்மக்களது மனங்களிலே எழுந்திருக்கின்றன. எனவே, சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இனஅழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவப் பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேச சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்கும் என எமது மக்கள் இன்றைய புனிதநாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர்.

எனது அன்பார்ந்த மக்களே! நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்புவாய்ந்த இனம்; மிகவும் தொன்மை வாய்ந்த இனம்; தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழுகின்ற ஓர் இனம். நீண்ட காலமாக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக, விடிவு தேடி, விடுதலை வேண்டிப் போராடிவருகிறோம். நாம் காலங்காலமாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எமது சொந்த மண்ணில் எமக்கேயுரித்தான வரலாற்று மண்ணில் அந்நியரிடம் பறிகொடுத்த ஆட்சியுரிமையை மீளநிலைநாட்டுவதற்காகவே போராடிவருகிறோம். இழந்துவிட்ட எமது இறையாண்மையை மீளநிறுவி, எமது சுதந்திரத் தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காகவே நாம் போராடிவருகிறோம். எமது மக்களின் இந்த நீதியான, நியாயமான, நாகரிகமான போராட்டத்தைச் சிங்களத் தேசம் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது. மாறாக, எம்மண் மீதும் மக்கள்மீதும் பெரும் இனஅழிப்புப் போரை, ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. போர் என்ற போர்வையில் மாபெரும் மனித அவலத்தை ஏற்படுத்திவருகிறது. அறுபது ஆண்டுக்காலமாக அநீதி இழைக்கப்பட்டு, அடக்குமுறைக்கு ஆட்பட்டு, சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும் குடிபெயர்ந்த அகதிவாழ்வுமாக எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ, எந்தவோர் அமைப்போ குரல் கொடுக்கவில்லை. ஆதரவோ அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணை மூடிக்கொண்டு, பாராமுகமாகச் செயற்படுகிறது. பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம். எனவே, எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சிநாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன்
கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன்.


அறிவுவளம், செயல்வளம், பொருள்வளம், பணவளம் என உங்களிடம் நிறைந்துகிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்களுக்கும் உதவிகளுக்கும் இச்சந்தர்ப்பத்திலே எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோன்று வருங்காலத்திலும் நிறைந்த பங்களிப்பை வழங்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன். சத்திய இலட்சியத்திற்காகச் சாவைச் சந்தித்துச் சரித்திரமாவதற்கு ஆயிரமாயிரம் வீரர்கள் எமது விடுதலை இயக்கத்தில் அணிவகுத்து நிற்கும் வரை, எமக்கு முன்னால் எழுகின்ற எல்லாத்தடைகளையும் நாம் உடைத்தெறிந்து போராடுவோம். எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் எமது வீரர்கள் சமராடும் வரை, எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம். புனித இலட்சியத்திற்காகத் தம்மையே ஆகுதியாக்கிக்கொண்ட எமது மாவீரரை நினைவுகூரும் இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் அந்த மாவீரரின் இலட்சியக் கனவை எமது நெஞ்சங்களிலே சுமந்து, அந்த மாவீரரின் இறுதி இலட்சியம் நிறைவுபெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

November 27, 2007

பிறந்த குழந்தைக்கு சூடு வைக்கும் பழக்கம்

சூடு வைக்கப்பட்ட ஒரு குழந்தை பிறந்த குழந்தையின் வீறிட்ட அழுகை, பொதுவாக பெரியவர்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய விடயம். ஆனால் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மலையோர கிராமங்களில், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இது போன்ற வீறிட்ட அழுகை கேட்டால், அந்த குழந்தைக்கு சூடு வைக்கப்படுகிறது என்பதன் அடையாளம் அது என்கிறார்கள் ஐநாமன்றத்தின் சிறார்களுக்கான அமைப்பான யுனிசெப் அமைப்பினர். இந்த பகுதியில், பல தலைமுறைகளாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் பிறந்த குழந்தைகளுக்கு சூடு வைக்கும் ஆபத்தான பழக்கத்தை ஒழிக்கும் முயற்சியில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இந்த பணியை தற்போது மேற்பார்வையிட்டு வரும் யுனிசெப் அமைப்பின் ஆலோசகரான பி.கணேசமூர்த்தி அவர்கள் இந்த சூடு வைக்கும் பழக்கம் குறித்தும் அதனைத் தடுப்பதற்கான முயற்சிகள் குறித்தும் வழங்கும் செவ்வியை இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்

இன்றைய குறள்

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்

அறத்துப்பால் : வெஃகாமை

சுவாமி சித்பவானந்தர்

"ஒரு நாள் உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று, அனுஷ்டானத்திற்கு ஏற்ற அளவு யோகத்தின் பயன் உண்டு" - சுவாமி சித்பவானந்தர்

சர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி

  • விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக் கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

    கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.

    ஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.

    அதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

    கிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

    இலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.

    தமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.

    ஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • வட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்
  • புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல் : புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்
  • கிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி : இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்
  • விடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி : விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்
  • மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்தைகள் தொடங்கியது : மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் துவக்கும் முகமாக ஒரு சர்வதேச மாநாடு வாஷிங்டனுக்கு அருகிலுள்ள அனாபோலிஸில் ஆரம்பாகவுள்ளது
  • போலீஸாரை தாக்கியவர்கள் குற்றவாளிகள் என்கிறார் பிரெஞ்சுப் பிரதமர் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வரும் வன்முறைகளின் இரண்டாம் நாள் இரவன்று, போலீசார் மீது துப்பாகிச் சூடு நடத்திய கிளர்ச்சியாளர்களை குற்றவாளிகள் என பிரெஞ்சு பிரதமர் ஃப்ரான்ஸுவா ஃபிலான் வர்ணித்துள்ளார்
  • சிக்கலில் சாம்சங் நிறுவனம் : தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம், அரசு அதிகாரிகளுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை கையூட்டாக கொடுத்தது என்கிற குற்றச்சாட்டு தொடர்பில், சுயாதீனமான ஒரு விசாரணையை அந்த நிறுவனம் எதிர்கொள்ளவுள்ளது
  • அடுத்த தலாய் லாமாவை திபேத்தியர்களே தேர்தெடுக்க வேண்டும் என்கிறார் தற்போதைய தலாய் லாமா : தலாய் லாமாநாடு கடந்த நிலையில் வாழும் திபேத்திலுள்ள புத்தமதத்தினர்களின் மதத்தலைவரான தலாய் லாமா அவர்கள், தமக்கு அடுத்த மதத்தலைவரை தேர்தெடுக்கும் வழிமுறைகளில் திபேத்திய மக்களுக்கு ஒரு பங்கிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

வசீகரப்பாடகி வசுந்த்ரா தாஸ்

November 26, 2007

இன்றைய குறள்

அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோறும் இல்லை, பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை


அறத்துப்பால் : அழுக்காறாமை

நீதித்துறை மற்றவர்களது வட்டத்தில் மூக்கை நுழைத்து அறிவுறுத்த வேண்டிய காட்டாயம் நிலவுகிறது

"நீதித்துறையின் பணி ஒன்று நடந்த பிறகு அது சட்டப்படி சரியா, தவறா என்று விமர்சிப்பதுதான். ஆனால் இன்று நீதித்துறை, 'அரசாங்கம் இப்படி செய்ய வேண்டும், சட்டசபை, பார்லிமென்ட ஆகியவை இப்படி செய்ய
வேண்டும்' என்று மற்றவர்களது வட்டத்தில் மூக்கை நுழைத்து அறிவுறுத்த வேண்டிய காட்டாயம் நிலவுகிறது. ஒரு கிரிக்கெட் மேட்சில் ஓர் ஆட்டகாரர் மிக மோசமாக விளையாடுகிறார் என்பதற்காக அம்பயர், தானே ஆட்டக்காரரிடமிருந்து கிரிக்கெட் மட்டையை வாங்கி ஆட ஆரம்பித்து விடலாமா? நீதிமன்றத்தின் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாத அரசாங் கங்களை நீதிமன்றத்தால் என்ன செய்ய முடியும்...?" - ஸ்ரீகிருஷ்ணா, அண்மையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி

இராணுவத் தலைவர் பதவியை சில நாட்களில் துறக்கிறார் அதிபர் முஷாரஃப்

  • பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃப் தமது பதவியில் இரண்டாவது தலைமைக் காலத்திற்கு எதிர்வரும் வியாழக்கிழமை விசுவாசப் பிரமாணம் செய்து பதவியேற்கும் முன்னர், இராணுவத் தளபதி பதவியிலிருந்து அவர் வெளியேறுவார் என்று அதிபரின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றார். இதற்கிடையில் நாடு கடந்த நிலையிலிருந்து நேற்று பாகிஸ்தான் திரும்பிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், எதிர்வரும் ஜனவரி மாத நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.ஆனாலும், அதிபர் ஜெனரல் பெர்வேஸ் முஷாராஃபின் கீழ் எந்த ஒரு அரசுக்கும் தாம் தலைமை ஏற்கமாட்டார் என அவர் கூறியுள்ளார்.நவாஸின் மிக நீண்டநாள் அரசியல் எதிரியான பேநசிர் பூட்டோவும் தனது வேட்புமனுவை ஏற்கனவே தாக்கல்செய்திருந்தார்.தேர்தல்கள் நியாயமான முறையில் நடப்பதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை அதிபர் முஷாரஃப் எடுக்கத் தவறினால் இப்பொதுத் தேர்தலை தாம் புறக்கணிக்கப்போவதாக இரு தலைவர்களுமே கூறியுள்ளனர்
  • வடமத்திய மாகாணத்தில் புலிகள் 4 கிராமவாசிகளை சுட்டுக்கொன்றதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் : சம்பவ இடம்இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் வில்பத்து சரணாலயத்தை அண்மித்த மாவிலாச்சிய என்ற கிராமப்பகுதியில் இன்று காலை 4 கிராமவாசிகளை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது
  • அமெரிக்காவில் மத்தியகிழக்கு அமைதி முயற்சி மாநாட்டுக்கு முன்னதாக இஸ்ரேல் பாலஸ்தீன தலைவர்களை அதிபர் புஷ் சந்திக்கிறார் : அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அருகே அன்னாபொலிஸ் என்ற இடத்தில் மத்தியகிழக்கு பற்றிய மேனிலை மாநாடு நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவிருக்கும் வேளையில் இஸ்ரேல் பிரதமர் எஹுத் ஒல்மர்ட்டையும் பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸையும் அமெரிக்க அதிபர் புஷ் சந்தித்துப் பேசவிருக்கிறார்
  • பிரான்ஸ் சீனா இடையில் பெரும் வர்த்தக உடன்பாடுகள் கையெழுத்தாகியுள்ளன : பிரான்ஸுக்கும் சீனாவுக்கும் இடையில் 3000 கோடி டொலர்கள் பெறுமதியான வர்த்தக உடன்படிக்கைகள் இருநாடுகளின் அரசுத் தலைவர்கள் முன்னிலையில் பீஜிங்கில் கைசாத்திடப்பட்டன
  • பத்திரிகையாளர் ஒருவரின் குடும்பத்தினர் 11 பேர் பாக்தாத்தில் சுட்டுக்கொலை : இராக்கியத் தலைநகர் பாக்தாத்தில் தமது குடும்பத்தாரின் 11 உறுப்பினர்களை ஷியா துப்பாக்கிதாரிகள் கொன்றிருப்பதாக வெளிநாடு ஒன்றில் வாழும் இராக்கிய பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருக்கின்றார்
  • ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கவிருக்கிறார் புதிய பிரதமர் : ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி இனத்தவர் கடந்தகாலத்தில் அனுபவித்து வந்த துஷ்பிரயோகங்கள், தவறுகளுக்காக அதிகாரபூர்வ மன்னிப்பு தாம் கேட்கவிருப்பதாக புதிதாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் கெவின் ருட் கூறியுள்ளார்
  • மன்னார் பாடசாலையில் விடுதலைப் புலிகள் நடத்தியதாக இராணுவத்தினர் குற்றம்சாட்டும் மோர்டார் தாக்குதலில் 7 பேர் காயம் : இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள மல்லவராயன் கட்டையடம்பன் பாடசாலை மீது இன்று திங்கட்கிழமை பிற்பகல் விடுதலைப் புலிகள் மோர்டார் தாக்குதல் நடத்தியதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • மத்தியகிழக்கு அமைதி முயற்சிகளில் அதிபர் புஷ் திடீர் மும்முரம் ஏன்? - ஆய்வுக் கண்ணோட்டம் : அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியிலுள்ள அன்னாபொலிஸ் நகரில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மத்தியகிழக்கு அமைதி மாநாடுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகின்றன

November 25, 2007

கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)

(..."நிலாச்சாரல்" மின்னிதழில் பிரசுரமான எனது கட்டுரையின் கடந்தவாரத் தொடர்ச்சி)... சரியான காரணம் என்னவெனில் ஒரு செய்தி இந்த உலகத்துக்குச் சொல்லப்படும்போது, அந்தச் செய்தி எந்த அளவுக்குப் போய்ச் சேருகிறது என்பது முக்கியம். அதே சமயம் அது யாரால் சொல்லப்படுகிறது என்பதும், எப்படிப்பட்ட சூழலில் சொல்லப்படுகிறது என்பதும் மிக முக்கியம். அதே வேளையில் ஒரு செய்தி உண்மையான அனுபவத்தோடும், உணர்வுகளோடும் சொல்லப்படும்போது அதன் வீச்சு பல மடங்கு இரட்டிப்பாகும் என்பதால்தான் கடவுள் என்னைப் போன்ற சிலரை உருவாக்கி எங்கள் மூலமாக இந்த உலகத்துக்குச் சில செய்திகளைச் சொல்கிறார். இது நான் அனுபவித்துணர்ந்த உண்மை. இது வேதனைகள் நிறைந்த அனுபவமாக இருப்பினும், அது தரும் முடிவுகள் இந்த உலகத்துக்குப் பயனுள்ளதாக இருப்பதால் நாங்கள் வேதனைப்படவும் தயாராகவும் இருக்கிறோம். அந்த வேதனை அதிலிருந்து கிடைக்கும் பலன்களால் ஆறிவிடப்போகிறது அவ்வளவுதான். யேசுநாதர் சிலுவையில் அறையப்படவில்லையா? இந்த அனுபவங்கள் தரும் நல்ல பலன் அந்த வேதனைகளையும், வலிகளையும் புனிதப்படுத்திவிடும்..... தொடர்ந்து படிக்கத் தயவுசெய்து இணைப்பில் செல்க...http://www.nilacharal.com/ocms/log/11260710.asp

கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழ்க் கவிதையுலகில் தனி முத்திரை பதித்தவர். புரட்சிக்கவிஞரைப் போல புதிய கவிஞர்களை வளர்த்தெடுப்பதில் ஆர்வமுடையவர். பல கவிதை நூல்களையும், கவிதை பற்றிய நூல்களையும் எழுதியவர்.
1. நீங்கள் எந்த இயக்கத்தையும் சாராமல் இருக்கக் காரணம் என்ன?
சுதந்திரமாகச் சிறகை விரிப்பவன் கவிஞன். அவனுக்கு இயக்கச் சார்பு என்பது கூண்டுதான்.
2. உங்கள் கவிதைகளின் உள்ளடக்கங்களில் சமுதாயக் கவிதைகளுக்கு அடுத்த நிலையில் தத்துவக் கவிதைகள் அதிகமாக உள்ளன. ஆயினும் உங்களைத் தத்துவ கவிஞராக யாரும் கூறவில்லையே?
விமர்சகர்களின் பக்குவமின்மை
3. நிறைவேறாத காதல் கவிதைகள் பலவற்றை நீங்கள் எழுதியமைக்கு காரணம்?
கவிஞர் காதல் கவிதைகளை பாடினால் தன் வாழ்க்கை அனுபவத்தை பாடுவதாக எடுத்துக் கொள்ளமுடியாது. நான் காதலின் பல விதமான மனோபாவங்களைப் பாடியுள்ளேன். குறிப்பாக நிறைவேறாத கவிதைகளின் பாதிப்பு எனலாம்.
4. நடிகர்கள் அரசியலுக்கு வருவதை உங்கள் கவிதைகள் எதிர்ப்பது ஏன்?
தமிழ்நாட்டின் அவலத்தைச் சுட்டிக்காட்டுவது ஒரு நோக்கம். அரசியல் தெரிந்த நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் தடையில்லை. திரைப்படங்களில் மக்களுக்கு நன்மை செய்வது போல் வருபவர்களைப் பிரவேசித்ததால் ஏற்பட்ட சீரழிவுகளை எல்லோரும் அறிவர்.
5. ஆயிரம் திருநாமம் பாடி உருவமற்ற ஒரே கடவுள் என்று குறிப்பதன் நோக்கம் என்ன?
இறைவனுக்கு உருவமில்லையே தவிர, பெயர்கள் எத்தனை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். மதங்களெல்லாம் இணையக்கூடிய ஒரு கொள்கையில் இணைப்பதுதான் என் நோக்கம்.
6. சமூகச் சீர்கேடுகள் குறித்து நீங்கள் கருதுவது என்ன?
பொருள் வேட்கையின் காரணமாக, நவ நாகரிக வாழ்க்கை முறை காரணமாக, நேர்மை, உண்மை, சுய மரியாதை போன்ற விழுமியங்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது. இதனால் உலகளவில் ஒரு பண்பாட்டுச் சீரழிவு காணப்படுகிறது. கவிஞன் ஒரு பரிபூரணமான அழகிய உலகத்தைக் காணவிரும்புகிறான். அவன் கண் முன்னால் அநீதிகளும் அக்கிரமங்களும் நடக்கிறபோது அவன் அவைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.
7. முரண் கவிதைகள் பெரிதும் எழுதிய கவிஞராகக் கருதப்பெறும் நீங்கள் அங்கதக் கவிதைகளே அதிக எண்ணிக்கையில் எழுதியுள்ளீர்களே? குறிப்பாக, நளினமாக அங்கதம் செய்கிறீர்களே?
இயல்பாகவே அங்கத உணர்வு எனக்கு பிடிக்கும். கவிதையின் இயல்புகளில் அங்கதமும் ஒன்று. நளினமாகத் தாக்குவதுதான் நாகராகம். தாக்கபடுபவனும் சிந்திக்க வேண்டும் என்பது கருத்து. அவனை எதிரியாக்கிக் கொள்ளக்கூடாது. சமூக குறைபாடுகளைக் சுட்டும்போது அங்கதத்தின் வழியாகச் சுட்டுவது ஒரு வழி.

இன்றைய குறள்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்


அறத்துப்பால் : அழுக்காறாமை

நான் கடந்து வந்த பாதையில், நான் சந்தித்த சாவல்கள் ஏராளம். அது ஒரு கரடுமுரடான பாதை - அஞ்சு ஜார்ஜ்

நான் கடந்து வந்த பாதையில், நான் சந்தித்த சாவல்கள் ஏராளம். அது ஒரு கரடுமுரடான பாதை. கிரிக்கெட்டிற்கு கோடி கோடியாக கொட்டி ஸ்பான்சர் செய்ய நிறைய நிறுவனங்கள் முன் வருகின்றன. 'முதல் மரியாதை', 'தனி மரியாதை' தரப்படுகிறது. ஆனால், மற்ற விளையாட்டுக்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அதிலும் தடகள வீரர்களை கண்டு கொள்வதேயில்லை. பொருளாதார ரீதியில்தான் இப்படி என்றால், ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அந்த சந்தோஷத்தையோ அல்லது தோல்வியடைந்தால் அந்த வருத்தத்தையோ பகிர்ந்து கொள்ளக்கூட ஆள் கிடையாது என்பது வருத்தமளிக்கும் உண்மை" - அஞ்சு ஜார்ஜ், தடகள வீராங்கனை

பாகிஸ்தான் திரும்பினார் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்

  • கொல்கத்தாவில் வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் கைது : இந்தியாவின் கொல்கத்தா நகரத்தில் கடந்த புதனன்று வன்முறை ஏற்பட காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் தலைவர் ஒருவரை ஐந்து நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்திந்திய சிறுபான்மை கூட்டமைப்பு என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இத்ரிஸ் அலி என்ற அவர், வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு கொல்கத்தாவில் அடைக்கலம் தரக்கூடாது என்று கூறி நடைபெற்ற வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். அன்று நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரினை கொல்கத்தாவை விட்டு வெளியேறுமாறு மேற்குவங்க அரசு வற்புறுத்தியது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் போன்றவை கடும் எதிர்ப்புதெரிவித்தன. தற்போது, தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தாவிற்கு திரும்பி வந்தால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க தயாராக இருப்பதாக இப்போது மேற்கு வங்க முதலமைச்சர் கூறுகின்றார்
  • கிளிநொச்சி தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை விமானப்படையினர் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலிலும் வேறு இரண்டு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களிலும் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றர்கள் என்றும் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளார்கள் என்றும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரிஃப் : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் சவுதி அரேபியாவில் இருந்து லாகூருக்கு சென்றுள்ளார். சவுதி அரேபியாவில் அரசியல் தஞ்சம் அடைந்து இருக்கும் நவாஸ் ஷெரிஃப் அதை முடித்து நாடு திரும்புவதற்கு கடந்த மூன்று மாதத்தில் நடத்தும் இரண்டாவது முயற்சி இது. விமானத்தில் பிபிசியிடம் பேசிய நவாஸ் ஷெரிஃப் தன்னுடைய லட்சியம் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியை முறியடிப்பதுதான் என்பதால், பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப்புடன் ஒத்துப் போவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். அவரது வருகையையொட்டி லாகூரில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் செப்டம்பரில் இடம்பெற்றது போல உடனடியாக நவாஸ் ஷெரிப்பை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இருப்பது போல தெரியவில்லை என பார்வையாளர்கள் கூறுகின்றனர்
  • தாக்குதலில் ஏராளமான தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர் - ஆப்கான் அதிகாரிகள் : ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான பாக்தியாவில் ஆப்கான் மற்றும் நேட்டோ படைகளுடன் நடைபெற்ற மோதலில் ஏராளமான தலிபான் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர்
  • அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை கடுமையாக சாடியுள்லார் ஆங்கிலிக்கன் திருச்சபை தலைவர் : உலகம் முழுவதும் சுமார் எழுபது மில்லியன் ஆங்கிலிக்கன் திருச்சபையை பின்பற்றுவோரின் தலைவரான டாக்டர் ரோவன் வில்லியம்ஸ் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக சாடியுள்ளார்.
    இங்கிலாந்து திருச்சபையின் தலைவரும், கேண்டர்பரியின் ஆர்ச்பிஷப்புமான ரோவன் வில்லியம்ஸ் அவர்கள், பிரதானமாக முஸ்லிம் வாசகர்களையே கொண்ட பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்றுக்கு இக்கருத்துக்களை தெரிவித்தார். பலத்தை தவறாக பயன்படுத்தும் அமெரிக்காவின் போக்கை முற்காலத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நடந்து கொண்ட முறையோடு அவர் ஒப்பிட்டுள்ளார். அத்தோடு உலகம் முழுவதும் செல்வாக்கை பெற முயற்சிக்கும் அமெரிக்காவுக்கு அந்த முயற்சி பலிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு இராக்கை ஒரு உதாரணமாக எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்
  • மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் ஆர்ப்பாட்டம் : மலேசியாவில் அரசின் தடையை மீறி தலைநகர் கோலாலம்பூரில் பேரணி நடத்திய இந்திய சிறுபான்மை மக்களுடன் மலேசிய பொலிஸார் மோதியுள்ளனர். நகரத்தின் மைய பகுதியில் விடியற்காலை குழுமிய ஆயிரக்கணக்கானவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசியதோடு, தண்ணீரையும் பீய்ச்சியடித்த பொலிஸார் குறைந்தப்பட்சம் ஐம்பது பேரை கைது செய்தனர். மலேசியாவில் சிறுபான்மையாக இருக்கும் இந்தியர்கள் பெரும்பான்மை மலாய் அரசாங்கத்தால் தாங்கள் பாரப்பட்சமாக நடத்தப்படுவதாக இந்தியர்கள் கோபமாக இருக்கின்றனர். இந்த பேரணி இன பதட்டத்தை அதிகரிக்கும் எனக் கூறி இந்த பேரணிக்கு மலேசிய அதிகாரிகள் தடை விதித்து இருந்தனர்

November 23, 2007

தமிழகத்தின் சமீபத்திய வன்முறைகள் : ஓர் ஆய்வு - 1

தமிழகத்தின் சமீபத்திய வன்முறைகள் : ஓர் ஆய்வு - 2

தமிழகத்தின் சமீபத்திய வன்முறைகள் : ஓர் ஆய்வு - 3

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவாளர் - 1

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவாளர்- 2

இன்றைய குறள்

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்


அறத்துப்பால் : அழுக்காறாமை

சிலபேரு மண்வாசனைக்காகப் பண்றோம்னு பண்றாங்க

"சிலபேரு மண்வாசனைக்காகப் பண்றோம்னு பண்றாங்க. அது என்ன ஆயிடுறதுன்னா பேச்சுத்தன்மை அதிகமாகப் போய், புரியாம போயிடுறது. கொஞ்சமா இருந்தா பரவாயில்லை. வரிக்கு வரி புரியாம போயிடுச்சுன்னா ஒரு தொடர்பே ஏற்படுத்திக்க முடியாம போயிடும். ஒரு மொழிபெயர்ப்பாளனால எப்படி அந்தப் பேச்சு மொழிய மொழிபெயர்க்க முடியும்?" - அசோகமித்திரன், எழுத்தாளர்

உத்திரப் பிரதேசத்தில் வழக்கறிஞர்களை இலக்குவைத்து தொடர் குண்டுவெடிப்புகள்

  • இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், வாரணாசி, ஃபைசாபாத் மற்றும் தலைநகர் லக்னவ் ஆகிய மூன்று நகரங்களில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.25 மணிக்கும் 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்துக்குள், மூன்று இடங்களிலும் குண்டுவெடிப்புக்கள் நடந்திருக்கின்றன. நீதிமன்ற வளாகங்களிலோ அல்லது அதற்கு வெளியிலோ, நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்களில் வைத்து இந்த குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன.
    வாரணாசி மற்றும் ஃபைசாபாத்தில் தலா இரண்டு வெடிகுண்டுகளும், லக்னவ்வில் ஒரு இடத்திலும் குண்டுவெடித்திருப்பதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வாரணாசியில் 9 பேரும், ஃபைசாபாத்தில் 4 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்த 13 பேரில் நான்கு பேர் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    இது தொடர்பில், செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச மாநில உள்துறைச் செயலர் செம்பர், இந்தக் குண்டுவெடிப்புக்கள் அனைத்தும், திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கின்றன. அனைத்தும், குறித்த நேரத்தில் வெடிக்கக்கூடிய டைமர் கருவிகள் பொருத்தப்பட்டவைஎன்றார். குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி, மத்திய புலனாய்வுத்துறை மீது குற்றம் சாட்டினார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் நடந்த குண்டுவெடிப்பு்ச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது
  • காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் இடைநீக்கம் : முஷாரஃபுக்கு இது பெரும் பின்னடைவுபாகிஸ்தானை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இடைநீக்கியதாக நேற்று வியாழக்கிழமை இரவு காமன்வெல்த் அமைப்பு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அறிவித்தது ஒரு நியாயமற்ற, முறையற்ற முடிவு என பாகிஸ்தான் கூறியுள்ளது.
    காமன்வெல்த் அமைப்பின் அடிப்படை அரசியல் விழுமியங்களை கடுமையாக மீறுவதாக பாகிஸ்தானில் தற்போதைய சூழல் அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். உகாண்டா தலைநகர் கம்பாலாவில் காமன்வெல்த் அமைச்சர்கள் செயற்குழு பாகிஸ்தானை அமைப்பிலிருந்து இடைநீக்குவதாக அறிவித்தது. அவசரநிலை சட்டத்தை விலக்கவும், இராணுவத் தலைவர் பதவியை துறக்கவும் ஜெனரல் முஷாரஃப் தவறிவிட்டார் என்பன இவ்வறிவிப்புக்கான காரணங்கள். காமன்வெல்த் தன்னிடம் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டுள்ளது என்று முஷாரஃப் கருதுகிறார் என்றாலும் அவசரநிலை இறுதியாக அகற்றப்படாதவரை பாகிஸ்தானை மீண்டும் சேர்த்துக்கொள்ளமுடியாது என்பதில் காமன்வெல்த் தீர்மானமாய் இருக்கிறது
  • பாகிஸ்தானை இடைநீக்கும் முடிவை இலங்கை ஆதரிக்கவில்லை
    பாகிஸ்தானை காமல்வெல்த நாடுகள் அமைப்பிலிருந்து இடை நீக்கம் செய்யும் முடிவுக்கு இலங்கை அரசு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
    நேற்று இரவு பாகிஸ்தானை காமல்வெல்த் நாடுகள் அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யும் முடிவை எடுத்த குழுவில் இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகமவும் இடம்பெற்றிருந்தார்.
    அப்போது இந்த முடிவுக்கு ஆதரவாக அவர் வாக்களிக்கவில்லை என்று தெரிகிறது.
  • பேசாலையில் இராணுவத்தினர் புலிகள் இடையில் மோதல் : இலங்கையின் வடமேற்கே மன்னார் பேசாலையில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மோதலில் 17 விடுதலைப் புலிகளும், வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது
  • மத்தியகிழக்கு பற்றிய அமெரிக்க மாநாட்டில் பங்கேற்க சௌதியரேபியா சம்மதம் : அமெரிக்காவின் அன்னாபொலிஸ் நகரில் அடுத்த வாரம் நடத்தப்படவுள்ள மத்தியகிழக்கு பற்றிய மாபெரும் மாநாட்டில் சௌதியரேபியா கலந்துகொள்ளும் என்று அந்நாடு அறிவித்துள்ளது
  • புதிய அதிபரை தெரிவுசெய்ய லெபனான் நாடாளுமன்றம் மீண்டும் தவறியுள்ளது : லெபனானில் புதிய அதிபரை தெரிவுசெய்ய நாடாளுமன்றம் மீண்டும் தவறியிருப்பதால் தலைநகர் பெய்ரூட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது
  • பாக்தாத்தில் குண்டுவெடிப்பு, 13 பேர் பலி: இராக்கிய தலைநகர் பாக்தாத்தில் கடந்த சில மாதங்களாக காணப்படாத கொடிய குண்டுத் தாக்குதல் ஒன்று ஜனநெருக்கடிமிக்க சந்தை ஒன்றில் நடத்தப்பட்டபோது 13 பேர் கொல்லப்பட்டார்கள். பலருக்கு காயம்பட்டது
  • இராக்கிலுள்ள தமது துருப்பினரை திருப்பியழைக்க புதிய போலந்து பிரதமர் திட்டம் : இராக்கில் இப்போது எஞ்சியுள்ள போலந்து படையினரை இவ்வாண்டின் இறுதிக்குள் திருப்பியழைக்க தாம் திட்டமிட்டிருப்பதாக போலந்தின் புதிய பிரதமர் டோனல்ட் டஸ்க் உறுதிப்படுத்தியிருக்கின்றார்
  • இன்றைய (நவம்பர் 23 வெள்ளிக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

November 22, 2007

பாகிஸ்தானில் அடுத்து என்ன? - ஒரு ஆய்வு

பாகிஸ்தானில் எல்லாமே அதிபர் முஷாராஃப் அவர்களின் திட்டப்படிதான் சென்று கொண்டிருப்பது போலத் தெரிகிறது. அங்கு சுதந்திரமாகச் செயற்பட்ட நீதிபதிகள் மாற்றப்பட்டு அவருக்கு இசைவாக செயல்படும் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுளார்கள். நானே தொடர்வேன் என்கிறார் முஷாரஃப்இதன் காரணமாக அவர் மீண்டும் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த சவால்கள் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கு ஏற்பட்டிருந்த உடனடியான அச்சுறுத்தல்களை அவர் புறந்தள்ளியுள்ளார். இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் பதவியில் தொடரும் தனது அபிலாஷையில் அவர் வென்றுள்ளார் என்றுதான் கூறவேண்டும். தான் பதவியில் தொடருவது உறுதியாகியுள்ள நிலையில், பலர் அவரிடம் எதிர்பார்த்த தேவைகளை, சலுகைகளை இறுதியாக அவர் அளிக்கக் கூடிய நிலையில் இருக்கிறார். அதாவது இராணுவத் தலைவர் பதவியை அவர் துறப்பது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரக் கூடும். உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிபர் பக்கம்சரி இவைவெல்லாம் அவரை எங்கே அழைத்துச் செல்கின்றன? அவர் நெருக்கடி நிலையை அமல்படுத்திய போது சர்வதேச கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்கா உட்பட தமக்கு ஆதரவளிக்கும் நெருங்கிய சக்திவாய்ந்த நாடுகளின் கோபத்துகு ஆளானார். இதனிடையே காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் இன்று கூடி காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தானை இடை நீக்கம் செய்வது குறித்து ஒரு முடிவினை எடுக்கவுள்ளார்கள். இந்த நிலையில், தம்மிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் பாதியளவை தாம் நிறைவேற்றியுள்ளதாக அவர் வாதிடக் கூடும். பாகிஸ்தானில் திட்டமிட்டபடி தேர்தல்கள் நடைபெற வேண்டும், அதிபர் முஷாரஃப் இராணுவத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அமெரிக்கா முன்னர் கோரியிருந்தது. இந்த இரண்டும் தற்போது நடைபெறுகின்றன. நெருக்கடியின் கெடுபிடிகள்அங்கு அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளின் போது கைது செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இருந்தபோதிலும் இன்னமும் சில முக்கியமான விடயங்கள் தொடர்பில் கவலைகள் உள்ளன. அங்கு நடைபெறவுள்ள தேர்தல்களின் பிரச்சார காலம் முழுவதும், அடிப்படை அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் எவ்வளது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும்? தேர்தல்களை புறக்கணிக்கப் போவதாகக் கூறுகிறார் புட்டோதமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில், எதிர்கட்சிகள் நடைபெறவுள்ள தேர்தல்களில் பங்கேற்க மறுத்தால், புதிதாக தேர்தெடுக்கப்படவுள்ள நாடாளுமன்றம் எந்த அளவுக்கு சட்டபூர்வ தன்மை கொண்டதாக இருக்கும். உச்சநீதிமன்றத்தில் தன்னால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளே இருக்கும் நிலையில், அவர்களால் அதிபர் மீது எந்த வகையான கட்டுப்பாடுகளையும் கண்காணிப்பையும் விதிக்க முடியும்... இருந்தாலும் கூட தற்போது உள்ள நிலையில் முஷாராஃபே ஆளச் சிறந்தவர் என அமெரிக்கா போன்ற நாடுகள் நினைக்கின்றன. அவர்களுக்கு தேவையான நெகிழ்வுத்தன்மைய அவர் அளிப்பார் என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது. இருந்த போதிலும் அவர்களது அழுத்தங்கள் தொடரவே செய்யும்.
எனினும் அரசியல் சூட்டைத் தணிக்கும் நடவடிக்கையில் அதிபர் முஷாரஃப் வெற்றியடைவார் என்றே தோன்றுகிறது.

இன்றைய குறள்

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்
அறத்துப்பால் : அழுக்காறாமை

காவல்துறை = மனிதாபிமானம்

"போலீஸாரின் சேவை மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும், நேசம் மிக்கதாகவும், ஊழலற்றதாகவும் இருக்க வேண்டும். மக்கள் நலனைக் காப்பதில் மிகவும் பொறுமையோடு சிறப்பாக செயலாற்றி மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். நேரத்துடன் செயலாற்றுவதோடு மனதளவிலும், உடலளவிலும் உறுதியானவர்களாக போலீஸார் செயல்பட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். மனிதாபிமானம் என்பது உயர் அதிகாரிகளிடமிருந்து உருவாகி அது கீழ்நிலை காவலர்கள் வரை தொடர வேண்டும்" - அப்துல்கலாம், முன்னால் இந்திய குடியரசு தலைவர், காவல்துறையின் 150வது ஆண்டு நிறைவுவிழாவில்

முஷாரஃப் காட்டில் மழை

  • முஷாரஃப் அதிபராக மீண்டும் தேர்வுசெய்யப்பட்டதை எதிர்க்கும் இறுதி வழக்கையும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர் : பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃபுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்த நீதிபதிகளை அவர் விலக்கிய பிறகு அமைக்கப்பட்ட புதிய உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள் குழு அவர் மீண்டும் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக தாக்கல்செய்யப்பட்ட இறுதி வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது. இது அவர் இராணுவத் தலைவர் பதவியிலிருந்து விலக அளித்திருக்கும் உறுதிமொழியை நிறைவெற்ற வழிவகுக்கிறது. அவர் இராணுவத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவேண்டும் என்பது அவரது எதிரிகள் மற்றும் பாகிஸ்தானின் மேற்குலக கூட்டணி நாடுகளின் முக்கிய வலியுறுத்தலாக இருந்தது. தமக்கெதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பினை வெளியிடக்கூடும் என்கிற ஊகத்தில் அவர் இந்த மாதத்தின் முற்பகுதியில் அமல்படுத்திய நெருக்கடி நிலை இன்னமும் தொடருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நெருக்கடி நிலையை விலக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்ய விருப்பததாக அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறுகிறார்
  • இராக் மோதல்கள்: முப்பதுக்கும் அதிகமானோர் பலி : இராக்கில் பாதுகாப்புப் படையினருக்கும் அல்கைதா போராளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் முப்பது பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்
  • ஐரோப்பாவில் கொகெய்ன் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது - கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை : கொகெய்ன் போதைமருந்து பயன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர் நாடுகளிலும் வேகமாக அதிகரித்துவருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது
  • ஜிம்பாப்வே விவகாரம்: தென்னாப்பிரிக்கா சமரச முயற்சி : தென்னாப்பிரிக்க அதிபர் தாபோ ம்பெகி ஜிம்பாப்வே சென்றுள்ளார்.
    காமன்வெல்த் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகாண்டா செல்லும் முன்னர் ஜிம்பாப்வே அரசாங்கத்துடனும் எதிர்கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்காக அவர் அங்கு சென்றார்
  • சோமாலியாவில் புதிய இடைக்கால பிரதமர் : நூர் ஹசன் ஹுசைன் சோமாலியாவின் செம்பிறைச் சங்கத்தின் தலைவரான அந்நாட்டின் புதிய இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • தொடரும் மோதல்களில் மேலும் பலர் பலி : இலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறமாகிய முள்ளிக்குளம் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பெய்யும் மழைக்கு மத்தியிலும் இந்த இரு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

November 21, 2007

இன்றைய குறள்

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும் கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்


அறத்துப்பால் : அழுக்காறாமை

பத்மஸ்ரீ கமலின் கவிதை வரிகளில் புல்லரித்துப்போனேன்! நானும் ஒரு தமிழன் என்ற கர்வத்துடன்!!

தராசு சொல்லுகிறது

"நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போல் பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான, உழவனுக்கு வேண்டிய கச்சை வேஷ்டி போலே நெய்ய வேண்டும். 'மல்' நெசவு கூடாது. 'மஸ்லின்' நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையும் இருக்க வேண்டும்" - மகாகவி பாரதியின் 'தராசு' சிறுகதையிலிருந்து

இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை

  • இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது
  • ஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்
  • இராக்குக்குள் மீண்டும் திரும்பும் மக்கள் : இராக்கிற்குள் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் மக்கள் மீண்டும் திரும்ப வந்துகொண்டிருப்பதாக தாங்கள் கணிப்பதாக, இராக்கிய அதிகாரிகள் கூறுகிறார்கள்
  • இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு : வவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்
  • ஷிராக் மீது நிதி முறைகேட்டு விசாரணை : பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபரான ஜாக் ஷிராக் அவர்கள், 1977 முதல் 1995 வரையிலான காலப்பகுதியில், பாரிஸ் நகர மேயராக இருந்த வேளை நகர நிதியை மோசடி செய்தது பற்றிய குற்றச்சாட்டுக் குறித்து முறையான புலன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளனர்
  • தனது போட்டியாளர்களை வெளிநாட்டு அரசுகள் ஆதரிப்பதாக புட்டின் குற்றச்சாட்டு : ரஷ்ய அதிபர் புட்டின் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், தனது அரசியல் எதிரிகளை வெளிநாட்டு அரசுகள் ஆதரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்
  • பெட்ரோலிய விலை அதிகரிப்பு : சர்வதேச அளவிலான பெட்ரோலின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகபட்சமாக ஒரு பீப்பாய் சுமார் நூறு அமெரிக்க டாலர்களைத் தொட இருக்கிறது. நியூயார்க்கில் ஒரு பீப்பாய் பெட்ரோலின் விலை தொண்ணூற்றி ஒன்பது டாலர்கள் மற்றும் ஐம்பத்தி ஒன்பது செண்ட்களைத் தொட்டிருக்கிறது
  • காசாவில் ஆயுதகுழுக்களின் உறுப்பினர்களுக்கு மனித நேயச்சட்டங்கள் பற்றிய பயிற்சி : ஆயுத மோதல்கள் நடைபெறும் இடங்களில் சர்வதேச மனிதநேயச் சட்டங்களை கற்பிக்கும் தனது உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் காசாவில் உள்ள பாலத்தீன ஆயுதக்குழுக்களுக்கான பயிற்சியை ஆரம்பித்துள்ளது

November 20, 2007

சாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசுக்கு பத்மஸ்ரீ கமலின் விழா - 1

இன்றைய குறள்

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்

அறத்துப்பால் : அழுக்காறாமை

சிறந்த மேடைப் பேச்சு என்பதே ஒரு ஏமாற்று வேலை

"சிறந்த மேடைப் பேச்சு என்பதே ஒரு ஏமாற்று வேலை. பேச்சுக்கலை என்பது மகுடி ஊதி மக்களைத் தலையாட்ட வைக்கும் சூழ்ச்சி" - தங்கர் பச்சான்

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்

  • தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது : மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள். இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.
    இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார். இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • உலக எயிட்ஸ் நோயாளர்களின் மதிப்பீட்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது : உலகில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மதிப்பீட்டு எண்ணிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை பெரும் குறைப்பைச் செய்துள்ளது. எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 4 கோடி என்று கடந்த வருடத்தில் கூறியதற்குப் பதிலாக, உலகெங்கிலும் 3.3 கோடிப் பேரே எயிட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக யு என் எயிட்ஸ் நிறுவனம் தற்போது கூறியுள்ளது
  • பாகிஸ்தானில் மூவாயிரம் பேர் விடுதலை : பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்பினால் கொண்டுவரப்பட்ட அவசர நிலையின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் அதிகமானோரை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. மேலும் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் கூறியுள்ளார். ஆனால், தென்பகுதி நகரான கராச்சியில், நெருக்கடி நிலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற சுமார் 150 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
    இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் பலவந்தத்தைப் பிரயோகித்தனர். முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் உறுதி செய்தார். இந்த தேர்தலை புறக்கணிப்பதா, இல்லையா என்பது குறித்து பேனசீர் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கராச்சியில், கூடி கலந்தாலோசித்தனர்
  • ஆப்கானின் செப்புச் சுரங்க ஏலத்தை சீன பெற்றது : ஆப்கானிஸ்தானில் உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஏலத்தை சீன சுரங்க நிறுவனம் ஒன்று வென்றுள்ளது. காபூலுக்கு தெற்கே அய்நக் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த சுரங்கத்தில், சுமார் 300 கோடி டொலர்கள் முதலீடு செய்யப்போவதாக சீன அரசுக்கு சொந்தமான சீனா மெட்டலர்ஜிக்கல் குழுமம் கூறுகிறது
  • பிரான்ஸில் பெரும் வேலை நிறுத்தம் : பிரான்ஸில் ஆயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்கள், வேதனம் தொடர்பாக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது ஓய்வூதிய நலன்களின் வெட்டுச் செய்யும் அரசாங்கத் திட்டத்தை எதிர்த்து ஏழு நாட்களாக போக்குவரத்துத் துறையினர் நடத்தும் போராட்டமும், இந்த வேலை நிறுத்துடன் இணைந்துள்ளது
  • இலங்கையின் வடக்கே மோதல்கள் தொடருகின்றன 25 பேர் பலி : இலங்கையின் வடக்கே நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சண்டைகளில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது
  • இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு : மனித உரிமை மீறல் சம்வங்கள் குறித்து பல்வேறுபட்ட சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் மிகமோசமான 15 மனித உரிமை சம்பவங்களை விசாரித்தறியும் பொருட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடித்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மார்வன் அத்தப்பத்து இளைப்பாறினார் : ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மிகவும் சிறப்பான, நேர்த்தியான துடுப்பாட்ட வீரராகக் கருதப்படும் முன்னாள் அணித்தலைவர் மார்வன் அத்தப்பத்து இன்று தான் இலங்கை சார்பில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து இளைப்பாறுவதாக அறிவித்திருக்கிறார்